முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
86.



உறலுறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை
வென்வேற் பொறைய னென்றலின் வெருவர
வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான்
 5




நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்
தில்லோர் புன்கண் டீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சிற்
பாடுநர் புரவல னாடுநடை யண்ணல்
கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
 10



புனல்பாய் மகளி ராட வொழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே.

     இதுவும் அது. பெயர் - வெந்திறற் றடக்கை (2)

     (ப - ரை) 1. உறலுறுகுருதியென்றது நிலத்திலே உறுதல் மிக்க
குருதி யென்றவாறு.

     ‘உறலுறு’ (1) என்பது முதலாக முன்னின்ற அடைச்சிறப்பான்
இதற்கு, ‘வெந்திறற் றடக்கை’ (2) என்று பெயராயிற்று.

     5. நிலைஇயவென்றது ஈண்டு வினையெச்சம்.

     12. வருவானியென்றது வினைத்தொகை. வானியென்பது ஓர்யாறு.

     இளஞ்சேரலிரும்பொறையை எல்லாரும் வெருவரச் (3)
செருக்களம் புலவக் (1) கொன்றமர்க்கடந்த தடக்கைப் (2)
பொறையனென்று சொல்லுகையாலே, (3) யான் அவனை
வெப்பமுடையான் ஒருமகனென்று முன்பு கருதினேன்; அஃது
இப்போது கழிந்தது (4) ; அப்பொறையனாகிய பாடுநர் புரவலன்,
ஆடுநடையண்ணல் யான் தன்னொடு கலந்திருந்தவழித் தன்னாட்டு
(8) வானியென்னும் யாற்றுநீரினும் (12) சாயலனாயிருந்தான்றான் (13)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வன்மைமென்மைச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-3. நிலத்திலே உறுதல் மிக்க இரத்தத்தால்
போர்க்களம் புலால் நாற்றம் வீசும்படி பகைவர் சேனையை கொன்று
போரிடத்தில் வஞ்சியாது எதிர்நின்று வென்ற கொடிய திறலையுடைய
பெரிய கையையும் வெற்றியைத் தரும் வேலையும் உடைய
சேரனென்று உலகத்தார் சொல்லுதலால் அச்சம் பொருந்துதல் வர.

     4. வெம்மையையுடைய ஆண்மகனென்று முன்பு
எண்ணியிருந்தேன்: அஃது இப்பொழுது நீங்கிற்று ; மன் :
கழிவுப்பொருளில் வந்தது.

     5. நல்ல புகழை நிலைநாட்டும்பொருட்டு, அகன்ற
இடத்தையுடைய உலகத்தில்.

     6-8. பொருளில்லாதவருடைய துன்பம் நீங்கும்படி பொருளைக்
கொடுக்கும், தருமத்தையே ஆராய்தல் மிக்க அன்பையுடைய
மனத்தால் பாடுவோரைப் புரத்தலில் வல்லவன்; பிறரை
வெல்லுதலைப்பெற்ற ஒழுக்கத்தையுடைய தலைவன் ; ஆடு - வெற்றி.

     9. ஓடக்கோல் நிலைபெறுதல் இல்லாத ஆழமான
இடத்தின்கண்ணாயினும், “கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்”
(அகநா. 6 : 6)

     10-11. நீரிற் பாய்ந்த மகளிர் ஆடுதலால், அவர் காதினின்றும்
கழன்ற பொன்னாற் செய்த அழகிய குழை யென்னும் அணி மேலே
தெரிதற்கு இடமான ; புனலாடு மகளிர் குழை கழலுதல் :
“வண்டலாயமொ டுண்டுறைத் தலைஇப், புனலாடு மகளி ரிட்ட
பொலங்குழை” (பெரும்பாண். 311 - 2 )

     12-3. சந்தனமரம் வருகின்ற வானியென்னும் ஆற்றுநீரினும்
நிச்சயமாகப் பொறையன் இனிய தண்ணிய மென்மையை யுடையான்.
ஆறு சந்தனமரம் கொணர்தல் : “அகிலு மாரமும், துறைதுறை
தோறும் பொறையுயிர்த் தொழுகி “ (பொருந. 238 - 9)

