முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
88.



வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய வொன்னார் தேயத்
 5




துளங்கிருங் குட்டந் தொலைய வேலிட்
டணங்குடைக் கடம்பின் முழுமுத றடிந்து
பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி யண்ட ரோட்டிச்
 10




சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக்
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ
டுருகெழு மரபி னயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்ற மெய்திய பெரியோர் மருக
 15




வியலுளை யரிமான் மறங்கெழு குருசில்
விரவுக்கணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிறு வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயி லலைத்த கல்கால் கவணை
நாரரி நறவிற் கொங்கர் கோவே
 20




உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில்
வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயிற்
றுவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய
 25




புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு
வருநர் வரையாச் செழும்பஃ றாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பட்
 30




புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை
 35




அருவி யருவரை யன்ன மார்பிற்
சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ
மாகஞ் சுடர மாவிசும் புகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
 40


உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி
நுண்மண லடைகரை யுடைதரும்
தண்கடற் படப்பை நாடுகிழ வோயே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - கல்கால் கவணை
(18)

     (ப - ரை) வையகம் மலர்ந்த தொழிலென்றது வையகத்திற்
பரந்த அரசர் தொழிலென்றவாறு.

     தொழின்முறை ஒழியாது (1) கொற்றமெய்திய (14) என முடிக்க.

     2. கடவுட் பெயரிய கானமென்றது விந்தாடவியை.
கடவுளென்றது ஆண்டு உறையும் 1கொற்றவையினை. கடவுளினென
விரிக்க. கல்லுயரவெனத் திரிக்க.

     12. அயிரையென்றது 2அயிரைமலையுறையும் கொற்றவையினை.

     18. 3கல் கால் கவணையென்றது கற்களைக் கான்றாற்போல
இடையறாமல் விடும் கவணென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, ‘கல்கால்கவணை’ என்று பெயராயிற்று.

     23. துவைத்த தும்பையென்றது எல்லாராலும் புகழ்ந்து
சொல்லப்பட்ட தும்பைப்போரென்றவாறு.

     4நனவுற்றுவினவும் (23) தெய்வம் (24) என்றது அத்தும்பைப்
போரை நினக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும்
கொற்றவையென்றவாறு.

     தெய்வத்துக் கூட்டமுன்னிய (24) யாறு (25) என்றது
அத்தெய்வம் கூடியுறைதலையுடைய அயிரைமலையைத் தலையாகக்
கொண்டு ஒழுகப்பட்ட யாறென்றவாறு. தெய்வம்
கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமெனப்பட்டது.

     25. இழிதந்தாங்கென்றது அவ்வியாறு மலையினின்று இழிந்தாற்
போலவென்றவாறு.

     சிறப்ப (27) விளங்குதி (38) என முடிக்க.

     30. பொறியென்றது உத்தம இலக்கணங்களை. பொறியோடு
சாந்தமொடுவென ஒடுவை இரண்டற்கும் கூட்டியுரைக்க. ஒடு:
5
வேறு வினையொடு. 31. கோதையென்றது முத்தாரத்தினை.

     சூடிச் சுமந்து (31) என்னும் வினையெச்சங்களை வரையன்ன
(35) என்பதனுள் அன்னவென்பதனொடு முடிக்க.

     விற்குலைஇ (32) வேங்கை விரிந்து (34) என்னும்
வினையெச்சங்களைத் திரித்து வில்குலவ வேங்கைவிரியத்
திருமணிபுரையும் (32) உருகெழுகருவிய பெருமழை சேர்ந்து (33)
விசும்புறு சேட்சிமை (34) அருவியருவரை (35) என மாறிக்கூட்டி,
இதனை 6குறைவுநிலையுவமையில் வழுவமைதியாக்கிப் பொறிக்கு
வேங்கைப்பூ உவமமாகவும் கோதைக்குத் திருவில் உவமமாகவும்
பூணிற்கு அருவி உவமமாகவும் சாந்திற்கு உவமமில்லையாகவும்
உரைக்க. இவ்வாறு இடர்ப்படாது மலையை உரைப்பினும்
அமையும்.

     38. விளங்குதியென்பது ஈண்டு முன்னிலையேவல்.

     40. உறுகால் எடுத்த புணரியெனக் கூட்டுக.

     பெரியோர் மருக (14), மறங்கெழு குருசில் (15), கொங்கர்
கோவே (19), பொலந்தேர்க் குருசில் (20), தொண்டியோர் பொருந
(21), பெரும (22), சேயிழை கணவ (36), நாடுகிழவோய் (42), ஈங்கு
நிற்காண்கு வந்தேன் (39); நீ நீடு வாழ்வாயாக (22) ; பல தாரம் (26)
கொளகொளக் குறையாமற் சிறப்ப (27) மகளிர்நாப்பட் (29) பன்னாள்
ஞாயிறுபோல விளங்குவாய் (38) என மாறிக்கூட்டி வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் காமவின்பச்
சிறப்பும் உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று.

     (கு - ரை) 1, பூமியில் பரவிய அரசர்க்கு உரிய தொழிலின்
முறையில் தவறாமல்.

     2. விந்தையென்னும் கடவுளால் பெயர்பெற்ற காட்டோடு
கல்லுயரும்படி ; கடவுளென்றது துர்க்கையை ; விந்தாடவி :
“மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத் தடவி” (பெருங். 5. 3 : 52).
உயர்ந்து - உயர; எச்சத்தி்ரிபு.

     3-4. தெளிந்த கடல் வளைந்த அகன்ற இடத்தையுடைய
உலகத்தில்்தம் பெயர் திசைகளில் சென்ற பகைவர் அழியும்படி.

     5. காற்றால் அசைகின்ற பெரிய கடலரணினது வன்மை
கெடும்படி வேலை ஏற்றி நடப்பித்து; “வயங்குமணி யிமைப்பின்
வேலிடுபு, முழங்கு திரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே”,
“கடலிகுப்ப வேலிட்டும்” (பதிற். 45 : 21-2, 90 : 20). 6.
தெய்வத்தன்மையையுடைய கடம்பமரத்தின் அடியை வெட்டி
(பதிற். 11 : 12-3, உரை)

     7. போர் செய்தற்குக் காரணமான வன்மையை அடைந்த
கழுவுளென்பான் புறங்கொடுத்து ஓடுதலைப்பெற்று. கழுவுள் ; பதிற்.
71 : 17, உரை. 8. அச்சத்தையுடைய அரசர் உடல் துண்டாகும்படி
அழித்து.

     9. காலால் விரைந்து செல்லுதலில் வல்ல குதிரைகளையுடைய
இடையரை ஒட்டி. 10. ஒளிவிடும் பூக்களையுடைய வாகையென்னும்
காவல் மரத்தையுடைய நன்னனை அழித்து. நன்னனும் வாகை
மரமும் : பதிற். 40 : 14-5, உரை. 12 : பதிற். 90 : 19.

