முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
85.



நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென
 5




முன்றிணை முதல்வர் போல நின்று
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச்
சூடா நறவி னாண்மகி ழிருக்கை
அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய
 10



மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற வூரினும் பலவே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நாடுகா ணெடுவரை
(7)

     (ப - ரை) 3. ஒன்னாப் பூட்கை - பிறர்க்கு அப்படிச்செய்யப்
பொருந்தாத மேற்கோள். சென்னியர் பெருமானை யென்பதனுள்,
1இரண்டாவது விகாரத்தால் தொக்கது.

     4. முத்தைத் தம்மென - முன்னே தம்மினென; 2முந்தை
முத்தையென வலித்தது.

     முதல்வர்போல (5) அறம் புரிந்து வயங்கிய (9) என முடிக்க.

     9-10. அறம்புரிந்து வயங்கிய கொள்கையென்னாது மறம்புரி
யென்றது அறத்திற்கு இடையீடுபட வருவழி அதனைக் காத்தற்கு
அவ்வறக்கொள்கை மறத்தொடு பொருந்துமென்றதற்கு.

     7. நாடுகாண் நெடுவரையென்றது தன்மேல் ஏறி நாட்டைக்
கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய 3ஓக்கமுடைய மலையென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, ‘நாடுகாணெடுவரை’ என்று
பெயராயிற்று.

     8. 4சூடாநறவு : மதுவிற்கு வெளிப்படை.

     கொள்கையைப் (10) பாடிய (12) என இரண்டாவது விரித்து
முடிக்க.

     5நனவிற் பாடிய (12) என்றது வயங்கிய செந்நாவினாலும் (10)
உவலை கூராக் கவலையில் நெஞ்சினாலும் (11) மெய்ம்மையாற்
பாடிய (12) என்றவாறு.

     கபிலன் (13) என்ற தொடைக்கேற்ப, நவிலப்பாடிய (12)
என்பதூஉம் பாடம்.

     இளஞ்சேரலிரும்பொறை, சென்னியர்பெருமானுடைய (3)
நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டுதந்து (1)
அச்சென்னியர்பெருமானை (3) எம்முன்னே பிடித்துக்கொண்டு வந்து
தம்மினெனத் தம் படைத் தலைவரை ஏவச் சென்னியர்பெருமான்
படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல்
செல்வக்கடுங்கோவாழியாதனென்பவன் (4) நாடு காணெடுவரையின்
(7) நாண்மகிழிருக்கைக்கண்ணே (8) தன் முன்றிணை
முதல்வரைப்போல (5) அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய (9)
மறம்புரி கொள்கையைப் (10) பாடின (12) கபிலன் பெற்ற ஊரினும்
பல (13) என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.

     சென்னியர்பெருமானைத் தம்மென மாறவேண்டுதலின்
மாறாயிற்று.

     இனிப் பிறவாறு மாறிப் பொருளுரைப்பாரும் உளர்.

     இதனாற் சொல்லியது அவன் முன்னோருடைய
கொடைச்சிறப்பொடு படுத்து அவன் வென்றிச்சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-4. சேரன் தன் படையாளருக்குக் கூறியது.

     1. நல்ல மரங்கள் நிறைந்த நாடுகள் பலவற்றை எமக்குக்
கொண்டு தந்து. 2. பொன்னாற் செய்யப்பட்டு விளங்கும்
அலங்கரிக்கும் தொழில் விளங்கும் பேரணிகலங்களை அணிந்த.
4. தம்: தாருமென்பதன் விகாரம் (பொருந. 101, ந.)

