முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
89.



வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப்
புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப்
பழனுங் கிழங்கு மிசையற வறியாது
 5




பல்லா னன்னிரை புல்லருந் துகளப்
பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற்
பெரும்பல் யாணர்க் கூலங் கெழும
நன்பல் லூழி நடுவுநின் றொழுகப்
பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின்
 10




நாளி னாளி னாடுதொழு தேத்த
உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்
டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது
 15




கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத்
தகர நீவிய துவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
 20 வாணுத லரிவையொடு காணவரப் பொலிந்தே.

     துறை - காவன் முல்லை. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - துவராக் கூந்தல்
(16)

     (ப - ரை) 4. மிசை அறவு அறியாமலெனத் திரிக்க.

     8. நடுவென்றது நடுவுநிலைமையை. 12. பிழையாமலெனத்
திரிக்க.

     16. துவராக்கூந்தலென்றது எப்பொழுதும் தகரமுதலியன
நீவுகையால் ஈரம் புலராத கூந்தலென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, ‘துவராக் கூந்தல்’ என்று பெயராயிற்று.

     உறையுளொடு (15) நெஞ்சம் புகர்படுபு அறியாது (14) என
மாறிக் கூட்டி அறியாதென்பதனை அறியாமலெனத் திரித்து அதனைப்
புரையும் (19) என்றதனோடு முடிக்க.

     உறையுளொடு மீனொடுவென நின்ற ஒடுக்கள்
வேறுவினையொடு.

     பல்வேலிரும்பொறை, நின்கோல் செம்மையாலே (9), வானம்
சுரப்பக் கானம் (1) ஏறு புணர்ந்து இயலச் (2) சினையிற் புள்ளும்
மிஞிறும் ஆர்ப்பப் (3) பழனும் கிழங்கும் மிசையறவறியாதொழிய
(4) ஆனிரை புல்லருந்துகளக் (5) கூலம் கெழும (7) ஊழி நடுவுநின்று
ஒழுக (8) நாடு தொழுதேத்த (10) உயர்நிலையுலகத்து உயர்ந்தோர்
பரவ (11) அரசியல் பிழையாதொழியாச் செருவில் மேம்பட்டுத்
தோன்றி (12) நீ (13) நின் அரிவையோடு பொலிந்து (20)
நோயிலையாகியர் (13) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் நாடுகாவற்சிறப்புக் கூறி
வாழ்த்தியவாறாயிற்று.

     அவ்வாறு நாடுகாவல் கூறினமையால், துறை
1காவன்முல்லையாயிற்று.

     (கு - ரை) 1. மேகம் உரிய காலத்தில் மழையைப் பெய்ய;
பொழுதொடு - பொழுதில் ; வேற்றுமைமயக்கம்.

     1-2. காட்டில் இனமாகப் பொருந்திய மடப்பத்தையுடைய
பெண்மான் ஆண்மானோடு கூடிச் செல்ல.

     3. பறவைகளும் வண்டுகளும் பெரிய மரக்கிளைகளில்
ஆரவாரிப்ப; மழை பெய்தபின் பறவைகள் ஒலித்தல் : பதிற்.
84 : 24.

     4. பழங்களும் கிழங்குகளும் உண்ணப்படுதல்
அற்றுப்போதலை அறியாமல்; என்றது இரண்டும் இடையறாது
எப்பொழுதும் உண்ணுதற்குரியனவாகிக் காலமல்லாத காலத்திலும்
கிடைக்குமென்றபடி.

     5. பலவாகிய பசுக்களின் நல்ல தொகுதி புல்லை மேய்ந்து
களிப்பால் துள்ள ; ஆர்ந்தென்பது அருந்தெனக் குறுக்கல் விகாரம்
பெற்றது; ‘உண்டார்ந்தென்பது உண்டருந்தெனக் குறுகி நிற்றலிற்
குறுக்கும் வழிக்குறுக்கல்’ (தொல். எச்ச. 7, சே.)