     11 - 2. பகைவரது இரத்தத்தைத் தெளித்துக் கலந்த
திரட்சியையுடைய சோற்றின் பிண்டங்களால் அச்சம் பொருந்திய
இயல்பினையுடைய அயிரைமலையிலுள்ள துர்க்கையை வழிபட்டு.
அயிரைமலையிலுள்ள துர்க்கை: பதிற். 3-ஆம் பதிகம், 8; 79 : 17-8;
90 : 19. குருதி கலந்த சோற்றை மடையாக அளித்தல்: பதிற்.
30 : 37, 79 : 16 - 7.

     13-4. முடியுடைய அரசரும் குறுநிலமன்னரும் வழிபட்டு
வணங்கும்படி வெற்றியை யடைந்த பெரியோரது வழியில் உள்ளாய்.

     ஒழியாது (1) எய்திய மருக (14) என முடிக்க.

     15. அகன்ற பிடரிமயிரையுடைய சிங்கத்தைப்போன்று வீரம்
பொருந்திய தலைவனே; “அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்”
(பட்டினப். 298)

     16. ஒன்றோடொன்று கலத்தலையுடைய முரசுகள் ஒலிக்கின்ற,
வரிசையாக அமைத்த கேடக வரைப்பினையும்.

     17. உலாவுதலையுடைய களிற்றினிடத்தே வெல்லும் கொடிகள்
அசையும் பாசறையையும்.

     16-7.முழங்கும் பாசறை, வரைப்பிற் பாசறை, நுடங்கும்
பாசறையெனத் தனித்தனியே இயைக்க.

     18-9. பகைவரது அரிய மதிலை வருத்திய கல்லைக்
கக்கினாற்போல வீசும் கவணையும், நாரால் அரிக்கப்பட்ட
கள்ளையுமுடைய கொங்கு நாட்டிலுள்ளார்க்குத் தலைவனே.

     நாரரி நறவு : பதிற். 11 : 15, உரை.

     20. மாறுபடுவோரைக் கெடுத்த, பொன்னாற் செய்த
தேரையுடைய தலைவனே. 21. வளைந்த கடலின் ஒசையாகிய
முழவினையுடைய தொண்டியென்னும் கடற்றுறைப்
பட்டினத்துள்ளார்க்குத் தலைவ. ஐங்குறு. 171 : 3; புறநா.
17 : 13, 48 : 4.

     பொருநன் - தான் பிறர்க்கு உவமிக்கப் படுபவன். தொண்டி
- மேல் கடற்கரையிலுள்ளதும் சேரர்க்குரியதுமான ஓரூர்.

     22. பெருமையை யுடையாய், நீ நெடுங்காலம் வாழ்வாயாக.

     22-4. நின்னிடத்து, எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்டதும்
பைப்போரில் மெய்ம்மையுற்று நினக்கு வெற்றி தருதற்கு வினவுகின்ற,
மாற்றுதற்கு அரிய துர்க்கையென்னும் தெய்வம் கூடிவாழ்தலையுடைய
அயிரைமலையினின்றும் தோன்றிய. 25. நீர்மிக்க பேரியாறு என்னும்
பெயரையுடைய ஆறு பூமியிலே இறங்கினாற்போல.

     26. நின்பால் இரத்தற்பொருட்டு வருவோர்க்கு எல்லையில்லாது
கொடுக்கும் செழுமையான பல பண்டம்.

     27. கொள்ளக் கொள்ளக் குறையாமல் இடந்தோறும் மிகும்படி.

     28-9. சித்திரத்தைப்போன்ற அழகையுடைய, பகைவர்க்கு அச்சம்
பொருந்திய நீண்ட அரண்மனையில், கொல்லிப்பாவையைப் போன்ற
வடிவழகையுடைய மகளிரது நடுவே (பதிற். 61 : 3 - 4)

     சேரனுக்குச் சூரியனை (38) உவம கூறினமையின் மகளிருக்கு
நெருஞ்சிப்பூவை உவமையாகக் கொள்க (பெருங். 2. 4 : 14 - 5)

     30. நூல்களிற் சொல்லிய மாட்சிமைப்பட்ட மூன்று
வரிகளோடும், விளங்கிய சந்தனத்தோடும்: “வரையகன் மார்பிடை
வரியுமூன்றுள” (சீவக. 1462). சாந்தமொடு என்பதிலுள்ள ஒடுவைப்
பொறியென்பதனோடும் கூட்டுக. மார்பிற் பொறியும் சந்தனமும் :
பதிற்
. 48 : 11 - 2, உரை.

     31. குளிர்ந்த ஒளி பரவுகின்ற முத்தமாலையைச் சூடி, பேரணி
கலங்களை அணிந்து. கமழ்தல்: பரவுதல் என்னும் பொருளது;
“வியலிடங்கமழ, இவணிசை யுடையோர்க் கல்லது” (புறநா. 50 : 13-4)
என்புழிப்போல.

     32-3. இந்திரவில்லை வளைத்து அழகிய நீலமணியைப் போன்ற
நிறம் பொருந்திய, மின் முதலிய தொகுதிகளையுடைய பெரிய மேகம்
சேரப்பெற்று.

     32-5. திருவில் தோற்றுதலும், திருமணி புரைதலும்
மேகத்திற்குரியன. மழை சேர்தலும், வேங்கை மலர்தலும்.
அருவியுடைமையும் மலைக்குரியன.

     34-6. வேங்கைப்பூக்கள் மலரப் பெற்று, ஆகாயத்தைப்
பொருந்தும் உயர்ந்த சிகரங்களையும், அருவிகளையும் உடைய அரிய
மலையைப் போன்ற மார்பினையுடைய, நெடுந்தூரத்தே விளங்குகின்ற
நல்ல இசையையுடைய சிவந்த ஆபரணங்களை அணிந்தோளுடைய
கணவ. சேணாறு நல்லிசை : மதுரைக். 209 ; புறநா. 10 : 11.
சேயிழை கணவ: அனைத்தும் ஒரு பெயர்.

     37-8. பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடுவேயுள்ள இடம்
ஒளியடையும்படி, பெரிய ஆகாயத்தில் உயர்ந்து செல்லும்
சூரியனைப்போலப் பல காலம் விளங்குவாயாக. மாகம் : பரி. 1 : 47,
பரிமேல்.

     39. யான் இவ்விடத்தே நின்னைப் காண்பேனாகி வந்தேன்.

     40-42. மிக்க காற்று எழுப்பிய ஓங்கிவருதலையுடைய அலை.
நுண்ணிய மணலையுடைய நீரையடைந்த கரையிடத்தே வந்து
உடைகின்ற, குளிர்ந்த கடற்பக்கத்தையுடைய நாட்டுக்கு உரியோய்.

