துறை : வாகை வண்ணமும் தூக்கும் அது. பெயர் : தொழில் நவில் யானை. 1 - 7. எடுத்தேறு...................முன்ப . உரை : எடுத்தேறு ஏய - படை யெடுத்து முன்னேறிச் செல்லுமாறு வீரரை யேவுகின்ற ; கடிப்புடை அதிரும் முரசம் கண்ணதிர்ந்தாங்கு - குறுந்தடியால் புடைக்கப்படுவதால் முழங்கும் தோலாற் போர்த்தலுற்ற முரசமானது கண்ணிடத்தே குமுறி முழங்குவது போல; கார்மழைமுழக்கினும் - கார் காலத்து முகிலானது முழங்கினாலும்; வெளில் பிணி நீவி - கட்டுத் தறியை வீழ்த்துக் கட்டறுத்துக்கொண்டு ; நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை - நெற்றியை மேலே நிமிர்த்தெழும் போர்த்தொழிலில் நன்கு பயிற்சியுற்ற யானைப்படை ; பார்வற் பாசறைத் தரூஉம் பகைவரைப் பார்த்தற்குரிய அரணமைந்த பாசறையிடத்தை வந்தடையும் ; பல் வேற் பூழியர் கோவே - பல வேற்படையினைத் தாங்கும் பூமி நாட்டவர்க்கு அரசே ; பொலந்தேர்ப் பொறைய - பொன்னானியன்ற தேரையுடைய சேரமானே ; மன்பதை சவட்டும் கூற்ற முன்ப - பகைத்த மக்களைக் கொல்லும் கூற்றுவன் போலும் வலியுடையோனே எ - று. எடுத்தேறேய முரசம், போர்ப்புறு முரசம் என இயையும் . வேந்தன் எடுத்துச் செலவினைக் குறித்தவழி, வீரர்க்கு முரசு முழக்கித் தெரிவிக் கப்படுவது பற்றி, “எடுத்தேறேய முரசம்” என்றும், கடிப்பு கொண்டு அறைவதனால் முழங்குதலின், “கடிப்புடை யதிரும் முரசம்” என்றும், தோலாற் போர்க்கப்பட்ட தென்றற்குப் “போர்ப்புறு முரச” மென்றும் கூறினார். கடிப்பு, கடியென்றும், புடைத்தல் புடையென்றும் நின்றன. புடை : முதனிலைத் தொழிற்பெயர்; புடையாலென மூன்றாவது விரித்துக்கொள்க. பழையவுரைகாரரும், “கடிப்பென்பது கடியெனக் கடைக்குறைந்த’ தென்றும், “புடையானென உருபு விரிக்க” என்றும் கூறுவர் . முரசின் போர்ப் புறுவாய் கண்ணிற் கருவிழிபோல் வட்டமாகக் கரிய மை பூசப்பெற்றுக் குமுறி யதிர்வதுபோலும் ஓசை யெழுப்பவல்லதாகலின், “கண்ணதிர்ந் தாங்கு” என்றார். கண்போறலின், கண்ணெனப்பட்டது ; வடிவு பற்றிய உவமம் . முரசம் கண்ணதிர்ந்தார்ங்குக் கார்மழை முழக்கினும் என்க. மழை முழக்கம் கேட்ட துணையானே முரசு முழக்கமென நினைந்து வெளில் பிணி நீவிப் பாசறை நோக்கிச் செல்லும் யானை, முரசம் போர் குறித்து முழங்குமாயின் எத்துணை மறங்கொண்டு செல்லுமென்பது சொல்லவேண்டா வென்பது கருத்து . இனிப் பழைய வுரைகாரர், “முழக்கினுமென்ற உம்மை, முரசினது கண்ணின் அதிர்ச்சியிலே யன்றி அதனோடொத்த மழை முழக்கினும் என எச்சவும்மை” யென்பர். துதிக்கையை யுயர்த்து நெற்றியை மேலே நிமிர்த்துப் போர்வெறி கொண்டு மறலும் யானையின் செயலை, “நுதலணந்து எழுதரும்” என்றார். முரசு முழக்கங் கேட்டதும், வெளிலிடத்தே பிணிக்கப்பெற்றிருக்கும் பிணிப்பினை யவிழ்த்து விடுத்தற்குட் கழியும் காலத்தி னருமையையும், அதனால் விளையும் கேட்டினையும் நுனித்துணர்ந்து ஒழுங்கு குலையாது