     6-7. பயன் ஒழிதலை அறியாத வளம்பொருந்திய
சிறப்பினையுடைய பெரிய பலவாகிய புதுவருவாயையுடைய பல
தானியங்கள் நெருங்க.

     8. நல்ல பலவான ஊழிகள் நடுவுநிலைமையால் நிலைபெற்று
நடப்ப; “நல்லூழி யடிப்படர” (மதுரைக். 21). 9. பலவாகிய
வேற்படையையுடைய இரும்பொறை, நினது ஆட்சி
செவ்வியதாகையாலே.

     9. பல்வே லிரும்பொறை : “பல்வேன் மன்னன்” (மதுரைக்.
234)

     செங்கோற் சிறப்பால் மழை தவறாமற் பெய்தல் முதலியன
நிகழ்தல் புறநா. 117.

     10. நாள்தோறும் நாள்தோறும் நாட்டிலுள்ளார் நின்னைக்
கையால் தொழுது நாவால் புகழும்படி. நாளினாளினென்பது,
‘நாட்டினாட்டி னூரினூரின்” (குறுந். 130 : 3) என்பது போல நின்றது.

     11. உயர்ந்த நிலையையுடைய உலகத்திலுள்ள தேவர் புகழ;
தேவர் புகழ்தற்குக் காரணம் சேரநாடும் தம் உலகம்போல
விளங்குதல்; “மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே,
புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டு வந்து” (புறநா. 22 : 34-5) ;
தமக்குச் செய்யும் கடன்களை உரிய காலத்தே குறைவின்றிச்
செய்தலும் ஒரு காரணமாம்.

     12-3. இராசதருமம் தவறாமல் போரிலே மேம்பட்டுத் தோன்றி,
நீ நோயில்லை ஆகுக.

     13-5. நின்னிடத்தே ஒடுங்கிய மனம் குற்றப்படுதலை அறியாமல்
கனவின் கண்ணும் பிரியாத உறைதலோடு.

     16. துவர்தல் - உலர்தல் (குறிஞ்சிப். 60)

     15-7. குளிர்ச்சி யடையும்படி மயிர்ச்சாந்து தடவப்பட்ட,
எப்பொழுதும் ஈரம் புலராத கூந்தலையுடைய மணமகளிர்
நோக்கினராய் மறுபடியும்.

     18-20. வாழ்நாளை அறிந்து கொள்ளுதற்குக் காரணமான
விளங்குகின்ற ஒளியை நோக்குதலையுடைய அருந்ததியோடு ஒத்த
கற்பினையும், ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய நின்
தேவியோடு அழகுபொருந்த விளங்கி. அரிவை: பருவப் பெயரன்று ;
பெண்பாற் பெயர். அருந்ததியால் வாழ்நாளை அறிதல்: “உலந்தநா
ளவர்க்குத் தோன்றா தொளிக்குமீன் குளிக்குங் கற்பு” (சீவக. 2141)

     இரும்பொறை (9), அரிவையொடு பொலிந்து (20) நீ நோயிலை
ஆகியர் (13) என முடிக்க.

     (பி - ம்) 9. இரும்பொறைகோஓல். 18. வாழுநாள். (9)


     1பு. வெ. 178 - 9.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

9. துவராக் கூந்தல்
 
89.வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப்
புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப்
பழனுங் கிழங்கு மிசையற வறியாது
 
5பல்லா னன்னிரை புல்லருந் துகளப்
பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற்
பெரும்பல் யாணர்க் கூலங் கெழும
நன்பல் லூழி நடுவுநின் றொழுகப்
பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின்
 
10நாளி னாளி னாடுதொழு தேத்த
உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்
டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது
 
15கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத்
தகர நீவிய துவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
 
20வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே .

துறை  : காவன் முல்லை.
வண்ணமும் தூக்கு மது.
பெயர்  : துவராக் கூந்தல் .

1 - 8. வானம்......................ஒழுக .