     மருக (14), குருசில் (15), கோவே (19), பொலந்தேர்க் குருசில்
(20), பொருந (21), சேயிழை கணவ (36), யான் நின்னைக் காண்பேன்
வந்தேன் (39); சிறப்ப (27), மகளிர்நாப்பண் (29), ஞாயிறுபோல
விளங்குதி (38) என முடிக்க.

     (பி - ம்) 27. சிறந்து.                     (8)


     1“விந்தியமலையிலுறைதல்பற்றித் துர்க்கைக்கு விந்தையென்று
ஒரு பெயர் வழங்கும்.

     2பதிற. 3-ஆம் பதிகம்; 79 : 18, 90 : 19.
     3“கல்லுமிழ் கவண்” (சிலப். 15 : 208) என்பது
பொறிவகைகளுள் ஒன்று.

     4நனவு - மெய்ம்மை (பதிற. 85 : 12, உரை.)
     5பொறிக்கும் சந்தனத்திற்கும் தொழிலின்மையின் வேறுவினை
ஒடுவாயிற்று.

     6“மிகுதலுங் குறைந்தலு தாழ்தலு முயர்தலும், பான்மாறுபடுதலும்
பாகுபா டுடைய” (
தண்டி, 32)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

8. கல்கால் கவணை
 
88.வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய வொன்னார் தேயத்
 
5துளங்கிருங் குட்டந் துளங்க வேலிட்
டணங்குடைக் கடம்பின் முழுமுத றடிந்து
பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி யண்ட ரோட்டிச்
 
10சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக்
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ
டுருகெழு மரபி னயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்ற மெய்திய பெரியோர் மருக
 
15வியலுளை யரிமான் மறங்கெழு குரிசில்
விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயி லலைத்த கல்கால் கவணை
நாரரி நறவிற் கொங்கர் கோவே
 
20உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில்
வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய
 
25புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு 
வருநர் வரையாச் செழும்பஃ றாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப 
ஓவர் தன்ன வுருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பண்
 
30புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை
 
35அருவி யருவரை யன்ன மார்பிற்
சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ
மாகஞ் சுடர மாவிசும் புகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
 
40உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி
நுண்மண லடைகரை யடைதரும்
தண்கடற் படைப்பை நாடுகிழ வோயே.
 

துறை  : செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : கல் கால் கவணை.
 

1 - 15 வையகம்................குரிசில்.

உரை :   கடவுட்   பெயரிய   கானமொடு   கல்  உயர்ந்து  -
விந்தையென்னும்   பெயரையுடைய   கொற்றவையின்  பெயராலாகிய
விந்தாடவியோடு   அப்பெயரையே  யுடையதாகிய  விந்தமலையினும்
புகழ் மிகுந்து ; தெண்கடல் வளைஇய மலர் தலையுலகத்து - தெளிந்த
கடலாற்   சூழப்பட்ட   அகன்ற  இடத்தையுடைய  நிலவுலகத்தில்  ;
வையகம்  மலர்ந்த  தொழில்முறை  ஒழியாது  - நாடு வளம் சிறத்தற்
கேதுவாகிய  அரசர்க்குரிய தொழில்முறை வழுவாதொழுகி ; தம்பெயர்
போகிய  ஒன்னார்  தேய - தங்கள் சீர்த்தியை நாற்றிசையும் பரப்பிய
பகைவராகிய  கடம்பர்கள் குன்ற ; துளங்கு இருங்குட்டம் தொலைய -
அலையெழுந்தசையும் கரிய கடலிடத்தே அவர்கள் தோற் றழியுமாறு ;
வேலிட்டு  -  வேற்படையைச்  செலுத்தி  வென்று  ; அணங்குடைக்
கடம்பின்  முழுமுதல்  தடிந்தும் - அவர்கள் தமக்குக் காவல்மரமாகப்
பேணிக்காத்த  தெய்வத்தன்மை பொருந்திய கடம்புமரத்தை வேரோடு
தகர்த்தழித்தும்   ;  பொருமுரண்  எய்திய  கழுவுள்  புறம்பெற்று  -
காமூரென்னும்  ஊரிடத்தே யிருந்து கொண்டு சேரருடன் போருடற்றக்
கூடிய   மாறுபாட்டினைப்  பெற்ற  கழுவுள்  என்பானைத்  தோல்வி
யெய்துவித்து  ; நாம மன்னர் துணிய நூறி - அவற்குத் துணையாய்ப்
போந்த  அச்சம்  பொருந்திய  மன்னர் துண்டுதுண்டாய் வெட்டுண்டு
வீழக்கொன்று   ;   கால்  வல்  புரவி  அண்டர்  ஓட்டி  - காலால்
வலியவாகிய  குதிரைகளையுடைய இடையர்களைத் துரத்தி்யும் ; சுடர்
வீ    வாகை   நன்னற்   றேய்த்து   ஒளிர்கின்ற   பூக்களையுடைய
வாகைமரத்தைக்     காவல்மரமாகக்    கொண்டோம்பிய   நன்னன்
என்பானை  அவ்வாகை  மரத்தோடும்  அழித்தும் ; குருதி விதிர்த்த
குவவுச் சோற்றுக் குன்றோடு - பகைவரது குருதி தெளித்துப் பிசைந்த
திரண்ட  சோற்றுக்குவியலாகிய குன்றைக்கொண்டு ; உருகெழு மரபின்
அயிரை  பரைஇ  -  உட்குதலைப்  பயக்கும் முறைமையினையுடைய
அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் பரவி ; வேந்தரும் வேளிரும்
பின்வந்து  பணிய  -  முடியரசராகிய  சோழ  பாண்டியரும் குறுநில
மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும் ; கொற்ற மெய்திய பெரியோர்
மருக  -  வெற்றியெய்திய  பெரு மக்களின் வழி வந்தோனே ; வியல்
உளை  அரிமான்  மறம் கெழு குருசில் - அகன்ற பிடரியினையுடைய
சிங்கத்தினது வலிபொருந்திய தலைவனே எ - று.

வடநாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியில் வைத்துச் சான்றோரால்
புகழப்படும்    பெருஞ்   சீர்த்தியுடையதாகலின்,   சேரர்   புகழ்க்கு
உவமையாக  விந்தமலையையும்  அதனைச் சூழவுள்ள  கானத்தையும்
எடுத்தோதினார்.   கல்லுயர்ந்து   என்புழி  உறழ்ச்சிப்  பொருட்டாய
ஐந்தாவது தொக்கது   பெருங்காற்று     மோதியும்    பேரியாறுகள்
பாய்ந்தும்   கலங்காத   கடல்       என்றற்குத்     “தெண்கடல்”
என்றார்.      கலக்கமின்றித்              தெளிந்த      கடலாற்
சூழப்பட்ட  உலகத்தைத் தொழின் முறை யொழியாது ஆளுமுகத்தால்
தம் பெயர் போகியோராயினும்,சேரரோடு ஒன்றாமையின் ஒன்றாராய்த்
தேய்ந்தனரென்பது    கருத்தாகக்    கொள்க.   அரசர்  தமக்குரிய
ஆட்சிமுறையில்   செய்தற்குரிய   முறையை  யொழியாது  செய்யின்,
ஆட்சியுட்பட்ட  வுலகம் எல்லா வளங்களும் நிறைந்து மேன்மையுறும்
என்றற்கு,  “வையகம் மலர்ந்த தொழின் முறை” யென்றார் ; மலர்ந்த
என்றது,  நோய்  தீர்ந்த  மருந்தென்றாற்போலக் காரணப் பொருட்டு.
விந்தமலையைச்  சார்ந்துள்ள நாடு கடம்பருடைய நாடாதலின், அந்த
நாட்டை  விதந்தோதினார்.  விந்தையென்னும் கொற்றவையின் பெயர்
கொண்டு  நிலவுதலின், “கடவுட்  பெயரிய கானமொடு கல்” என்றார்.
இதனால்  இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதனுடன்  கடலிடத்தே போர்
தொடுத்த  கடம்பருடைய  நாடும்  அவருடைய  ஆட்சியும்  புகழும்
கூறியவாறு. இப் பெற்றியராயினும், கடலிடத்தே செல்லுங் கலங்களைத்
தாக்கிக்  குறும்பு  செய்தொழுகினமையின்,  அவரை அக்கடலிடத்தே
சென்று   எதிர்த்துத்  தன்  வேற்படையை  யேவி  வென்றாராதலின்,
“துளங்கிருங்  குட்டம்  தொலைய  வேலிட்டு” என்றும், பின்பு அவர்
நாட்டுட்  சென்று  அவருடைய கடம்பு மரத்தைத் தடிந்தா ரென்றற்கு,
“கடம்பின்    முழுமுதல்   தடிந்து”   என்றும்,   வெற்றித்  தெய்வ
முறைவதாகக்  கருதியோம்பினமை  தோன்ற “அணங்குடைக் கடம்பு”
என்றும்  கூறினார். “இருமுந்நீர்த்  துருத்தியுள், முரணியோர்த்தலைச்
சென்று, கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேரலாதன்”
(பதிற். 20) என்று பிறரும் கூறியிருத்தல் காண்க.“துளங்கிருங் குட்டந்
தொலைய  வேலிட்” டென்றது,  கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்
செய்தியையும்  நினைப்பிக்கின்றது.  “கோடு நரல்  பௌவங் கலங்க
வேலிட்,   டுடைதிரைப்   பரப்பிற்   படுகடலோட்டிய,  வெல்புகழ்க்
குட்டுவன்” (பதிற். 46) என வருதல் காண்க.
 

தொடக்கத்தே  சேரர்க்குப்  பணிந்தொழுகிய  கழுவுள்  என்பான்
பின்னர்,   வலிய   குதிரைகளை  யுடைய  அண்டர்களையும் வேறு
சிற்றரசர்களையும்     துணையாகக்     கொண்டு      பெருஞ்சேர
லிரும்பொறையை  யெதிர்த்துப்  பொரலுற்றான் என்பதை, “பொருமுர
ணெய்திய  கழுவுள்”  என்றும்,  அப்பொறையன்  முதலில் கழுவுளை
வென்று, அதுகண்டு வீற்று வீற்றஞ்சி யோடிய மன்னரைத் துணித்தும்,
அண்டரை   வெருட்டியும்  மேம்பட்டானென்றற்கு,  “கழுவுள்  புறம்
பெற்று” என்றும், “மன்னர் துணிய நூறி” யென்றும், “அண்டரோட்டி”
யென்றும்  கூறினார்.  கழுவுள்  அண்டர்கட்குத்  தலைவனென்பதும்,
அவன்  தருக்கினை  யழித்ததும், “ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலை
மடங்க”   (பதிற்.   71)  என்று  அரிசில்கிழார்  கூறி யிருப்பதனால்
அறியப்படும்.

நன்னனென்பான்   களங்காய்க் கண்ணி  நார்முடிச்சேரல் வாழ்ந்த
காலத்தில்   தன்  பெருவலியால்  தருக்கி  அவனை யெதிர்த்தானாக
சேரமான்   அவனுடைய   காவல்   மரமாகிய  வாகையைத்  தடிந்து
அவனையும்  வென்ற  செய்தியை, “சுடர்வீ வாகை நன்னற் றேய்த்து”
என்றார். அந்நார்முடிச் சேரலைப்  பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்
“பொன்னங்   கண்ணிப்  பொலந்தேர் நன்னன், சுடர்வீ  வாகைக் கடி
முதல் தடிந்த,  தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல்” (பதிற். 40) என்று
கூறுதல் காண்க.
 

அயிரை    யென்றது, அயிரை மலையிலுள்ள கொற்றவையை .இக்
கொற்றவையைச் சேரர் வீரரது விழுப்புண்ணிற் சொரியும் குருதி கலந்த
சோற்றுத்   திரளைப்   படைத்து  வழிபடுவது  மரபாதலின்,  “குருதி
விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோ, டுருகெழு மரபி னயிரை பரைஇ”
என்றார்  .  பிறரும்  அயிரைக்  கடவுளை, “நிறம்படு குருதி புறம்படி
னல்லது,  மடையெதிர்  கொள்ளா  வஞ்சுவரு  மரபிற்,  கடவுளயிரை”
(பதிற்.  79) என்று கூறுதல் காண்க. பல்யானைச் செல்கெழு குட்டுவன்
அயிரைக்  கடவுளைப்  பரவிய  செய்தியை “இருகடல் நீரு மொருபக
லாடி,  அயிரை பரைஇ” யென்று மூன்றாம் பத்தின் பதிகம்  கூறுகிறது.
பிறாண்டும்   இப்பாட்டினாசிரியர்,   “உருகெழு   மரபின்   அயிரை
பரவியும்” (பதிற். 90) என்று இச்செய்தியைக் குறிக்கின்றார்.

இளஞ்சேர   லிரும்பொறையின் முன்னோர் செய்த செயலெல்லாம்
குறித்துரைத்துப்  பாராட்டுகின்றா  ராதலின்  “பெரியோர்” என அவர்
தம்  பெருமையைப்  புலப்படுத்தார்.  இ்க்கூறிய  செயல்களால் ஏனை
வேந்தரும்    வேளிரும்   தலைதாழ்த்துப்   பணிபுரிவது   தோன்ற,
“வேந்தரும்   வேளிரும்   முன்வந்து   பணியக்   கொற்ற மெய்திய
பெரியோர் மருக” என்றார்.