     3-4. எம்மொடு பொருந்தாத மேற்கோளையுடைய சோழர்
தலைவனை எம்முன்னே தாருங்களென்று நீ சொல்ல, நின்படையாளர்
முன் சோழன் படையாளர் தோற்றுப் போட்ட வெள்ளிய வேல்கள்.
ஒன்னா: ஒன்றாவென்பதன் மரூஉ. முத்தை : முந்தை என்பதன்
வலித்தல் விகாரம்; “முத்தை முதல்வி யடிபிழைத் தாயெனச், சித்திர
முரைத்த விதூஉந்திப்பியம்” (மணி. 19 : 13-4). படையைப் போடுதல்
தோல்விக் குறிப்பு.

     5. தனக்கு முன்னிருந்த தன் குலத்து முன்னோர்களைப் போல
நிலை பெற்று (பதிற். 72 : 4). மு. பதிற். 14 : 20.

     நின்று (5) பணிய வயங்கிய (9) கொள்கை (10) என இயையும்.

     7. நாடுகாணெடுவரை : “நாடுகா ணனந்தலை” (மலைபடு.
270); பெருங். 2. 10 : 70 - 74. 6 - 7. இனிய நீரையுடைய சுனைகள்
நிலை பெற்ற மலைவளத்தையுடைய, பெரிய பக்கங்களைப் பெற்ற
சிகரங்கள் பல ஆகாயத்தே விரிந்த, தன்மீது ஏறி நாடுமுழுவதும்
காணக்கூடிய உயர்ச்சியைப் பெற்ற நன்றாவென்னும் மலையிடத்தில்.

     8. சூடப்படாத நறவினையுடைய. விடியற்காலத்தே யிருக்கும்
ஓலக்க விருப்பில் ; சூடாநறவு : மதுவிற்கு வெளிப்படை ;
“சூடாநறவொடு காமம் விரும்ப” (பரி. திரட்டு. 1 : 56)

     9-10. அரசவைகள் பணியும்படி அறத்தையே விரும்பி
விளங்கிய, வீரத்தை விரும்பிய கொள்கையை, விளங்குகின்ற
செவ்விய நாவினாலும்,

     நாவிற் (10) பாடிய (12) என இயையும்.

     11. இழிவு மிகாத கவலையில்லாத மனத்தாலும் ; உவலை -
இழிவு: “உவலைச் சமயங்கள்” (திருவா.) “சிறுமனிச ருவலையாக்கை”
(திருவாய்மொழி 1. 5 : 8)

     12-3. மெய்ம்மறையாற் பாடிய நல்லிசையையுடைய
கபிலனென்னும் புலவர் பெற்ற ஊரினும் பல ஆகும். நல்லிசைக்
கபிலன்: “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறநா. 53 : 12).
கபிலன் பெற்ற ஊரென்றது செல்வக் கடுங்கோ வாழியாதன் நன்றா
வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம்
காட்டிக்கொடுத்த ஊர்களை.

     இட்டவேல் (4) ஊரினும் பல (13) என முடிக்க. பகைவர் இட்ட
வேல் இன்ன பொருளினும் பல வென்றல்: “இன்முகங் கரவா
துவந்துநீ யளித்த, அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க் குடகட
லோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே”
(புறநா. 130 : 4 - 7)
                         (5)


     1உயர்திணைப் பெயரிடத்து ஒழியாது வரவேண்டுமென்பது
விதியாதலின் இங்ஙனம் கூறினார்.

     2இட்டவென்பதற்கேற்ப வலித்தல் விகாரம் பெற்றது.
     3ஓக்கம் - ஓங்குதல் : மலைக்குரிய ஓங்கலென்னும்
பெயர்ப்பொருள் இங்கு அறியத்தக்கது.

     4சூடப்படும் நறவம்பூவும் உண்மையின் சூடாநறவு மதுவிற்கு
ஆயிற்று.

     5நனவு - மெய்ம்மை (புறநா. 41 : 11, உரை)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5. நாடுகா ணெடுவரை
 
85.நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென
 
5முன்றினை முதல்வர் போல நின்று
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச்
சூடா நறவி னாண்மகி ழிருக்கை
அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய
 
10மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற வூரினும் பலவே.
 