உரை :  வானம் பொழுதொடு சுரப்ப - மழை உரிய  காலத்திலே
தப்பாது  பொழிய  ; கானம் தோடுறு மடமான் ஏறு புணர்ந்து இயல -
காட்டிடத்தே  தொகுதிகொண்ட மடப்பம் பொருந்திய பிணைமான்கள்
தத்தம் ஆணொடுகூடி இனிது செல்ல ; புள்ளும் மிஞிறும்  மாச்சினை

யார்ப்ப     - பறவைகளும்  வண்டினமும்     மரக்கிளைகளிலிருந்து
ஆரவாரிக்க  ;  பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது - பழங்களும்
கிழங்குகளும்  பலரும் பலவும் உண்டலாற் குறைவுபடாவாக ; பல்லான்
நல் நிரை புல் அருந்து உகள - பலவாகிய நல்ல ஆனிரைகள் புல்லை
மேய்ந்து  களித்துலவ  ; பயங்கடை அறியா வளம் கெழு சிறப்பின் -
வறுமை யறியாத வளம்பொருந்திய சிறப்பினால் ; பெரும்பல் யாணர்க்
கூலம் கெழும - பெரிய பலவாகிய புதுப்புதுக் கூலங்கள் பெருக ; நல்
பல ஊழி நடுவு நின்று ஒழுக - நல்ல பலவாகிய ஊழிகள் செம்மையிற்
றிறம்பாது நிலை பெற்றொழுக எ - று.

பொழுதொடு ; உருபு மயக்கம். உரிய காலத்திற் றவறாது பொழிவது
தோன்ற,  “வானம்  பொழுதொடு  சுரப்ப”  என்றார் ; எது தவறினும்,
பொழுதுகள்,  தவறாது போந்து நிகழ்வன நிகழ்தற் கேதுவாதல் போல,
மழையும்  உரிய  காலத்திற்  றவறாது  போந்து பொய்யாது பொழிவது
தோன்ற,  “பொழுதொடு சுரப்ப” என்றாரென்றும், ஒப்புப் பொருட்டாய
இன்னுரு   பிடத்தே   ஒடுவுருபு   வந்து  மயங்கியதென்றும்  கூறினு
மமையும் .

தோடு,    தொகுதி, மடமானினம், கானம் மழை பெய்து தழைத்து
விளங்குதலின் வேண்டும் மேயலை நன்கு மேய்ந்து தத்தம் ஆணொடு
கூடி  யினிதிருந்தியலும்  என்றது  இன்பச் சிறப்பினை   ணர்த்திற்று.
மானினம்   துணையொடு   கூடிக்   காம   வின்பந் துய்க்குங்காலம்
கார்காலமாதலின், “மடமான்  ஏறு புணர்ந்தியல” என்றார் ; ‘கார்பயம்
பொழிந்த   நீர்   திகழ்காலை,   ததர்தழை   முனைஇய  தெறிநடை
மடப்பிணை,  ஏறுபுணருவகைய  வூறில வுகள” (அகம். 234) என்றும்,
“வானம்  வாய்ப்பக்  கவினிக்  கானம்,  கமஞ்சூல் மாமழை கார்பயந்
திறுத்தென,  திரிமருப்  பேற்றொடு  கணைக்கா  லம்பிணைக்,  காமர்
புணர்நிலை”  (அகம்  134) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இனி,
அம்சதேவ  ரென்னும்  சமண்  சான்றோர்,  தாமெழுதிய மிருக பக்ஷி
சாஸ்திரத்தில்,  மானினம் வேனிற் காலத்திற்றான் காமவின்பந் துய்க்கு
மென்றும்,   அவற்றின்   கருப்பக்   காலம்   ஐந்து திங்களென்றும்
கூறுகின்றார்.

மழை     பெய்தபின்  மரந்தொறும்  புள்ளினமும்  வண்டினமும்
பேராரவாரம்  செய்வ  தியல்பாதலால், “புள்ளும் மிஞிறும் மாச்சினை
யார்ப்ப”   என்றார்  ;  “கல்  சேர்பு  மாமழை  தலைஇப்,  பல்குரற்
புள்ளினொலியெழுந்  தாங்கே” (பதிற். 84) என்று பிறாண்டு மோதுதல்
காண்க.