இதுகாறும்    கூறியதனால், உலகத்து ஒன்னார் தேய, வேலிட்டும்,
முழுமுதல்  தடிந்தும், புறம் பெற்றும், தேய்த்தும், அயிரை பரைஇயும்
கொற்ற   மெய்திய   பெரியோர்   மருக   என்று  கூறி, இளஞ்சேர
லிரும்பொறையின் தனியாற்றலை  விளங்குதற்கு “வியலுளை யரிமான்
மறங்கெழு குரிசில்” என்றார்.

இனிப்     பழைய வுரைகாரர், “வையக மலர்ந்த தொழிலென்றது,
வையகத்திற்  பரந்த  அரசர்  தொழிலென்றவா”  றென்றும், “கடவுட்
பெயரிய  கானமென்றது, விந்தாடவியை”  யென்றும், “கடவுளென்றது,
ஆண்டுறையும் கொற்றவையினை” யென்றும், “கடவுளினென விரிக்க”
என்றும்,  “கல்லுயர  வெனத் திரிக்க” வென்றும், “அயிரை யென்றது
அயிரை மலையுறையும் கொற்றவையினை” யென்றும் கூறுவர்.

16 - 21. விரவுப் பணை.....................பொருந.

உரை : விரவுப்  பணை   முழங்கும்  -  பலவகை      இசைக்
 கருவிகளுடன் கலந்து   முரசுகள்   முழங்குகின்ற  ;  நிரை  தோல் 
வரைப்பின்  - வரிசையாகக்  கிடுகுகள் பரப்பிய  இ்டத்தினையுடைய; 
உரவுக்களிற்று  வெல்   கொடி  நுடங்கும்  பாசறை  -  உலாவுகின்ற 
களிறுகளின் மேல்நின்ற  வெற்றிக்கொடிகள்  அசையும்   பாசறையி்ல்; 
ஆர் எயில் அலைத்த  கல் கால்  கவணை - பகைவருடைய  அரிய 
மதில்களைச் சீர்குலைத்த கற்களை யெறியும் கவணைப் பொறியையும் ; 
நார் அரி நறவின்   -   நாரால்   வடிக்கப்பட்ட   கள்ளையுமுடைய;
கொங்கர்    கோவே -  கொங்கு      நாட்டவர்க்குத்   தலைவனே;

உடலுநர்     தபுத்த   பொலம்    தேர்க்குருசில்  -    மாறுபட்டுப்
பொருதவரையழித்த   பொன்னானியன்ற  தேரையுடைய   குரிசிலே ;
வளை  கடல்  முழவின் தொண்டியோர் பொருந - சங்குகளையுடைய
கடல்    முழக்கத்தை   முழவு   முழக்காகக்   கொண்ட  தொண்டி
நகரிலுள்ளார்க்குத் தலைவனே எ - று.

விரவுப்பணை முழங்கும் பாசறை, வரைப்பின் பாசறை, வெல்கொடி
நுடங்கும்   பாசறையென   இயையும்,   பலவகை   வாச்சியங்களின்
தொகுதியை  யுணர்த்தற்கு  “விரவுப்பணை”  யென்றும்,  பாசறையின்
எல்லையிடத்தே   வில்லும்  கேடகமும்  வேலியாக  நிரை நிரையாக
நிறுத்தப்படுவதுதோன்ற, “நிரை தோல் வரைப்பிற் பாசறை” யென்றும்,
யானை மேற் கொடி நிறுத்தல் பண்டையோர் மரபாதலின், அசைநடை
கொண்டு  உலாவும்  யானை  நிரையையுடைய  பாசறையை, “உரவுக்
களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை” யென்றும் கூறினார் .

பகைவர்   தம்  அரண்களைப்  பெரிய  கற்குண்டுகளை யெறிந்து
தாக்குதற்குக்    கல்    கால்   கவணைகள்   பல  பாசறையிடத்தே
அமைக்கப்பட்டிருப்பது   காண்க.   மதிலிடத்தே   யமைக்கப்பெறும்
பல்வகைப்     பொறிகளோடு,     படைகொண்டு    செல்லுமிடத்து
உடன்கொண்டு   போகப்படும்   பொறிகளும்   இருந்தன  என்பதும்,
அவற்றுள்  கல்  கால் கவணை  சிறப்புடைத்தாதல்  பற்றி,  அதனை
எடுத்தோதினா    ரென்பதும்    இதனால்   அறியலாம்.  பண்டைக்
கிரேக்கரும்   உரோமரும்   கொண்டு  பொருத  கல்  கால் கவணை
பண்டைச்    சேரரிடத்தும்    இருந்தமை    இதனால்   விளங்கும்.
பெருங்கற்களை  வைத்து  நெடுந் தொலையில்  மிக விரைய  எறிந்து
பகைவர்   அரண்களைச்   சீரழித்து  வலியழிக்கும்  இயல்புபற்றியும்,
மக்களால் எறியப்படும் கவண் போலாது பொறிதானே பெருங்கற்களை
வீசி யெறிவது பற்றியும் “கல் கால் கவணை” யென்றார்.  இச்சிறப்பால்
இஃது   இப்பாட்டிற்கும்  பெயராயிற்று.  இன்னோரன்ன பொறிகளின்
அமைப்பு,   வடிவு  முதலியவற்றைப்  பற்றிய  எழுத்தோ ஓவியமோ
கிடைக்காமையால்   வேறொன்றும்   இதனைப்பற்றிக்   கூறற்கில்லை.
பழையவுரைகாரர்,   “கல்   கால்   கவணை   யென்றது  கற்களைக்
கான்றாற்போல  இடையறாமல் விடும் கவணென்றவா” றென்றும், இச்
சிறப்பானே   இதற்குக்   “கல்  கால்  கவணையென்று   பெயராயிற்”
றென்றும் கூறுவர்.

கவணைப்      பொறிகொண்டு      பகைவரை       யெறியும்
கொங்கர்ப்படையினர்,  போர்வெறி  மிகுதற் பொருட்டுக் கள்ளுண்டல்
தோன்ற,   “நாரரி  நறவிற்  கொங்கர்”  என்றார்.  உடலுநர்த் தபுத்த
குருசில்,   பொலந்  தேர்க்  குருசில்  என்க. தொண்டி  -  மேலைக்
கடற்கரையிலுள்ளதும்  சேரர்க்  குரியதுமாகிய  பேரூர். அங்கே சங்கு
மேயும்  கடலின்  முழக்கம்  மிக்கிருத்தல் பற்றி, “வளைகடல் முழவிற்
றொண்டியோர்  பொருந”  என்றார்.  பொருந  என்பது, போர்வீரனே
என்னும் பொருட்டு.