போர்க்குரிய செயல் மேற்கொண்டு பாசறை நோக்கித் தானே செல்லும் சால்புடைமையை விதந்து, “தொழில் நவில் யானை” யெனச் சிறப்பித்தமையால், இப்பாட்டு இப்பெயர் பெறுவதாயிற்று . இனிப் பழையவுரைகாரர், “தொழில் நவில் யானை யென்றது போர்க்குரிய யானையென்று எல்லாரானும் சொல்லப்படுகின்ற யானை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானும் முன்னின்ற அடைச் சிறப்பானும் இதற்குத் தொழில் நவில் யானை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். முன்னே “வினை நவில் யானை” (பதிற். 82) என்றதற்குக் கூறியவுரை காண்க. பிறர் தம்மைக் காணாது தாம் பிறரைக் காணத்தக்க வகையில் போர்வீரர் இருந்து பகைவரைப் பார்க்கும் இடம் பார்வலெனப்படும். பார்வல் : பார்வை ; ஆகுபெயரால் இடம் குறித்து நின்றது. பாசறைக் கட்டங்கிப் பகைவரது அணி நிலையின் மென்மையும் இடமும் காலமும் பிறவும் நோக்கிப் பொருதல் வேண்டுமாதலின், “பார்வற் பாசறை” யென்றும், கார் முழக்கினைக் கேட்டுப் போரெனக் கருதிச் செல்லும் யானைக்குப் பாசறை யின்றாயினும், பாசறை பண்டமைத்திருந்த இடத்தை யடைகின்றதென வுணர்க. இனிப் பழையவுரைகாரர், இப்பார்வற் பாசறையைப் பகைவர தாக்கி, லெளில் பிணி நீவிச் செல்லும் தொழில் நவில் யானை அப்பாசறைக்குட் சென்று, பகைவரைத் தாக்கி அவருடைய யானைகளைக் கொணரும் என்பார், “பார்வற் பாசறை யானை தரூஉம் என மாறிக் கூட்டி மாற்றாரது காவற் பாசறையிற் புக்கு அவ்யானைகளைக் கொண்டு போதுமென்றவா” றென்பர். பூழியர், வேலேந்திச் செய்யும் போரில் சிறந்தவ ரென்றற்கு, “பல்வேற் பூழியர் கோவே” என்றார் போலும். பூழியர், பூழிநாட்டவர். பூழி நாடு, பாண்டிநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாடு. இதனால், இது பாண்டியர்க்கும் சேரர்க்கும் மாறி மாறி நின்றமை தோன்ற, இவ்விரு பெருவேந்தரும் சான்றோரால் அவ்வக் காலங்களில் “பூழியர்கோ” எனப்படுவதுண்டு. மன்பதை, மக்கட்டொகுதி ; ஈண்டுப் பகைவர் மேற்று. கூற்றுவனால் வெல்லப்படாத உயிர் நிலவுலகில் யாதும் இல்லையாதலின், பெருவலிக்குக் கூற்றுவன் எல்லையாயினான். “மருந்தில் கூற்றத் தருந் தொழில்” “கூற்று வெகுண்டன்ன முன்பு” (புறம். 342) என்று சான்றோர் கூறுப. கூற்றுவன் வெலற்கரியன் என்பதை, “கீழது நீரகம் புகினும் மேலது, விசும்பின் பிடர்த்தலை யேறினும் புடையது, நேமிமால்வரைக் கப்புறம் புகினும், கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து, மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே” (ஆசிரிய) என்பதனாலறிக. சவட்டுதல், உருவழித்தல். 8 - 14. கொடி................