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : நாடுகா ணெடுவரை.

 1 - 4. நன்மரம்...............தம்மென.

உரை :  நல்மரம்   துவன்றிய  நாடு பல தரீஇ - நல்ல மரங்கள்
செறிந்த  நாடுகள்  பலவற்றையும்  வென்று  தந்து  ; பொன் அவிர்
புனைசெயல்  இலங்கும்  பெரும்பூண்  -  பொன்னாலியன்ற அழகிய
வேலைப்பாடமைந்து  விளங்கும்  பேரணிகலன்களையும்  ; ஒன்னாப்
பூட்கை  - நம்மொடு  பொருந்தாது பகைத்த மேற்கோளையுமுடைய ;
சென்னியர்    பெருமான்    -    சோழர்களுக்குத்   தலைவனான
வேந்தனையும்  பற்றி  ; முத்தை தம்மென - என் முன்னே கொண்டு
தருவீராக  என்று  நீ நின் தானை வீரர்க்குச் சொன்னது கேட்டதும் ;
இட்ட வெள்  வேல் - சோழனுடைய படைவீரர் தோல்விக் குறியாகக்
கீழே எறிந்த வேல்கள் எ - று.

தத்தமக்குரிய பருவத்தே தப்பாது பழுத்து நல்ல பயன் கொடுக்கும்
மரங்களென்றற்கு,    “நன்மரம்”    என்றார்.   நன்மரம்  துவன்றிய
நாடெனவே,    எல்லார்க்கும்   பயன்படும்   வளன்மிக   வுடைமை
கூறியவாறாயிற்று.     சோழவேந்தன்     தன்னொடு     பகைத்துக்
கொண்டதனால்       பொருந்தானாயினும்       பொன்னானியன்ற
பேரணிகலன்களை யுடையனாதலை  யறிந்து கூறுவான், “பொன்னவிர்
புனைசெயல்  இலங்கும்  பெரும்பூண்”  என்றான். என்றது,  இவ்வாறு
அவன்    பொற்பணி   பூணுதற்குரியனே    யன்றிப்    போருடற்றி

வெற்றிமாலை     பெறுதற்குரிய     னல்லனென     இகழ்ந்தவாறு.
ஒன்னார்க்குரிய  பூட்கை,  ஒன்னாப்பூட்கை  யென  வந்தது.  ஒன்றா
என்பது   ஒன்னாவென   மருவிற்று  என்றுமாம்.  பழையவுரைகாரர்,
“ஒன்னாப் பூட்கை யென்றது, பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத
மேற்கோள்”   என்பர்.   “பொன்னவிர்  புனை   செயல்  இலங்கும்
பெரும்பூண்”,   சோழ  வேந்தராகிய  தமக்கன்றிப்  பிறர்க்குரித்தன்று
என்னும்   பூட்கையுடைய   ரென்றும்,   அதனால்  ஒன்னாப்பூட்கை
யென்றது,     “பிறர்க்கு     அப்படிச்     செய்யப்    பொருந்தாத
மேற்கோளென்றும்     பழையவுரைகாரர்     கருதுகின்றார்போலும்”.
“அருங்கலமுலகின்     மிக்க     வரசர்க்கே     யுரிய     வன்றிப்,
பெருங்கலமுடையரேனும்  பிறர்க்கவை பேண லாகா” (சூளா. கல். 189)
என்று சோணாட்டுத் தோலாமொழித் தேவர் கூறுவது இக் கருத்துக்குச்
சான்று  பகர்கின்றது.  “சென்னியர்  பெருமா”  னென்றது  சோழனை
இழித்தற்கண் வந்தது.