21 - 38. நீ நீடுவாழி......................பன்னாள்.

உரை :   துவைத்த   தும்பை   நனவுற்று   வினவும்  மாற்றரும்
தெய்வத்துக்  கூட்டம்  முன்னிய  -  பல வாச்சியங்கள் முழங்குகின்ற
தும்பைசூ     டிச்     செய்யும்     போரின்கண்    மெய்ம்மையாக
வெற்றியுண்டாதல்வேண்டிப்     பரவப்படும்        மாற்றுதற்கரிய தெய்வமாகிய                கொற்றவை           கூடியிருக்கும்
மலையாகிய      அயிரையிடத்தே    தோன்றிய ;   புனல்     மலி
பேர்  யாறு இழிதந்  தாங்கு - நீர் நிறைந்த பெரிய யாறானது இறங்கி
வந்தாற்போல  ; நின் வயின் வருநர் வரையா நின்னை நோக்கி வரும்
இரவலர்க்கு வரையாது வழங்கும் ; செழும்பல் தாரம் கொளக் கொளக்
குறையாது   தலைத்தலைச்   சிறப்ப  -  செழுமையாய்ப்  பலவாகிய
பொருள்கள்  அவ்  விரவலர்  கொள்ளக்  கொள்ளக் குறைவுபடாமல்
மிக்கு   விளங்க   ;  ஓவத்தன்ன  உருகெழு  நெடுநகர்  -  ஓவியத்
தெழுதினாற்  போன்ற உருவமைந்த நெடிய அரண்மனைக் கண்ணே ;
பாவையன்ன  மகளிர் நாப்பண் - கொல்லிப் பாவை போலும் உரிமை
மகளிரின்  நடுவே  ;  மாகம்  சுடர  மா  விசும்பு  உகக்கும் - திசை
யெல்லாம்  ஒளி  விளங்கக்  கரிய  வானத்தே  உயர்ந்து  செல்லும் ;
ஞாயிறு  போல  - சூரியன் போல ; பன்னாள் விளங்குதி - பலகாலம்
விளங்கி  வாழ்வாயாக  ;  புகன்ற மாண்பொறி - ஆடவர்க்குச் சீர்த்த
இலக்கணமாக   நூல்களிற்   கூறப்பட்ட   மாட்சிமைப்பட்ட  வரிகள்
பொருந்திய   ;   பொலிந்த  சாந்தமொடு  -  பூசப்பட்டு  விளங்கும்
சந்தனத்தோடு  ;  தண்  கமழ்  கோதை  சூடி - தண்ணிதாய் மணங்
கமழும்  முத்துமாலையை  யணிந்து  ;  பூண்  சுமந்து - தோள்வளை
முதலிய  பேரணிகளை  யணிந்து ; திரு வில் குலைஇ - வானவில்லை
வளைத்து ; திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை  சேர்ந்து
-   மாணிக்க  மணிபோலச்  செந்நிறங்  கொண்டு  திகழும் மின்னல்
முதலியவற்றின்  தொகுதியவாகிய  பெருமுகில் சேர்தலால் ; வேங்கை
விரிந்து  -  வேங்கை  மலர்ந்து  ;  விசும் புறு சேண் சிமை அருவி
அருவரையன்ன  மார்பின்  -  வானளாவி மிக வுயர்ந்த சிகரத்தையும்
அருவிகளையுமுடைய  அரிய  மலைபோன்ற மார்பினையுடையனாய் ;
நல்லிசை  சேணாறும்  சேயிழை  கணவ - கற்புடைமையாலுண்டாகிய
நல்ல   புகழானது   நெடுந்   தொலைவு  சென்று  பரவிய செவ்விய
இழையணிந்தாட்குக்  கணவனானவனே  ; பெரும - பெருமானே ; நீ
நீடுவாழி - நீ நெடிது வாழ்வாயாக எ - று.
 

தெய்வம்     கூடியிருக்கும்    இடமாகிய   அயிரை  மலையைத்
“தெய்வத்துக்     கூட்டம்”    என்றார்.    கூடுதற்கமைந்த   இடம்
கூட்டமென்றது   ஆகுபெயர்.   தெய்வம்,   கொற்றவை.  போர்க்குச்
செல்லும்போது   போரிலே  வெற்றியுண்டாதல்  வேண்டிச்  சேரர்கள்
அயிரை மலைக் கொற்றவையைப் பரவுவது பற்றி, “நனவுற்று வினவும்”
என்றும்,  தும்பைப்  போரில்  பலவகை  வாச்சியங்கள் முழங்குதலின்
“துவைத்த தும்பை” யென்றும் கூறினார். தும்பைப் போரில் விளையும்
வெற்றியாகிய  பயன்  குறித்தலின்,  தும்பை ஆகுபெயர். குருதியொடு
விரவியதல்லது  பிறவகையால் தரப்படும் மடையினை யெதிர்கொள்ளா
மரபிற்றாதலின்,    “மாற்றருந்தெய்வம்”    என்றார்    ;   எனவே,
இவ்வகையானன்றி     வேறு     வகையால்     மாற்றற்கில்லாத
சினத்தையுடையள் என்பது கருத்தாயிற்று.
 

முன்னிய     தோன்றிய ; முன்னென்னும் சொல்லடியாகப் பிறந்து
முற்பட்டுத்    தோன்றிய    என்னும்    பொருட்டாய  பெயரச்சம்,
பேரியாறென்னும்  பெயர்  கொண்டது.  இனித் தெய்வத்தென்பதனால்
தெய்வத்தின்   இடமாகிய   அயிரை   மலையைக்கொண்டு, கூட்டம்
முன்னிய     என்றதற்குக்     கடலைக்     கூடுதற்குக்    கருதிய
என்றுரைத்தலுமொன்று  . பேரியாறு இழிதந்தாங்கு நின்வயின் வருநர்
என   இயையும்   ;   “மலையினிழிந்து  மாக்கடனோக்கி,  நிலவரை
யிழிதரும்  பல்யாறு போலப், புலவரெல்லா நின்னோக் கினரே” (புறம்.
42)  எனப்  பிறரும்  கூறுதல் காண்க.  இறைத்தோறும் கிணறூறுவது
போலச்   செல்வம்  கொடுக்கக்  கொடுக்கக்  குறைபடாது பெருகுதல்
கண்டு,  “செழும்பல்தாரம்  கொளக் கொளக் குறையாது தலைத்தலைச்
சிறப்ப” என்றார்.

