(து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகன் நன்கு மதித்து விரைந்து வரைதல் காரணமாகச் சேட்படுக்குந் தோழி அவனை நெருங்கி, நீ காதலித்த இளமகள் தான் பருக வெடுத்த பாலைக் குரங்கின் குட்டி பறித்ததனால் அழுதலிற் கண்கள் நீர்நிரம்பிய நீலம்போன்றன; வயிற்றின் அறைந்து கோடலின் கைவிரல்கள் காந்தளிதழ் போன்றன; இவ்வளவு அறியாமையுடையாள் நினது துயரை எவ்வாறு போக்குமென அவளது பேதைமை காட்டி மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேதைமை யூட்டலும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
துறை : (2) காப்புக் கைமிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.
(து - ம்,) என்பது, இல்வயிற் செறித்துக் காவலோம்பிய பொழுது வருந்திய தலைவியை வினாவிய தோழிக்கு, அவள் இன்ன காரணத்தால் கண் நீலமொத்தன விரல் காந்தளொத்தன வென்று கூறாநிற்பதுமாகும்.
(இ - ம்.) இதற்கு, "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| புன்தலை மந்திக் கல்லா வன்பறழ் |
| குன்றுழை நண்ணிய முன்றில் போகாது |