பழவகையும்     கிழங்குவகையும் எப்போதும் இடையறவு  படாது
கிடைத்தலின்,   “பழனுங்   கிழங்கு   மிசையற  வறியாது”  என்றார்.
அறியாதென்பதைத்   தனித்தனிக்  கூட்டுக.  மக்கட்கும்  மாக்கட்கும்
உணவாய்ப் பயன்படுவது பற்றி, “மிசை” யென்றார்.

உகளல், துள்ளி விளையாடுதல் . பசும்புல் வளமுற வளர்ந்து கான
முழுதும்  கவினுற  லிருத்தலின்,  அதனை  ஆர மேய்ந்த ஆனினம்
தருக்கி  விளையாடுகின்றன  வென்பார்,  “புல்லருந்  துகள” என்றார்.
ஆர்ந்தென்பது    அருந்தென       விகாரமாயிற்று .    பாவத்தை
அறங்கடை   யென்பது போல  வறுமையைப்  பயங்கடை  யென்றார்;
“அறன் கடைப்படாஅ வாழ்க்கையும்” (அகம். 155) என்று  சான்றோர்
கூறுதல் காண்க.   இன்ன   நலங்கட்கிடையே  “வறுமை”  என்னாது,
மங்கல மரபாற் “பயங்கடை” யென்றாரென வறிக.
 

பலவாய்  மிக்குற்ற புது வருவாயாகிய கூலங்க ளென்பது, “பெரும்
பல் யாணர்க் கூலம்” எனப்பட்டது. பெருமை மிகுதி மேலும், பன்மை
வகை மேலும், யாணர் புதுமை மேலும் நின்றன. கார் காலத்து விளை
பயனாதலின், இவ்வாறு சிறப்பித்தாரென வறிக.

இக்    கூறியவாறு வளம் பலவும் பல்லூழி காலமாகக் குறைவின்றி
நிலைநின்  றொழுகுதல்  தோன்ற, “நன் பல்லூழி நடுவு நின் றொழுக”
என்றார்.  நடுவு  நின்  றொழுகுதலின்றி,  சகடக்கால்  போல் மிக்கும்
குறைந்தும்    இன்றாகியும்   ஒழுகுவது   இயல்பாதலின்,   அதனை
விலக்குதற்கு,    “நடுவு   நின்றொழுக”   என்றார். பல்லூழிதோறும்
அதனோெ்டாட்டி நன்கொழுகியதால், செல்வம் நிற்பதாயிற்றென் றறிக;
“பருவத்தோ  டொட்ட  வொழுகல்  திருவினைத், தீராமை யார்க்குங்
கயிறு” (குறள். 482) என்று சான்றோரும் கூறுதல் காண்க.

இனி,  பழையவுரைகாரர்,  “மிசையறவு  அறியாமலெனத்  திரிக்க”
என்றும், “நடு வென்றது நடுவு நிலைமையை” யென்றும் கூறுவர்.

9 - 11. பல் வேல்.......................பரவ .

உரை : பல் வேல் இரும்பொறை- பலவாகிய வேற்படையையுடைய
இரும்பொறையே  ;  நின்  கோல்  செம்மையின்  - நினது அரசியன்
முறை  செம்மையாக நடத்தலால்; நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த
-  நாடோறும் நாட்டவரெல்லாம்  நின்னைத் தொழுது பரவுவதாலும் ;
உயர்நிலை  யுலகத்து  உயர்ந்தோர்  பரவ  உயர்ந்த  நிலைமையினை
யுடைத்தாகிய   தேவருலக   வாழ்வுக்குரிய   ஒழுக்கத்   தாலுயர்ந்த
சான்றோர் பரவி வாழ்த்துதலாலும் ;