உரைஇ. உரை : கொடி நுடங்கு ஆர் எயி்ல் எண்ணு வரம்பு அறியா - கொடிகள் அசைகின்ற வெல்லுதற்கரிய மதில்களை யெண்ணின் எல்லை காணப்படாத அருமை யுடையவாயின ; பல் மா பரந்த - பலவாகிய மாவும் களிறும் பரந்திருக்கின்றன ; புலம் ஒன்று என்றும் எண்ணாது - ஆதலால் நின்னொடு கொள்ளுதற்கரியதொன்று என எண்ணாது பொருதபடியால்; வலியையாதல் நன்கு அறிந்தனராயினும் - நீ மிக்க வலியுடையையென்பதைத் தெளிய அறிந்துவைத்தும் ; வணங்கல் அறியார் - நின்னை வணங்கி வாழ்தலால் வரும் ஆக்கமறியாது மானமொன்றே கொண்டு ; உடன்றெழுந் துரைஇ - மாறுபட்டெழுந்து தம் தானை வெள்ளம் பரந்து வர வந்து ; நின் உடற்றியோர் - நின்னோடு பொரும் பகைவர் ; வார் முகில் முழக்கின் நீண்ட மழை முகிலின் முழக்கம்போல ; மழ களிறு மிகீஇ - இளங்களிறு மதஞ் செருக்கிப் பிளறிக்கொண்டு வர ; தன்கால் கவர் - அதன் காற் கீழ் அகப்பட்ட ; முளை மூங்கிற் கிளை போல - புதிதாக முளைத்த இளைய மூங்கிலின் கிளையாகிய முளை போல ; உய்தல் யாவது - உயிருய்தல் ஏது ; இல்லையென்றவாறு. எயில் எண்ணுவரம்பறியா ; மா பரந்த ; புலம் ஒன்றென் றெண்ணாது பொருது தோற்று வலியை யாதல் நன்கு அறிந்தனராயினும், வணங்கல் அறியார் மானமொன்றே கொண்டு, உடன்றெழுந்துரைஇ நின் உடற்றியோர் உய்தல் யாவது என இயையும். கொடியென வாளாது கூறினமையான், செருப் புகன்றெடுத்த கொடி யென வறிக. அதனைக் காணுந்தோறும் பகைவர்க்குச் சினத்தீ மிகுமாயினும், அது நின்ற மதிலைக் கோடற்கு எண்ணுங்கால், மதிலின் உயர்வு அகலம் திண்மை அருமை முதலிய நலங்கள் வரம்பின்றியிருத்தல் தோன்றுதலின், “ஆரெயில் எண்ணு வரம்பறியா” என்றும், காண்பார் கட்புலன் சென்ற அளவும் மாவும் களிறும் பரந்து தோன்றுதலால், “பன்மா பரந்த” என்றும், இவ்வாற்றால் நின்னாடு பகைவர் கொளற் கரிதென்பது நன்கு அறியக் கிடப்பவும், அறியாது பொருது தோல்வி யெய்தின ரென்றற்கு, “புலம் ஒன்றென்றெண்ணா” தென்றும், தோல்விக் கண்ணும் முன்புதாம் அறியாதிருந்த நின் வலியை நன்கு அறியும் பேறுபெற்றன ரென்றற்கு, “வலியையாதல் நன்கறிந்தன” ரென்றும், அவ்வறிவிற்குப் பயன் நின்னை வணங்கி வாழ்தலாகவும், அதை நினையாது மானமொன்றே கருதித் தம் படை முழுதும் திரட்டிக்கொண்டு போந்து பொருத லெண்ணினரென்றற்கு, “ஆயினும் வணங்கலறியார் உடன்றெழுந் துரைஇ நின் உடற்றியோர்” என்றும், மதஞ் செருக்கிப் பிளிறிவரும் இளங்களிற்றின் காற்கீழ் அகப்பட்ட மூங்கில்முளை மீளவும் தலையெடா வண்ணம் அழிவதன்றி வேறில்லையாதல்போல, நின்னால் அழிக்கப்படும் பகைவேந்தர் குலத்தோடும் கெடுவது ஒருதலை யென்பார், “மழகளிறு மிகீஇத் தன் கால் முளை மூங்கிற் கவர்கிளைபோல உய்தல் யாவது” என்றும் கூறினார் . ஏற்புடைய சொற்கள் இசை யெச்சத்தால் வருவிக்கப்பட்டன. மழகளிற்றின் முழக்கிற்கு முகிலின் முழக்கு உவமமாயிற்று ; சேரனது எடுத்துச் செலவுக்குக் களிற்றின் செலவு உவமமாயிற்று ; ஆகவே அடுத்துவர லுவமையின்மை யறிக . யானையின் காற்கீ ழகப்பட்ட முளை யழியுமாற் றினை, “கழைதின் யானைக் காலகப்பட்ட, வன்றிணி நீண் முளை போலச் சென்றவண் வருந்தப் பொரேஎ னாயின்” (புறம் . 