(து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிதலால் மெலிந்த தலைவி "சோலை தோறும் குயில்கள் புணர்ந்தீர் பிரியாதீரென்பதுபோலக் கூவா நிற்கும் இவ் விளவேனிற் காலத்திலே பிரிதல் இயல்பென்றால் அறத்தினும் பொருளே அருமையது போலும்" என்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 4) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.
| தேம்படு சிலம்பில் தெள்ளறல் தழீஇய |
| துறுகல் அயல தூமணல் அடைகரை |
| அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப் |
| பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில் |
5 | கவறுபெயர்த் தன்ன நில்லா வாழக்கையிட்டு |
| அகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக் |
| கையறத் துறப்போர்க் கழறுவ போல |
| மெய்யுற இருந்து மேவர நுவல |
| இன்னா தாகிய காலைப் பொருள்வயின் |
10 | பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின் |
| அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே. |
(சொ - ள்.) தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய துறுகல் அயல தூ மணல் அடை கரை - தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தெளிந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் பொதும்பு தோறு அல்கும் - அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; பூங் கண் இருங்குயில் கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கைஇட்டு - சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; அறிவு உடையீர் அகறல் ஓம்புமின் - "அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!"; எனக் கையறத் துறப்போர்க் கழறுவபோல மெய் உற இருந்து மே வர நுவல - என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல்