(து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் சிலபொழுது வாராமையாலே தலைமகள் கவலையால் வாடியதறிந்த தோழி இதனைத் தமர்க்கு அறிவுறுத்தி வரைவெதிர் கொள்ளுவிப்பலெனக் கருதுதலும் அதனை யறிந்த தலைவி தோழியை நோக்கி என்னுடம்பிலுள்ள அழகைக் கெடுத்த பசலையை நீ கண்டு வைத்தும் நாடனுக்கு உரைத்தலாவது அன்னைக்கு இது தணியும் வகையை யுரைத்தலாவது செய்தாயல்லையே யென்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு,
| "உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் |
| செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் |
| தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு |
| காமக் கிழவ னுள்வழிப் படினும் |
| தாவி னன்மொழி கிழவி கிளப்பினும் |
| ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே" ( தொல். கள. 11) |
என்னும் விதி கொள்க. இது தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.