எல்லாப்   படையினும் சிறப்புடைமைபற்றி, வேற்படையை விதந்து,
“பல்  வேல்  இரும்பொறை” யென்றும், வானம் பொழுதொடு சுரத்தல்
முதலியன  வுண்டாவது  அரசியலின்  செம்மையா  லென்பார்,  “நின்
கோல்  செம்மையின்”  என்றும்,  அதனால்  நாட்டில் வாழும் மக்கள்
விழா   நாட்களிலும்   பிற   நாட்களிலும்   எப்போதும்   அரசனை
வாழ்த்துதலால்,   “நாளின்   நாளின்  நாடு  தொழுதேத்த”  என்றும்
கூறினார்.  விழாநாட்களில் மக்கள் வேந்தனைப் பரவி வாழ்த்துவதைச்
சிலப்பதிகாரத்து  விழா  நிகழ்  காதைகளிலும் திருமணக் காதையிலும்
பிற  நாட்களில்  வாழ்த்துவதை,  “வாழி யாதன் வாழி யவினி” எனத்
தொடங்கும்  ஐங்குறு  நூற்றுப்  பாட்டுக்களிலும் காணலாம். வையத்து
வாழ்வாங்கு   வாழும்   சான்றோர்   தம்  நல்லொழுக்க மாட்சியால்
வானுறையும்     தெய்வமாத    லொருதலையாதலின்,    அவர்களை
“உயர்நிலை யுலகத்துயர்ந்தோர்”   என்றும்,  “நாட்டில்  நல்வாழ்வு
நடைபெறுவதையே  பெருநோக்கமாகக்   கொண்டு,   அதற்கு  மிக்க
காவலாயிருந்து   அறம்  வளர்க்கும்   சிறப்புக்   குறித்து  அரசனை
அவர்கள்   வாழ்த்துமாறு  தோன்றப்    “பரவ”  என்றும்  கூறினார்;
“உயர்நிலை யுலக மிவணின் றெய்தும், அறநெறி  பிழையா  அன்புடை
நெஞ்சிற்,   பெரியோர்”  (மதுரைக். 471-3) என்று சான்றோர் கூறுதல்
காண்க.
 

12 - 20. அரசியல்.....................பொலிந்தே

உரை : அரசியல் பிழையாது- நீ மேற்கொண்டு புரியும் அரசுமுறை
பிழையாமல்; செரு மேந் தோன்றி - போரில் வெற்றியால்  மேம்பட்டு;
நின்  மாட்டு  அடங்கிய நெஞ்சம் புகர்  படுபு  அறியாது - நின்பால்
அன்பாலொடுங்கிய   மனம்   குற்றப்படாது   ;   கனவினும்  பிரியா
உறையுளொடு  -  கனவிலும்  பிரிதலை  யறியா துறைதலையும் ; தண்
ணெனத்  தகர  நீவிய  துவராக்  கூந்தல் - தண்ணிதாகவுள்ள மயிர்ச்
சாந்து தடவப்பட்டு நெய்ப்புப் புலராத கூந்தலையும் ; வதுவை மகளிர்
நோக்கினர்   மணமகளிர்   கற்பால்   வழிபட்டு  நோக்கி; பெயர்ந்து
வாழ்நாள்  அறியும்  நோக்கத்து  வயங்கு சுடர் - பின்னரும் தன்னை
நோக்கித்   தம்  வாழ்நாளெல்லையை  யறியும்  நோக்கத்துக்  கேற்ப
விளங்கும்  ஒளியை யுடைய ; மீனொடு புரையும் கற்பின் - அருந்ததி
போலும்  கற்பினையும்  ; வாணுத  லரிவையொடு - ஒளி பொருந்திய
நெற்றியினையுமுடைய  அரிவையாகிய  நின்  மனைவியுடன்  ; காண்
வரப்  பொலிந்து  -  அழகுற  விளங்கி ;  நீ நோயிலையாகியர் - நீ
நோயின்றி வாழ்வாயாக எ - று.

உறையுளையும்,     கூந்தலையும், கற்பினையும், நுதலையுமுடைய
அரிவையொடு காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது, செருமேந்
தோன்றி, நீ நோயிலையாகியர் என இயையும்.