     நீரினும் இனிய சாயல் ; ஈர முடைமையி னீரோ ரனையை”
(பதிற். 90 : 14) ; “நீரினும் இனிய சாயற், பாரி” (புறநா. 105 :7 - 8.்
குறிப்புரை)

     (பி - ம்) 2. அமர்கடந்த.                     (6)





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

6. வெந்திறற் றடக்கை
 
86. உறலுறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை
வென்வேற் பொறைய னென்றலின் வெருவா
1
வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான்
 
5நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்
தில்லோர் புன்கண் டீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சில்
பாடுநர் புரவல னாடுநடை யண்ணல்
கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்

 
10புனல்பாய் மகளி ராட வொழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்து வருவானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே .

இதுவுமது .

பெயர்  : வெந்திறற் றடக்கை.

1 - 4. உறலுறு......................மன்யான் .

உரை : உறல் உறு குருதிச் செருக்களம் புலவ - நிலத்திலே ஊறிச்
சுவறுமாறு மிக்க குருதியால் போர் நிகழ்ந்த நிலம் புலால் நாற்றம் நாற
; அமர் கொன்று கடந்த - எதிர்த்த பகைவரைப் போரிலே வஞ்சியாது
பொருது  கொன்று  வென்ற  ; வெந்திறல் தடக்கை - வெவ்விய திறல்
பொருந்திய  பெரிய  கையையும் ; வென் வேல் - வெற்றி பொருந்திய
வேலையுமுடைய   ;   பொறையன்   என்றலின்  - பொறையயென்று
எல்லாருஞ் சொல்லுதலால்; வெருவா கேட்குந்தோறும் உளம் அஞ்சி ;
யான்   வெப்புடை   ஆடூஉ  செத்தனென்மன்  -  யான்  பொறைய
னென்பான்   வெம்மை  யுடைய  ஆண்மகனென்றே  முன்பெல்லாம்
கருதினேன் ; அஃது இப்பொழுது கழிந்தது எ - று.

நிலத்திலே ஊறிச் சுவறுமாறு மிக்கு ஒழுகுதலின், “உறலுறு குருதி”
யென்றும்,  அதனால்  செருநிலம்  புலால்  நாறுதலின், “செருக்களம்
புலவ”  என்றும்,  இந் நிலைமைக்கு ஏதுவாக அவன் செய்த போரை,
“கொன்றமர்க் கடந்த” என்றும் குறிப்பித்தார் .குருதியூறி நிலம் புலால்
நாறுமாறு  செய்யும் போரில் எண்ணிறந்த உயிர்கள் கொலையுண்ணப்
பொருவது மிக்க  திறலுடையார்க்  கல்லது கூடாமையின், “வெந்திறல்
தடக்கை   வென்வேற்   பொறையன்”   என்றார்.  இச் சிறப்பினால்
இப்பாட்டும் வெந்திறற் றடக்கை யென்று பெயர் பெறுவதாயிற்று.

இனிப்  பழையவுரைகார், “உறலுறு குருதி யென்றது உறுதல் மிக்க
குருதி  யென்றவா” றென்றும், “உறலுறு என்பது முதலாக முன்னின்ற
அடைச்  சிறப்பான்  இதற்கு வெந்திறற் றடக்கை யென்று பெயராயிற்”
றென்றும் கூறுவர்.