ஓவம்,    ஓவியம். ஓவியத் தெழுதியபோலும் அழகமைந்தமையின்,
“ஓவத்தன்ன   வுருகெழு  நெடுநகர்”  என்றார். அம்மனைக்கண்ணே
யிருந்து  அதற்கு  விளக்கந்தரும் மகளிரனைவரும் கொல்லிப் பாவை
போலும் உரு நலமுடையரென்றற்குப் “பாவை யன்ன மகளி” ரென்றார்.
“ஓவத்தன்ன   விடனுடை  வரைப்பிற்,  பாவை  யன்ன  குறுந்தொடி
மகளிர்”  (புறம்.  251)  என்று  பிறரும்  கூறுப. பாவையன்ன மகளிர்
நாப்பண், ஞாயிறு போல விளங்குதி என இயையும்.

ஆடவர்க்கு     மார்பிடத்தே   பொறிகள்  கிடத்தல்    சீர்த்த
இலக்கணமாதலின், “புகன்ற  மாண்  பொறி” என்றும், அம் மார்பில்
சாந்தம்  பூசி  முத்துமாலை  யணிந்திருப்பது தோன்ற, “சாந்தமொடு
தண்கமழ்    கோதை   சூடி”   யென்றும்,   தோள்வளை முதலிய
பேரணிகளைப்  “பூண்  சுமந்து”  என்றும்  கூறினார்.இத்துணையும்
மார்பினைச்  சிறப்பித்தவர்,  அதன்  பெருமையை விளக்குமாற்றால்,
கார்வர   விளங்கும்  மலையொன்றினை  யுவமமாகக்  கூறுகின்றார்.
மலையுச்சியி்ல் இந்திர வில்லும் மின்னுத் தொகுதியும் கொண்ட மழை
முகில்    தவழ,   பக்கத்தே   வேங்கை   மரங்கள்   பூத்து நிற்க,
அவற்றினிடையே  மலையுச்சியினின்று அருவிகள் வீழும் காட்சியைக்
காட்டி இவ்வியல்பிற்றாய மலைபோலும் மார்பை யுடையான் என்பார்,
“அருவியருவரை  யன்ன  மார்பின்” என்கின்றார்.  மாண் பொறியும்
சாந்தப்    பூச்சும்   முத்துமாலையும்   பேரணிகலன்களும்  சேரன்
மார்பின்கண்   உளவாகக்  கண்டு  கூறுவார்,  திருவி்ல்லும் மின்னுத்
தொழுதியும்  கொண்ட மழை முகிலை யுவமம் கூறி, முத்துமாலையை
யருவியாகவும்  சாந்தப்  பூச்சினைப்  பூத்த வேங்கையாகவும் கருதிக்
கூறுவது மிகப் பொருத்தமாக வுளது.

ஆடவர்க்குளவாகும்   சிறப்பும் சீர்மையும  அவர்தம் மனைமாண்
மகளிரின்  கற்பாற் பிறக்கும் புகழாலாதலின், அதனை யுடன் கூறுவார்,
“சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ” என்றார்.

இனிப்     பழைய  வுரைகாரர்,  “துவைத்த  தும்பை   யென்றது
எல்லாராலும்   புகழ்ந்து   சொல்லப்பட்ட  தும்பைப்போர்”  என்றும்
“நனவுற்று  வினவும்  தெய்வமென்றது அத்தும்பைப் போரை நினக்கு
வென்றி  தருதற்கு  மெய்ம்மையுற்று வினவும் கொற்றவை” யென்றும்,
“தெய்வத்துக்   கூட்ட   முன்னிய  யாறென்றது  அத்தெய்வம்  கூடி
யுறைதலையுடைய    அயிரை    மலையைத்    தலையாகக்கொண்டு
ஒழுகப்பட்டயா”   றென்றும்,    “தெய்வம்    கூடியுறைதலையுடைய

அயிரை            தெய்வத்துக்              கூட்டமெனப்பட்ட”
தென்றும்,    “இழிந்தாங்கென்றது    அவ்    யாறு   மலையி்னின்று
இழிந்தாற்போல” என்றும், “பொறி யென்றது உத்தம விலக்கணங்களை”
யென்றும்,   “பொறியொடு  சாந்தமொடுவென  ஒடுவை யிரண்டற்கும்
கூட்டியுரைக்க”   வென்றும்,   “ஒடு   வேறுவினையொடு”   என்றும்,
“கோதையென்றது  முத்தாரத்தினை” யென்றும், “சூடிச் சுமந்தென்னும்
வினையெச்சங்களை     வரையன்ன     வென்பதனுள்      அன்ன
வென்பதனோடு  முடிக்க”  என்றும்  கூறி, இப் பகுதிக்கு வினைமுடிபு
காட்டலுற்று,     “விற்குலைஇ     வேங்கை     விரிந்து   என்னும்
வினையெச்சங்களைத்  திரித்து வில் குலவ வேங்கை விரியத் திருமணி
புரையும்  உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து விசும்புறு சேட்சிமை
அருவியருவரை   என   மாறிக்   கூட்டி,   இதனைக்  குறைவுநிலை
யுவமையில் வழுவமைதியாக்கிப் பொறிக்கு வேங்கைப்பூ உவமமாகவும்,
கோதைக்குத்  திருவில்  உவமமாகவும் பூணிற்கு அருவி யுவமமாகவும்
சாந்திற்கு   உவமமில்லையாகவும்   உரைக்க”   என்றும், “இவ்வாறு
இடர்ப்படாது மலையை யுரைப்பினு மமையு” மென்றும் கூறுவர் .

மாகம்,     திசை, இனி, நிலத்துக்கும் விசும்புக்கும் இடையிலுள்ள
வெளியிடமென்றுமாம்.   “உகப்பே   யுயர்தல்”   (தொல்.   உரி.  9)
என்பவாகலின்,   நண்பகலில்  நெடுந்தொலையில்  விசும்பி  லுயர்ந்து
விளங்குதல்  பற்றி, “மாவிசும் புகக்கும்” என்றார் . “வருநர் வரையாச்
செழும்பல்  தாரம்  தலைத்தலைச்  சிறப்ப,  “நெடுநகரிடத்தே பாவை
போலும் உரிமை மகளிரிடையே நெருஞ்சியை மலர்க்கும் ஞாயிறுபோல
அவர்   மனமும்  முகமும்  காதலன்பால்  மலரநின்று  விளங்குமாறு
விளங்குக  என்பார், குறிப்பால், “ஞாயிறுபோல விளங்குதி” யென்றார்.
சேரனை     ஞாயிறென்றாற்    போல    மகளிரை    நெருஞ்சிப்பூ
வென்னாமையின்  இஃது  ஏக  தேச  வுருவகம். நெருஞ்சி ஞாயிற்றை
நோக்கி   மலர்ந்திருப்பது  போல,  இம்மகளிரும்  இவனை  நோக்கி
மலர்ந்திருப்ப ரென்பது.