73) என்பதனாலு மறிக . பழையவுரைகாரர், “முளை மூங்கிற் களிறு கால்கவர் கிளைபோல நின் உடற்றியோர் உய்தல் யாவது என மாறிக்கூட்டி முளையான மூங்கிலிற் களிறு காலால் அகப்படுத்தப்பட்ட கிளையுய்யாதன்றே ; அஃது அழிந்தாற்போல நின்னை யுடற்றியோர் உய்தல் கூடாதென வுரைக்க” என்பர் . கவர்தல் - அகப்படுத்தல். 15 - 24. போர்ப்புறு................................தாங்கே . உரை : போர்ப்புறுதண்ணுமை ஆர்ப்பெழுந்து நுவல -தோலாற் போர்க்கப்பட்டுள்ள தண்ணுமையின் ஓசை யெழுந்து போர் செய்தல் வேண்டுமென்று வீரர்க்குத் தெரிவிப்ப ; நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து - உயிர்கட்குச் சாதற் றுன்பத்தைச் செய்யும் தொழிலாகிய போர் செய்தற்கமைந்த வேற்படை நெருங்கும் போர்க்களத்தே;முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு - போரை விரும்பும் நிலத்தில் வீழ; காஞ்சி சான்ற செரு பல செய்து - நிலையாமை யுணர்வே சிறக்க அமைந்த போர்கள் பல செய்து மேம்பட்டதனால் ; மாரி காலை பெய்து தொழிலாற்றி வி்ண்டு முன்னிய புயல் - மழையை உரிய காலத்திற் பெய்து உழவுத்தொழிலை இனிது நிகழப்பண்ணி மலையுச்சியை யடைந்த மழை முகில் ; நெடுங்காலை நெடுங்காலம் பெய்யாதிருந்து ; கல் சேர்பு மாமழை தலைஇ மலையை யடைந்து மிக்க மழையைப் பெய்ததால் ; பல் குரற் புள்ளின் ஒலி எழுந்தாங்கு - பலவேறு குரலோசையையுடைய பறவைகளின் ஒலி எழுந்தது போல; குவவுக் குரை நின் இருக்கை திரண்ட ஆரவாரத்தையுடைய நின் படை யிருக்கையை ; இனிது கண்டிகும் - இனிது காணாநின்றேம் எ - று. போர்நேர்ந்த காலத்தே வீரரிடை இயம்பும் இசைக்கருவி அவரைப் போர்க்கு ஏவும் கருத்திற்றாதலின், “எடுத்தேறேய முரசம்” என்றாற்போல, “போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து” “இசைக்க” என்னாது “நுவல” என்றார். உயிர்கட்கு இறுதியை விளைவி்க்கும் செயலாதலின்,போரை “நோய்த்தொழில்” என்றார். வேற்படை முதலிய படைகள் மிடைந்து கடல்போலத் தோன்றலின், போர்க்களம் “அழுவம்” எனப்பட்டது. அழுவம், ஆழ்ந்த இடம் ; ஈண்டுக் கடலின் மேற்று. “போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” (புறம். 31) என்றாற்போல, இவர், “முனைபுகல் புகல்வு” என்றார். மாறாமைக் கேது புகற்சியாதலின், “புகல்வின் மாறா மைந்தர்” என்றார். இவர் பகைப்புறத்து வீரர். வேலிற்பட்டு வீழும் களிற்றுக்கு உருமெறிவரை யுவமமாயிற்று. யாக்கை முதலியவற்றின் நிலையாமையை நன்குணர்ந்த “சான்றோர் கூடிச் செய்யும் அறப்போர் என்றற்குக் “காஞ்சி” சான்ற செரு” என்றார். பழையவுரைகாரரும், “நுவல வென்றது படையை யுற்றுப் போர் செய்க வென்று சொல்லவென்றவா” றென்றும், “நோய்த் தொழில் மலைந்த வென்றது நோய்த் தொழிலாகிய போரை ஏறட்டுக் கொண்ட என்றவா” றென்றும், “வேலீண்டழுவ மென்றது, மாற்றார் படைப்பரப்பினை” யென்றும், “காஞ்சி சான்ற வென்றது, நிலையாமை யமைந்த என்றவா” றென்றும், “செருப்பல