இளஞ்சேர   லிரும்பொறையைக்   கூறுவோ  ரெல்லாம்  அவன்
பெயரைப்   பட்டாங்குக்   கூறாது  வெந்திறற்  றடக்கை வென்வேற்
பொறைய  னென்றே  கூறுதலின்,  அவன்பால்  தண்ணிய மென்மை
கிடையாது    போலும் என்றுஅஞ்சினேன்    என்பார், “வெருவா,
வெப்புடை  ஆடூஉச் செத்தனென் மன்யான்”   என்றார்.    எனவெ
னெச்சம்   வருவிக்கப்பட்டது. பண்டெல்லாம் இவ்வாறு  கருதினேன்,
இதுபோது அஃதொழிந்த  தென்பதுபட  நிற்றலின்,  மன்  ஒழியிசை.
எல்லாரும் சொல்லுதலால், இன்னாரென்று கூறாது, “என்றலின்” எனப்
பொதுப்படக் கூறினாரென வுணர்க.
 

5 - 13. நல்லிசை ............ தானே.

உரை :  நனந்தலை  யுலகத்து  நல்லிசை   நிலைஇய - அகன்ற
இடத்தையுடைய உலகத்தி்லே நல்ல புகழை நிலைநிறுத்தும் பொருட்டு
;  இல்லோர்  புன்கண்  தீர  -  வறியவருடைய துன்பம் நீங்குமாறு ;
நல்கும்  -  வேண்டுவனவற்றை நிரம்ப  வழங்கும்  ;  நாடல் சான்ற
நயனுடை  நெஞ்சின்  அறத்தையே  யாராய்தற் கமைந்த அன்புடைய
நெஞ்சினையும்     ;     ஆடு    நடை   அண்ணல்    அசைந்த
நடையினையுமுடைய அண்ணலாகிய  ; பாடுநர் புரவலன் புகழ்பாடும்
புலவர் பாணர் முதலாயினாரை ஆதரிப்பவன் ; கழை நிலைபெறாஅக்
குட்டத்தாயினும்  - ஓடக்கோல் நிற்கமாட்டாத ஆழமுடைத்தாயினும் ;
புனல்பாய்  மகளிர்  ஆட  - ஆண்டுள்ள  நீரில் விளையாட்டயரும்
மகளிர்  பாய்ந்தாடுதலால்; ஒழிந்த  பொன்செய்  பூங்குழை மீமிசைத்
தோன்றும் - அவர் காதினின்றும் வீழ்ந்த பொன்னாற் செய்த அழகிய
குழையானது  மேலே நன்றாகத் தெரியும் ; சாந்துவரு வானி நீரினும் -
சந்தன  மரங்கள்  மிதந்துவரும்  வானியாற்றின்  நீரைக் காட்டிலும் ;
மன்ற  தீந்தண் சாயலன் - தெளிவாக இனிய தண்ணிய மென்மையை
யுடையனாவான் எ - று.

ஒருவன்    புகழ்   பெறுதற்குரிய   காரணங்களுள் வறுமையான்
இரப்பார்க்கு வழங்கும்  கொடை சிறந்ததாகலின், “நல்லிசை நிலைஇய
இல்லோர்  புன்கண்  தீர  நல்கும்” என்றார்.  நிலைஇய  : செய்யிய
வென்னும்   வினையெச்சம்.   “உரைப்பா   ருரைப்பவை யெல்லாம்
இரப்பார்க்கொன்,  றீவார்மே  னிற்கும்  புகழ்”  (குறள்.  232) என்று
சான்றோர்   கூறுவது   காண்க.   “நனந்தலை   யுலகத்”  தென்றது
இடைநிலை.

வறுமையால்     வாடுவோர்க்  குளதாகும்  துன்பத்தை யோர்ந்து
அதனை  நீக்குதற்குரிய  கடன்மை  தன்பால்  உண்மையும் தெளிந்து
புன்கண்  தீரும் அளவும் பொருட்கொடை வழங்குதற்கு நெஞ்சின்கண்
ஆராய்ச்சியும்  அதற்கேதுவாக அன்பும் வேண்டுதலின், “நாடல்சான்ற
நயனுடை   நெஞ்சின்”   என்றார்.   புலவர்  பாடும் புகழுடையோர்
வானோருலகம்    இனிது    எய்துவரென்பது   பற்றிப்  பாடுநரைப்
புரக்கின்றானென்பார், “பாடுநர் புரவலன்” என்றும், வெற்றியும் புகழும்
வலியுமுடையார்க்குப்    பெருமித   நடையுளதாகலின்,   “ஆடுநடை
யண்ணல்” என்றும் கூறினார்.