நன்மரம்    துவன்றிய நாடு பல தருவதோடமையாது, அந்நாட்டுச்
சென்னியர்    பெருமானையும்    பற்றிப்   பிணித்து   என்முன்னே
கொணர்ந்து  நிறுத்துக  என்று சேரன் தன் தானைவீரர்க்குப் பணித்த
சொல்  கேட்டதும், சோழர் அஞ்சி “இனி இவனொடு பொருது வேறல்
இல்லை”   யெனத்  துணிந்து  தாமேந்திய  வேற்படையை  நிலத்தே
யெறிந்து    அடிபணிந்தன    ரென்றற்கு,    “முத்தைத்   தம்மென
இட்டவெள்வேல்”  என்றார்.  அவ்வேலின்  தொகை,  “கபிலன்பெற்ற
வூரினும்  பல”  (வரி,  13)  என்பதனால்,  சென்னியர் பெருமான்பால்
இருந்த   வீரர்   மிகப்  பலரென்றும்,  ஆயினும்  அவர்  சேரமான்
படையொடு  பொருது  வெல்லும்  மதுகை  யிலரென்றும் கூறினாராம்.
முத்தை,     முந்தையென்பதன்    விகாரம்.    பழையவுரைகாரரும்,
“சென்னியர்   பெருமானை   யென்பதனுள்   இரண்டாவது  தொக்க”
தென்றும்,  “முத்தைத்  தம்மென  -  முன்னே தம்மினென” என்றும்,
“முந்தை  முத்தையென  வலித்த” தென்றும் கூறுவர் . எண்ணுங்கால்
தோற்றோர் எறிந்த  படையைப்  பொருளாக எடுத்துக் கூறு மிம்மரபு,
“இன்முகம்  கரவாது வந்து நீ யளித்த அண்ணல் யானை யெண்ணின்,
கொங்கர்க்,   குடகடலோட்டிய   ஞான்றைத்,  தலைப்பெயர்த்  திட்ட
வேலினும்  பலவே”  (புறம்.  130) என்று ஏணிச்சேரி முடமோசிரியார்
கூறுதலானும் அறியப்படும் .

5 - 13. முன்றிணை........................பலவே.

உரை :  முன்  திணை  முதல்வர்போல  நின்று - நின்  குலத்து
முன்னோர்களைப்  போல  நன்னெறிக்கண்ணே  நிலைபெற  நின்று ;
தீஞ்சுனை  நிலைஇய  -  இனியநீ்ர்  வற்றாது  நிலைபெற்ற  ; திருமா
மருங்கின்  -  அழகிய  பெரிய  பக்கத்தாலும்  ;  பலகோடு  -  பல
சிகரங்களாலும்  சிறந்த ; விரிந்த நாடுகாண் நெடுவரை - அகன்றுள்ள
தன்  நாடு  முற்றும் தன்மேல் ஏறியிருந்து இனிது காணத்தக்க நெடிய
மலையிடத்தே  ; சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை - நறவு என்னும்
ஊரின்கண்   இருக்கும்   அம்முன்றிணை   முதல்வர்  நாட்காலைத்
திருவோலக்கத்தையும்    ;    அவை   அரசு   பணிய   -  தனது
அரசவைக்கண்ணே  ஏனை  யரசர்  வந்து  பணிந்து தொழில்கேட்ப ;
அறம்  புரிந்து  வயங்கிய  -  அறம்  செய்து  வளங்கிய  ; மறம்புரி
கொள்கைஅறத்திற்    கிடையூறு     நேர்ந்த    வழி  அதனைப்
போக்குதற்கண் வாடாத     மறத்தை    விரும்பி   மேற்கொள்ளும்
கோட்பாட்டையும்  ; நனவிற்    பாடிய  -  மெய்யாகவே  பாடிய  ;
வயங்கு  செந்நாவின்  விளங்குகின்ற    செம்மையான   மொழியும் ;
உவலை கூராக் கவலையில் நெஞ்சின் - புன்மை  மிகுதற் கேதுவாகிய
கவலையில்லாத நெஞ்சம் ; நல்லிசை  -  நல்ல   புகழும்   படைத்த;
கபிலன் பெற்ற ஊரினும் -  கபிலர்   என்னும்   புலவர்   பெருமான்
அவருட்  செல்வக்  கடுங்கோ  வாழியாதனால்   நன்றா     என்னும்
குன்றின்மேலிருந்து    தரப்பெற்ற    ஊர்களைக்  காட்டிலும் ; பல -
(சோழர் இட்ட வேல்கள்) பலவாகும் எ-று.
 

