முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
87.


சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல்
ஒய்யு நீர்வழிக் கரும்பினும்
 5
பல்வேற் பொறையன் வல்லனா லளியே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - வெண்டலைச் செம்புனல்
(3)

     (ப - ரை) 2. பூழில் - அகில். 3. முன்னியவென்றது ஈண்டுப்
பெயரெச்சம்.

     வெண்டலைச் செம்புனலென முரண்படக் கூறியவாற்றானும்
முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு, ‘வெண்டலைச் செம்புனல்’
என்று பெயராயிற்று.

     செம்புனலென்றது செம்புனலையுடைய யாற்றினை.

     4. நிர்வழி ஒய்யும் கரும்பெனக் கூட்டி நீரிடத்துச் செலுத்தும்
கரும்பென்க.

     கரும்பென்றது 1கருப்பந்தெப்பத்தினை.

     பல்வேற் பொறையன் (5) வெண்டலைச் செம்புனலையுடைய
யாற்றிற் (3) செலுத்தும் கருப்பம்புணையினும் (4) அளித்தல்வல்லன் ;
ஆதலால், அவன்பாலே (4) பாடினி செல்; செல்லின், நன்கலம்
பெறுகுவை (1) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் அருட்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. விறலி, சேரனிடத்தே சொல்லுவாயாக; சென்றால்
நல்ல ஆபரணங்களைப் பெறுவாய். மோ : முன்னிலையசை. நன்கலம்
- முத்து மாலை முதலியன.

     2. சந்தனமரத்தோடும், அகிலோடும் பொங்குகின்ற நுரைகளைச்
சுமந்து. பூழில் - அகில் ; “சாத்த மரத்த பூழி லெழுபுகை” (ஐங்குறு.
212 : 1)

     3-5. தெளிந்த கடலை நோக்கிச் சென்ற நுரையாகிய வெள்ளிய
மேற்பரப்பையுடைய சிவந்த நீரையுடைய ஆற்றில் நீரினிடத்தே
செலுத்தும் கருப்பந்தெப்பத்தைக் காட்டிலும், பல வேற்படையையுடைய
சேரன் அளித்தல்வல்லன். நீர்வழி ஒய்யுமென மாறிக் கூட்டுக.
வல்லனால் : ஆல், அசைநிலை.
          (7)


     1“வேழ வெண்புனை” (அகநா. 6 : 8)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

7. வெண்டலைச் செம்புனல்
 
87.சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல்
ஒய்யு நீர்வழிக் கரும்பினும்
 
5பல்வேற் பொறையன் வல்லனா லளியே.
 

துறை  : விறலியாற்றுப் படை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : வெண்டலைச் செம்புனல்.

1 - 5. சென்மோ ....................... அளியே.

உரை :  சந்தம்  பூழிலொடு - சந்தனக்  கட்டைகளோடும்  அகிற்
கட்டைகளோடும்  ;  பொங்குநுரை சுமந்து - மிக்குவரும் நுரைகளைச்
சுமந்து கொண்டு ; தெண்கடல் முன்னிய - தெளிந்த கடலை நோக்கிச்
செல்லும்    ;   வெண்டலைச்   செம்புனல்   நுரையால்  வெளுத்த
அலையுடன்  கூடிய  சிவந்த  புதுப்புனல் பெருகிய யாற்றில் ; நீர்வழி
ஒய்யும்   கரும்பினும்  -  நீரைக்  கடத்தற்குப்  புணையாய்  உதவும்
வேழக்கரும்பைக்  காட்டிலும்;  பல்வேற்  பொறையன் அளிவல்லன் -
பல    வேற்படையினையுடைய   இளஞ்சேர   லிரும்பொறையாவான்
நின்னை  அளித்தல் வல்லனாதலால் ; பாடினி சென்மோ - பாடினியே
நீ  விரைந்து  அவன்பாற்  செல்வாயாக  ;  நன்கலம்  பெறுகுவை  -
சென்றால் நீ நல்ல அணிகலன்களைப் பெறுவாய் எ - று.

விறலியைப்     பொறையன்பால்  ஆற்றுப்    படுக்கின்றமையின்,
“சென்மோ   பாடினி”   யென்றும்,   செல்லின்  அவன்பால்  அவள்
பெறுவது  ஈதென்பார்,  “நன்கலம்  பெறுகுவை” யென்றும், பெறுமாறு
வழங்கும்   பொறையனது   அருண்மிக   வுடைமையினை,  “ஒய்யும்
நீர்வழிக்  கரும்பினும்  பல்வேற்  பொறையன்  வல்லனால் அளியே”
என்றும்  கூறினார்.  மோ : முன்னிலையசை. பாடினி : அண்மைவிளி.
ஆல் : அசை.