“கழை  நிலைபெறாஅக் குட்ட”  மெனவே,  மிக்க ஆழமுடைமை
பெற்றாம். ஆழமுடைய குட்டத்து நீர்நிலை    மணிபோற்   கருத்துத

தோன்றுமாதலின், அதனடியில் வீழ்ந்த பொருள் தோன்றுதலரிதன்றோ;
இவ்வானி யாற்றுநீர் அத்துணை ஆழமுடைத்தாயினும்,  பளிங்குபோல்
தன்னகத்துப்  பட்ட  பொருளை  இனிது   புலப்படுத்து   மென்பார்,
“பொன்செய்   பூங்குழை  மீமிசைத்   தோன்றும்”  என்றார். மகளிர்
புனலிற் பாய்ந்தாடுமிடத்து அவர் காதிற் செறிக்கப்பட்டிருக்கும் குழை
வீழ்தல்   இயல்பு  ;   “வண்டலாயமொ   டுண்டுறைத்    தலைஇப
புனலாடு    மகளிரிட்ட    பொலங்குழை”   (பெரும்பாண். 311 - 2) 
என்று பிறரும் கூறுதல் காண்க.

வானியாறு     நீலகிரியில் தோன்றிச் சந்தனமரம் செறிந்த காட்டு
வழியாக  வருதலின், “சாந்துவரு வானி” யென்றார். அதன் நீர் மிக்க
தட்பமுடைய  தென்பது அது  காவிரியொடு  கலக்கு  மிடத்தே  இக்
காலத்தும்   இனிது   காணலாம்.  சாயற்கு  நீரை  யுவமம் கூறுவது,
“நெடுவரைக்கோடுதோறிழிதரும்,  நீரினும்  இனிய  சாயற் பாரிவேள்”
(புறம். 105) என வரும் கபிலர் பாட்டாலும் அறியலாம்.

இனிப் பழையவுரைகாரர், “வருவானி  யென்றது வினைத்தொகை”
யென்றும், வானி யென்பது ஓர் யாறு” என்றும் கூறுவர்.

இதுகாறுங்            கூறியவாற்றால்,            “இளஞ்சேர
லிரும்பொறையையெல்லாரும்    வெந்திறற்   றடக்கை   வென்வேற்
பொறையன்   என்றலின்,  யான்  வெருவி,  வெப்புடையாடூஉ என்று
முன்பெல்லாம் நினைந்து அஞ்சினேன் ; அஃது இப்போ தொழிந்தது ;
அவன்  நல்லிசை நிலைஇய, இல்லோர் புன்கண் தீர நல்கும் புரவலன்
;  அண்ணல்  ;  வானி நீரினும் தீந்தண் சாயலன்” என்பதாம். இனிப்
பழைய   வுரைகாரர்,   “இளஞ்சேர   லிரும்பொறையை  எல்லாரும்
வெருவரச்   செருக்களம்   புலவக்   கொன்றமர்க்கடந்த  தடக்கைப்
பொறைய   னென்று   சொல்லுகையாலே   யான்  அவனை  வெப்ப
முடையானொரு  மகனென்று முன்பு கருதினேன் ; அஃது இப்பொழுது
கழிந்தது   ;  அப்  பொறையனாகிய  பாடுநர்  புரவலன்  ஆடுநடை
யண்ணல்   ;   யான்   தன்னொடு   கலந்திருந்தவழித்  தன்னாட்டு
வானியாற்று    நீரினும்   சாயலனாயிருந்தான்றான்   எனக்   கூட்டி
வினைமுடிவு செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது  அவன்   வன்மை  மென்மைச்  சிறப்புக்
கூறியவாறாயிற்று.”


1. மூலமட்டு முள்ளதில் ‘வெருவா’ என்ற பாடமேயுள்ளது


 மேல்மூலம்