அரசியற்   பொறையால், பல்வகை யச்சத்துக் கிடமாதலின் நெஞ்சு
மெலிதலாலும்,    செருவுடற்று   மிடத்து   விழுப்புண்   படுதலாலும்
நோயுண்டாமாதலின்,   “அரசியல்   பிழையாது  செருமேந்  தோன்றி
நோயிலையாகியர்  நீயே” என்றார். பல்வகை யச்சமாவன “மழைவளங்
கரப்பின்  வான்பே  ரச்சம்,  பிழையுயி  ரெய்தின் பெரும்பே  ரச்சங்,
குடிபுர  வுண்டுங்  கொடுங் கோலஞ்சும்” அச்சம் என்பன. இவற்றைச்
செங்குட்டுவன்,  “மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல், துன்பமல்லது
தொழுதக  வில்லை”  என்பது  (சிலப்.  வஞ்சி. காட்சி 103-4) காண்க.
“பிழையாமலெனத் திரிக்க” என்பது பழையவுரை .

நாடு ாத்தல் குறித்து வேந்தன் பிரிந்த வழியும், வேறே அவனோடு
புலத்தற்குரிய    காரணங்கள்    உளவாகிய   வழியும்,   அவன்பாற்
சென்றொடுங்கிய  அன்பால்,  நெஞ்சின்கண்,  “அன்பிலை கொடியை”
என்பன  போலும்  சொல்  நிகழ்தற்குரிய  நினைவு தோன்றுவதில்லை
யென்றற்கு,  ‘அடங்கிய  நெஞ்சம் புகர்படு பறியாது” என்றும், நனவிற்
பிரியினும்.        கனவிற்               கண்டு         நனவிற்

கூடினா     ரெய்தும்  இன்பப்  பயனைப்  பெறுதலின்    மனையின்
கண்ணிருந்து நல்லறம் புரியும் கற்புச் சிறப்பினைக் “கனவினும்  பிரியா
வுறையு”  ளென்றும் கூறினார். “நனவினா னல்கா தவரைக் கனவினாற்,
காண்டலி  னுண்டென்னுயிர்”  (குறள். 1213) என்றாற்போ லொழுகுவது
கனவினும்  பிரியா  வுலையுளென  வறிக.  ஈண்டுப் பழையவுரைகாரர்,
“உறையுளொடு  நெஞ்சும்  புகர்  படுபு  அறியாது  என மாறிக்கூட்டி
அறியா  தென்பதனை  அறியாமலெனத்  திரித்து அதனைப்  புரையும்
என்றதனொடு முடிக்க” என்று கூறுவர்.

தலைவன் பிரிந்த விடத்துக் குலமகளிர் தம்மை யொப்பனை செய்து
கொள்ளாராகலின்,  என்றும்  தான்  தலைவனைப் பிரியா துறைதலால்
இடையறா  ஒப்பனையால்  நெய்ப்புப் புலராத கூந்தலுடையளாயினாள்
அரசமாதேவி  யென்பார், “தண்ணெனத் தகரம் நீவிய துவராக் கூந்த”
லென்றார். தகரம், மயிர்ச்சாந்து. இதனை நீவிக் கொள்வதால் தலையும்
கண்ணும்  குளிர்ச்சி  பெறுமென்று  மருத்துவ  நூலார்  கூறுப; அவர்
கூற்றும்  உண்மை  யென்றதற்குச்  சான்றாமாறு, “தண்ணென” என்று
ஆசிரியர்  கூறுவது மிக்க நயமாக வுளது . துவர்தல், புலர்தல், பழைய
வுரைகாரர்,  “துவராக்  கூந்தலென்றது  எப்பொழுதும்  தகர  முதலிய
நீவுகையால் ஈரம் புலராத கூந்த லென்றவா” றென்றும், இச்சிறப்பானே
இதற்குத் “துவராக் கூந்தலென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.