“நீ     நீடுவாழிய பெரும” என வாழ்த்துதலின், நெடிது  வாழும்
வாழ்நாட்கள்    பலவினும்    ஞாயிறுபோல    விளங்குக  என்பார்,
“ஞாயிறுபோல விளங்குதி பன்னாள்” என்றார் . “விளங்குதி யென்பது
ஈண்டு முன்னிலை யேவ” லெனப் பழையவுரை கூறுகிறது.

39 - 42. ஈங்கு.........................கிழவோயே .

உரை :  உறு கால் எடுத்த ஓங்குவரற்   புணரி - மிக்க காற்றால்
எழுப்பப்பட்ட  வுயர்ந்து  வரும்  அலைகள்; நுண்மணல் அடைகரை
யுடைதரும்  -  நுண்ணிய  மணல்  பரந்த  கரையினை யலைக்கும் ;
தண்கடற்  படப்பை நாடுகிழவோய் - குளிர்ந்த கடற் பக்கத்தையுடைய
நாட்டுக்  குரியோனே ;  ஈங்கு யான் காண்கு வந்திசின் இவ்விடத்தே
யான்   நின்னைக்   கண்டு   நின்  புகழ்  பரவுவதற்கு  வந்தேன் ,
வறுமையுற்று நின்பால் ஒன்றை இரத்தற்கு வந்தேனில்லை எ - று.

பெரியோர்     மருக,  மறங்கெழு  குருசில்,  கொங்கர் கோவே,
பொலந்தேர்க்  குருசில்,  தொண்டியோர்  பொருந, பெரும, சேயிழை
கணவ, நாடு  கிழவோய், நீ   நீடுவாழிய,     வாழும்  நாள் பலவும்,
நின்பால்,       வருநர்      வரையாச்      செழும்பல்     தாரம்
கொளக்    கொளக்   குறையாது   தலைத்    தலைச்       சிறப்ப,
நெடுநகர்க்கண்   பாவையன்ன   மகளிர்  நாப்பண்,  ஞாயிறு  போல
விளங்குதி  யென்று  கூறவே,  “செழும்பல்  தாரம்  கொளக் கொளக்
குறையாது    தலைத்தலைச்    சிறப்ப”    என்ற    குறிப்பேதுவாக,
இளம்பொறை,         ஆசிரியர்க்கு      மிக்க        பொருளை
வழங்கச்சமைந்தானாதலின்,  அக்குறிப்பறிந்  துரைப்பாராய்,  “ஈங்குக்
காண்கு வந்தனென் யான்” என்றார்.
 

“ஓங்குவரற் புணரி” யென்றலின், அதற்கேதுவாக,“உறுகால் எடுத்த”
என்றும்,   அவ்வுயரிய  அலைகளைத்  தடுத்தற்குரிய  கல்  நிறைந்த
கரையில்லையென்றதற்கு, “நுண் மணலடை கரை” யென்றும், அதனால்
கரை   முற்றும்   தெங்கும்  கமுகும்  வாழையும்  சிறந்து  படப்பை
போறலின், “தண்கடற் படப்பை நாடு” என்றும் சிறப்பித்தார். படப்பை,
வளவிய தோட்டம்.

செழும்பல் தாரம் வருநர் வரைவின்றிப் பெறத் தருதலால் குன்றாத
செல்வம்  இடந்தொறும்  மிக்குறுக என்பார், “தலைத் தலைச் சிறப்ப”
என்றாராகலின்,  அதற்குரிய  ஏதுவினை,  உள்ளுறுத் துரைத்திருப்பது
மிக்க   இன்பம்   பயக்கின்றது.   உறுகாலெடுத்த  ஓங்குவரற் புணரி
யென்றதனால்,  பகைவரது  பகைமைச்  செயல்  மிகுதலால் வீரத்தால்
வீறு  கொண்டு  செல்லும்  நின் தானை யென்றும், அவ்வலைகளைத்
தடுக்க இயலாத நுண்மணலடைகரை யுடைவதுபோல, நின் தானையை
யெதிரேற்றுப் பொரும்வலியில்லாத மெலியோர் திரண்ட பகைவர்திரள்
தோற்றோடும் என்றும் உள்ளுறுத் துரைத்திருத்தலை நுண்ணுணர்வாற்
கண்டுகொள்க.

இதுகாறுங்     கூறியவாற்றால், மலர்தலை யுலகத்து ஒன்னாராகிய
கடம்பர்  தேய  வேலிட்டும்,  கடம்பின் முழுமுதல் தடிந்தும், கழுவுள்
புறம்  பெற்றும்,  அண்டரோட்டி நன்னற் றேய்த்தும், குருதி விதிர்த்த
குவவுச் சோற்றுக் குன்றோடு அயிரை பரவியும், வேந்தரும் வேளிரும்
பணியக்  கொற்ற  மெய்தியும்  சிறந்த  பெரியோர்  மருக, மறங்கெழு
குருசில்,  பாசறையிடத்துக்  கல்  கால் கவணையும், நறவையு முடைய
கொங்கர்  கோவே,  பொலந்தேர்க் குருசில்,  தொண்டியோர் பொருந,
பெரும,  நீ  நீடு வாழ்வாயாக  ;  மாண் பொறியோடு சாந்த மணிந்து
கோதை  சூடிப்  பூண்  சுமந்து  அருவி  யருவரை யன்ன மார்பினை
யுடையையாய்,   நல்லிசைச்  சேயிழை  கணவனாகியோனே,  வருநர்
வரையாச்    செழும்பல்    தாரம்   கொளக்   கொளக்  குறையாது
தலைத்தலைச்  சிறப்ப,  உருகெழு  நெடுநகர்க்கண்  மகளிர் நாப்பண்,
மாகம்  சுடர  மாவிசும்புகக்கும் ஞாயிறுபோலப் பன்னாள் விளங்குதி ;
தண்கடற் படப்பை நாடு கிழவோய், ஈங்கு பான் காண்கு வந்தனென் ;
வேறே  இன்மை துரப்ப இரத்தற்கு வந்தேனில்லை என்பதாம்.  இனிப்
பழையவுரைகாரரும்,  “பெரியோர் மருக, மறங்கெழு குருசில், கொங்கர்
கோவே,   பொலந்தேர்க்குருசில்,   தொண்டியோர்  பொருந, பெரும,
சேயிழை கணவ, நாடு கிழவோய், ஈங்கு நிற்காண்கு வந்தேன் ; நீ நீடு
வாழ்வாயாக  ; பலதாரம் கொளக் கொளக் குறையாமற் சிறப்ப மகளிர்
நாப்பண்  பன்னாள்  ஞாயிறுபோல  விளங்குவாய் என மாறிக் கூட்டி
வினை முடிவு செய்க” என்பர்.
 

இதனாற்     சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் காமவின்பச்
சிறப்பும்  உடன்  கூறி  வாழ்த்தியவா  றாயிற்றென்பது பழையவுரைக்
கருத்து.


 மேல்மூலம்