செய்து குரைத்தவென முடிக்க” என்றும் கூறுவர். குவவென்றதை அவர் படைக்குழாம் என்பர். பண்டு உரிய காலத்தே பெய்து உழவு முதலிய தொழில்கள் இனிது நடை பெறுவித்த மழை அக்காலம் வருங்காறும் அமைந்திருந்து வந்ததும் மழையைத் தப்பாது பொழிதலின், அதனை யெதிர் நோக்கியிருந்த புள்ளினமனைத்தும் ஆரவாரிப்பது போலும் ஆரவாரத்தையுடைத்து நின் படையிருப்பு என்றதனால், பண்டு எதிர்ந்த வேந்தரைப் பொருது பெற்ற வெற்றிச் சிறப்பு, நெடுங்காலம் பாரின்மையின் இல்லாதிருந்து இப்போது நேர்ந்ததும் அதனைப் பெற்று ஆராவாரிக்கின்ற தென்றாராயிற்று. பழைய வுரைகாரர், “காலைமாரி” யென்றது மாரியிற் பெய்யும் பெயலினை” யென்றும், “தொழிலாற்றி யென்றது உழவுத் தொழில் முதலாய தொழில்களைச் செய்வித்” தென்றும், “கல்சேர்பு மாமழை தலைஇ யென்றது, பண்டு ஒரு காலம் பெய்து ஆற்றி, வரைக்கட் போயின புயல், நெடுங் காலம் பெய்யாத நிலைமைக்கண்ணே பின்பு பெய்வதாகக் கல்லைச் சேர்ந்து மழை பெய்ய என்றவா” றென்றும், “தலைஇ யென்பதனைத் தலையவெனத் திரிக்க” என்றும் கூறுவர். இதுகாறுங் கூறியது, “கார்மழை முழக்கினும் வெளில் பிணி நீவி நுதலணந் தெழுதரும் யானை தரூஉம் பல்வேற் பூழியர் கோவே, பொறைய முன்ப ; எயில் எண்ணு வரம்பறியா மாபரந்த ; அதனால் புலம் அரியதொன்றென் றெண்ணாது பொருதழிந்து வலியையாதல் நன்கறிந்தனராயினும், அறியார் உடன்றெழுந்துரைஇ நின் உடற்றியோர் உய்தல் யாவது ? என்னெனில், தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல, மைந்தரோடு களிறு நிலம் சேரக் காஞ்சி சான்ற செருப்பல செய்து வென்றி மேம்பட்டதனால், புள்ளின் ஒலி யெழுந்தாங்குக் குவவுக் குரையிருக்கை இனிது கண்டிகும்” என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “பூழியர் கோவே, பொறைய, முன்ப, பகைப்புலத்து ஆரெயில்கள் எண்ணுவரம்பறியா ; பன்மா பரந்தன ; ஆகையால் பகைப்புலம் நமக்கு வெலற்கரிய தொன்றென் றெண்ணாது நீ ஆண்டு வல்லுநையான படியை முன்பு அறியாது நின்னை உடற்றியோர் இன்று போர் செய்து அதனை அறிந்தாராயினும் அவர் நின்னோடு உடன்று எழுந்து உரைஇ அதனையே பின்னும் அறிவதல்லது நின்னை வணங்கல் அறிகின்றிலர் ; இனி அவர்முளை மூங்கிலிற் கால்கவர் கிளைபோல அழிவதல்லது உய்யவும் கருதுவது யாவது ? நெடுங்காலம் பெய்யாத மழை பெய்தவழிப் பல குரலையுடைய புள்ளின் ஒலி யெழுந்தாற்போல நெடுங்காலம் போர் செய்யாது நின்று அவ்வுடற்றியோர் வேலீண்டழுவத்துச் சான்ற செருப்பல செய்து நின் பல படைக்குழாம் ஆரவாரிக்கின்ற இருப்பினை யாம் இனிது கண்டேம் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “உடன்றெழுந்துரைஇ வணங்கலறியார் என்பது அறிந்தனராயினும் என்பதன் பின் நிற்க வேண்டுதலின் மாறாயிற்று” என்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது; அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” |