71-80

71. பாலை
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
கல் கெழு கானவர் நல்குறு மகளே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது -கருவூர் ஓதஞானி

72. குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!

தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார்

73. குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.

பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர்

74. குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.

தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார்

75. மருதம்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்!-
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?

தலைமகன் வரவுணர்த்திய பாணற்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார்

76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண் வரல் வாடை தூக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.

பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலம்கிழார்

77. பாலை
அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளே.

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

78. குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!-
நோதக்கன்றே-காமம் யாவதும்
நன்று என உணரார்மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.

பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார்

79. பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது ஏகல் வல்லுவோரே.

பொருள்வயின் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன்

80. மருதம்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையளாயின், வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார்