(து - ம்.) என்பது, இரவுக்குறிவருந் தலைமகனைத் தோழி நெருங்கி. 'நாடனே! எம்மை அருளாயாகிச் சிறுநெறியிலே சிங்க முதலாயின இயங்குதலறிந்து வைத்தும் நடுயாமத்தில் வாராநின்றனை; இதற்கு யான் வருந்துகின்றேன்' என இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனிநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.
| விளிவில் அரவமொடு தளிசிறந்து உறைஇ |
| மழையெழுந்து இறுத்த நளிர்தூங்கு சிலம்பின் |
| கழைஅமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு |
| இலங்குவெள் அருவி வியன்மலைக் கவாஅன் |
5 | அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் |
| பொன்மருள் நறுவீ கன்மிசைத் தாஅம் |
| நன்மலை நாட நயந்தனை அருளாய் |
| இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறுநெறிக் |
| கடுமா வழங்குதல் அறிந்து |
10 | நடுநாள் வருதி நோகோ யானே. |