நாண்மகி     ழிருக்கையும்,  மறம்புரி  கொள்கையும்  கபிலனால்
பாடப்பட்டனவென்றும், அக்கபிலன்  செந்நாவும் கவலையி னெஞ்சும்
நல்லிசையு முடையனென்றும் பகுத்தறிந்து கொள்க.

முதல்வர்     போல நின்று நிலைஇய நெடுவரை யெனவும், சுனை
நிலைஇய  நெடுவரை  யெனவும்  இயையும். ஈண்டு முதல்வர் என்றது
அவர்  புகழுடம்பின் மேற்று. மாரிக்காலத்து உண்ட நீரைக் கோடைக்
காலத்தே  உமிழ்வதனால் நீர்  இடையறாது நிலைபெற்றொழுகுதலால்,
மலைப்பக்கமெங்கும்   வளஞ்   சிறந்து  கண்டாரால்  விரும்பப்படும்
தன்மை    மிகப்   பெறுதலால்,   “திருமா   மருங்கின்”   என்றார்.
“மருங்கினாலும்  கோடுகளால் நெடிதாகிய  மலை”  யென்க. நாடுமிக
விரிந்ததாயினும்,    தன்    சிகரத்தின்   மேலேறி   நோக்குவார்க்கு
நெடுமையால்  சிறிதும்  ஒழிவின்றிக்  காணத்  தக்கதாக  இருத்தலால்,
“நாடுகாண்   நெடுவரை”   யென்றார்.   சேரமானுடைய  முன்றிணை
முதல்வர்போல  நின்று  நிலைஇய சிறப்பினாலும் நாட்டின் நலமுற்றும்
காணவிழைவார்க்குத்  தன்  நெடுமையால்  இனிது  காண  வுதவியும்,
நாட்டின்   வளமறிய   விரும்பினாரைத்  தன்  திருமாமருங்கினாலும்
பலவாகிய   கோடுகளாலும்  சேய்மைக்  கண்ணிருந்தே  காண்பிக்கும்
சிறப்பினாலும்,  “நாடுகா ணெடுவரை”  என்ற இத்தொடர் இப்பாட்டிற்
சிறப்புற்று  நிற்றலின்,  இதனானே  இதுவும்  பெயர்  பெறுவதாயிற்று.
இனிப் பழையவுரைகாரர், “நாடுகாணெடுவரை யென்றது தன்

மேலேறி   நாட்டைக்கண்டு  இன்புறுதற்கேதுவாகிய  ஓக்கமுடைய
மலையென்றவா”   றென்றும்,   “இச்   சிறப்பானே இதற்கு  நெடுகா
ணெடுவரை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்,

நறவம்    பூவின் வேறாக  நறவு என்று வெளிப்படுத்தற்கு, “சூடா
நறவி்ன்”    என்றும்,    ஞாயிறெழுங்    காலைநேரத்தை  நாட்கால
மென்பவாகலின்,  அக்காலத்  தரசிருக்கையை,  “நாண்மகி  ழிருக்கை”
யென்றும்  கூறினார்.  அறம்புரிதலும் மறம்புரிதலும் வேந்தற்கு  அகத்
தொழிலும்  புறத்தொழிலுமாதலின்,  “அறம்புரிந்து  வயங்கிய மறம்புரி
கொள்கை”  யென்றார். அறம்புரி மிடத்தும் அதற்கெய்தும் களைகளை
நீக்குதற்கு  மறம்  வேண்டுமென்க.  இனிப் பழையவுரைகாரர், “அறம்
புரிந்து  வயங்கிய  கொள்கை யென்னாது மறம்புரி யென்றது, அதற்கு
இடையீடுபட  வருவழி  அதனைக்  காத்தற்கு  அவ்வறக்  கொள்கை
மறத்தொடு  பொருந்து மென்றற்கு” என்பர்.
  