வதுவைக்     காலத்தே,  மகளிர்  தாம்  மணக்கும்  கணவனைப்
பிரியாமல்  கற்புவழி யொழுகும் பொற்பு மேம்படுதற்கு அருந்ததியைக்
காண்டல்  மரபாதல் தோன்ற, “வதுவை மகளிர் நோக்கினர்” என்றும்,
பின்னர்த்  தாம்  வாழும்  நாட்களில்  வாழ்நாளெல்லையை யறிதற்கு
அவ்வருந்ததி   மீனைக்   காண்பதும்   மரபாதல்பற்றி   “பெயர்ந்து
வாழ்நாளறியும்  நோக்கத்து வயங்கு சுடர்” என்றும் கூறினார். “உலந்த
நாளவர்க்குத்  தோன்றாதொளிக்கு  மீன் குளிக்குங் கற்பிற், புலந்தவே
னெடுங்கட்  செவ்வாய்ப்  புதவி” (சீவக. 2141) என்று திருத்தக்கதேவர்
கூறுதலால்   இவ்வழக்  குண்மை  துணியப்படும்.  திருமணக்காலத்து
நோக்கியவர்    மறுபடியும்    பிற்காலத்தே    வேறு   குறிப்பொடு
நோக்குதல்பற்றி,   “பெயர்ந்து”   என்றும்,  வாழ்நா  ளுலந்தவர்க்குத்
தோன்றாது  மறையும்  என்பது  அமங்கல  மாதலின் “வயங்கு சுடர்”
என்றும்   கூறிய   நாகரிகம்   குறிக்கற்பாற்று.  மகளிர்  நோக்கினர்,
பெயர்ந்து,  அறியும்  நோக்கத்து  வயங்கு  சுடர்  மீனொடு புரையும்
கற்பின்  என  இயைக்க.  இனி  ஆசிரியர்  உ  . வே. சாமிநாதையர்,
கூந்தலை வதுவை மகளிர்க்கு அடையாக்குவர்.

இதுகாறுங் கூறியவாற்றால் இரும்பொறை, வானம் சுரப்ப, மடமான்
ஏறு  புணர்ந்தியல,  புள்ளும்  மிஞிறும்  ஆர்ப்ப, பழனுங் கிழங்கும்
மிசையற   வறியாவாக,   ஆனிரை  புல்லார்ந்  துகள, கூலங்கெழும,
பல்லூழி   நடுவுநின்   றொழுக,  நின்கோல்  செம்மையிற் றிறம்பாது
நிகழ்த்தலின்,  நாடு தொழுதேத்துதலானும், உயர்ந்தோர் பரவுவதாலும்,
உறையுளையும்,    கூந்தலையும்    கற்பினையும்,   நுதலையுமுடைய
அரிவையாகிய தேவியுடன் காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது
செருமேந்   தோன்றி,   நீ  நோயிலையாகியர்   என்பதாம்.  இனிப்
பழையவுரைகாரர் ‘உறையுளொடு மீனொடு என நின்ற ஒடுக்கள் வேறு
வினையொடு”    என்றும்,   “பல்வேல்   இரும்பொறை,  நின்கோல்
செம்மையாலே      வானம்        சுரப்ப,        கானம்    ஏறு

புணர்ந்தியல,     சினையிற்  புள்ளும்  மிஞிறும்   ஆர்ப்ப, பழனும்
கிழங்கும்  மிசையற  வறியாதொழிய,  ஆனிரை புல்லருந்துகள கூலம்
கெழும,  ஊழி  நடுவுநின்  றொழுக,  நாடு  தொழுதேத்த,  யர்நிலை
யுலகந்  துயர்ந்தோர்  பரவ,  அரசியல்  பிழையாதொழியச் செருவில்
மேம்பட்டுத்    தோன்றி,    நீ   நின்   அரிவையொடு  பொலிந்து
நோயிலையாகியர்   எனக்கூட்டி   வினைமுடிவு   செய்க”  என்றும்,
“இதனாற்    சொல்லியது    அவன்    நாடு   காவற்  சிறப்புக்கூறி
வாழ்த்தியவாறாயிற்”  றென்றும், “அவ்வாறு நாடுகாவற் கூறினமையால்
துறை காவல் முல்லையாயிற் றென்றும் கூறுவர்.


 மேல்மூலம்