177


(18) தொண்டிப் பத்து


177. தவறில ராயினும் பனிப்ப மன்ற
   இவறுதிரை திளைக்கு மிடுமண னெடுங்கோட்டு
   முண்டக நறுமலர் கமழும்
   தொண்டி யன்னோ டோளுற் றோரே. .

  எ-து தலைமகளும் தோழியும் ஒருங்குநின்றுழி, ‘இவள் என்னை
வருத்துதற்குச் செய்த தவறு என்?’ என்று வினாய தலைமகற்குத்
தோழி நகையாடிச் சொல்லியது.

  (ப-ரை.) இதன் இறைச்சி : நீரறா நிலத்து முண்டகநறுமலர்
கமழும் தொண்டி யன்னோளென்றது இவள் நாமணுகி நுகர்தற்
கரியள் எ-று ‘தோளுற்றோர்’ என்றது தோளை எதிர்ப்பட்டோர்
எ-று.

  குறிப்பு. தவறிலராயினும்-தவறு இழைத்திலரானாலும், பனிப்ப-
நடுங்குவார். மன்றப்பனிப்ப. இவறுதிரை-உலாவுகின்ற அலை. இடுமணல் நெடுங்கோட்டு-குவித்த மணல்மேட்டின் உச்சியின்கண்.
முண்டக நறுமலர்-கழிமுள்ளிச் செடியின் வாசனை பொருந்திய மலர்.
தொண்டியன்னோள் : தலைவி. தோளுற்றோர்-தோளை யெதிர்ப்
பட்டோர். உற்றோர் தவறிலராயினும் பனிப்ப.

   நீரறா நிலத்து முண்டகம் என்றது நீரில் உள்ளமையால் அம்
முண்டகத்தின் அருமை கூறியவாறு.    ( 7 )