நாவிற்கு     விளக்கந்தரும்  செம்மை “யாதொன்றுந் தீமையிலாத
சொலல்” ஆதலின் அதனைச் சொல்லும் கபிலன் நாவினைச் “செந்நா”
என்றும்,  வறுமை  கூர்ந்த  வழியும்  மனத்தின்  செம்மை   மாறாது,
புல்லிய   நினைவுகட்கு   இடந்தந்து   வீணே   கவலை  யெய்தாது
விளங்குவதுபற்றி  “உவலை  கூராக் கவலையில்  நெஞ்சின்” என்றும்
கூறினார்  .  உவலை, புன்மை இழிவு . கபிலன் பாட்டிற் காணப்படும்
காட்சியனைத்தும்   நனவினும்  காணப்படுதலின்,  “நனவிற்  பாடிய”
என்றார்   .  பிற்காலச்  செய்யுள்  வழக்கிற்  காணப்படும் இயற்கை
யொடுபடாத புனைந்துரையும் புனைவுக்காட்சியும் அவன் பாடுவதிலன்
என்பதாம்.

கபிலர்    செல்வக் கடுங்கோவாழியாதனை இந்நூலிற் காணப்படும்
ஏழாம்பத்தினைப்   பாடிப்பெற்ற  பரிசில்,  “சிறுபுறமென  நூறாயிரங்
காணங்கொடுத்து,  நனற்ா  வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்
கண்ட   நாடெல்லாம்  காட்டிக்கொடுத்தான்  அக்கோ”  என்று அவ்
வேழாம் பத்தின் பதிகம் கூறுகின்றது.

இதுகாறுங்   கூறியவாற்றால், “சேரமானே, நீ நின் தானை வீரரை
நோக்கி, நாடுபல  தரீஇ, பெரும்பூணும் பூட்கையு முடைய சென்னியர்
பெருமானை  முத்தைத்தம்”  என  ஏவ  சென்னியர்  வீரர்,  அஞ்சி
நிலத்தே  எறிந்த  வேல்கள், நாடுகாண் நெடுவரைக்கண் நாண் மகிழ்
இருக்கையையும் மறம்புரி கொள்கையையும் நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன்   பெற்ற   வூர்களினும்   பலவாம்   என்பதாம்   . இனிப்
பழையவுரைகாரர்,     “இளஞ்சேர     லிரும்பொறை,   சென்னியர்
பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்
சென்னியர்   பெருமானை  எம்  முன்னே  பி்டித்துக் கொண்டுவந்து
தம்மினெனத்  தம்  படைத்தலைவரை யேவச் சென்னியர் பெருமான்
படையாளர்   பொருது  தோற்றுப் போகட்ட  வெள்வேல், செல்வக்
கடு்ங்கோ  வாழியாத  னென்பவன் நாடுகா ணெடுவரையின் நாண்மகி
ழிருக்கைக்   கண்ணே  தன்  முன்றிணை  முதல்வர்போல அரசவை
பணிய  அறம்  புரிந்து  வயங்கிய  மறம்புரி  கொள்கையைப் பாடின
கபிலன்பெற்ற  வூரினும்  பல என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க”
என்றும்,   “செம்பியர்  பெருமானைத்  தம்மென  மாறவேண்டுதலின்
மாறாயிற்” றென்றும், “இனிப்பிறவாறு மாறிப் பொருளுரைப்பாரு முள”
ரென்றும் கூறுவர் .

“இதனாற் சொல்லியது   அவன்   முன்னோருடைய   கொடைச்
சிறப்பொடு படுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.”


 மேல்மூலம்