சந்தனத்தையும்     அகிலையும்  சுமந்து வருதல்  காட்டாற்றுக்கு
இயல்பாதலின், “சந்தம் பூழிலொடு” என்றார் ;“சந்தமா ரகிலொடு சாதி
தேக்கம்   மரம்”   (ஞானசம்.  காளத்.  1)  என்பது  காண்க.  சீரிய
விரைப்பொருளாம்   இனம்பற்றி,   இரண்டையும்   சேரக்  கூறுவார்,
கேட்பவள் மகளாதலின், அவள் விரும்பிக் கேட்க அவட்குப் பெரிதும்
பயன்படும்   இவற்றை   விதந்தோதினாரென   வறிக  .  சந்தனமும்
அகிலுமாகிய கட்டைகளை யலைத்துச் சுமந்து வருங்கால் அலைகளின்
அலைப்பால்  நுரை  மிகுதலின்,  “பொங்கு  நுரை சுமந்து” என்றும்,
அதனால்     வெளுத்த     அலையுடன்     கூடிவரும்     புனல்
புதுவெள்ளமென்பது  தோன்ற,  “வெண்டலைச்  செம்புனல்” என்றும்,
யாறெல்லாம்  கடல்  நோக்கியே செல்லுவன வாதலால், “தெண் கடல்
முன்னிய   செம்புனல்”  என்றும்  கூறினார்.  புதுப்  பெருக்காதலின்
செந்நிறம் பெற்றுப் பொங்கு நுரையால் தலை வெளுத்துக் கலக்கமுற்ற
செம்புனல்,   தெளி   வெய்தல்   வேண்டித்  தெண்கடல்  முன்னிச்
செல்லுமென்பதனால்,    வறுமையால்    உளம்    கலங்கி  நன்கல
மின்மையால்   பொலிவிழந்து   செல்லும்   நீ,  அவனது அளித்தல்
வன்மையால்   நலம்   பெறுவை   என்னும்   குறிப்புடன்  நிற்கும்
சிறப்பினால்,  இப்  பாட்டு, “வெண்டலைச் செம்புனல்” என்று பெயர்
பெறுவதாயிற்று. இனி, பழையவுரைகாரர் “வெண்டலைச் செம்புனலென
முரண்படக்     கூறியவாற்றாலும்      முன்னின்ற         அடைச்

சிறப்பானும்     இதற்கு  வெண்டலைச்  செம்புனலெனப் பெயராயிற்”
றென்பர்.    “செம்புனலென்றது,   செம்புனலையுடைய   யாற்றினை”
யென்பது  பழைய  வுரை.  முன்னிய வென்ற பெயரெச்சம் புனலொடு
முடிந்தது.

வேழப்புணை யாற்றுநீரைக் கடத்தற்குத் துணையாவதல்லது கடந்த
பின்னும்  துணையாவதில்லை  ;  பொறையன்  நினது  இவ்வறுமைத்
துன்பத்தைக்  கடத்தற்குத்  துணையாம் பெருவளம் நல்குவதே யன்றி,
அத் துன்பமின்றி இனிதிருக்குங் காலத்தும் வழங்கியருள்வ னென்பார்,
“கரும்பினும்  அளித்தல்  வல்லன்” என்றார். சீரிய துணையன்மைக்கு
வேழப்புணையின்  தொடர்பு  உவமமாகச் சான்றோரால் கூறப்படுவது
பற்றி,  உறழ்ந்து, கூறினா ரென்க. “நட்பே, கொழுங்கோல் வேழத்துப்
புணை  துணையாகப், புனலாடு  கேண்மை யனைத்தே” (அகம். 186)
என்று ஆசிரியர் பரணர் கூறுதல் காண்க.

“ஒய்யும்   நீர்வழிக்  கரும்பினும்”  என்பதை, “நீர்வழி   ஒய்யும்
கரும்பினும்” என மாறி இயைக்க. பழைய வுரைகாரர், “நீர்வழி ஒய்யும்
கரும்பெனக்  கூட்டி  நீரிடத்துச்  செலுத்தும்  கரும்பென்க” என்றும்,
“கரும்பென்றது கருப்பந் தெப்பத்தினை” யென்றும் கூறுவர்.

இதுகாறுங் கூறியவாற்றால்,பாடினி, பல்வேற் பொறையன் அளித்தல்
வல்லனாதலின்,   நீ  அவன்பாற்  சென்மோ,  நன்கலம்  பெறுகுவை
என்பதாம்.   இனிப்   பழைய   வுரைகாரர்,  “பல்வேற்  பொறையன்
வெண்டலைச்  செம்புனலை  யுடைய  யாற்றிற்  செலுத்தும்  கருப்பம்
புணையிலும்  அளித்தல்  வல்லன்  ; ஆதலால் அவன்பாலே பாடினி,
செல்  ;  செல்லின்  நன்கலம்  பெறுகுவை எனக் கூட்டி வினைமுடிவு
செய்க”   என்றும்,  “இதனாற்  சொல்லியது  அவன்  அருட்சிறப்புக்
கூறியவா றாயிற்று” என்றும் கூறுவர்.


 மேல்மூலம்