முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
90.



மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப
அச்சற் றேம மாகி யிருடீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத்
துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக்
 5




கழிந்தோ ருடற்றுங் கடுந்தூ வஞ்சா
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி
 10




மாயாப் பல்புகழ் வியல்விசும் பூர்தர
வாள்வலி யுறுத்துச் செம்மை பூஉண்
டறன்வாழ்த்த நற்காண்ட
விறன்மாந்தரன் விறன்மருக
ஈர முடைமையி னீரோ ரனையை
 15




அளப்பரு மையி னிருவிசும் பனையை
கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை
பன்மீ னாப்பட் டிங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உருகெழு மரபி னயிரை பரவியும்
 20




கடலிகுப்ப வேலிட்டும்
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலையவு நிலத்தவு மருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய
கொற்றத் திருவி னுரவோ ரும்பல்
 25




கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே
மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே
எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீ்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
 30




விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே
உரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு
மாண்வினைச் சாப மார்புற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்
 35




மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில்
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
காழெஃகம் பிடித்தெறிந்து
விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
 40



வீங்குபெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே
கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற்
பழன மஞ்ஞைமழைசெத் தாலும்
தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக்
 45




கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச்
செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக்
காவிரிப் படப்பை நன்னா டன்ன
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை
 50




வண்டார் கூந்த லொண்டொடி கணவ
நின்னாள், திங்க ளனைய வாக திங்கள்
யாண்டோ ரனைய வாக யாண்டே
ஊழி யனைய வாக வூழி
வெள்ள வரம்பின வாகென வுள்ளிக்
 55


காண்கு வந்திசின் யானே செருமிக்
குருமென முழங்கு முரசிற்
பெருநல் யானை யிறைகிழ வோயே.

     துறை - காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் - வலிகெழு தடக்கை
(33)

     (ப - ரை) 2. அச்சமென்பது கடைக்குறைந்தது. இருள் -
துன்பம்.

     3. தோன்றி இன்பம் பெருகவெனக் கூட்டுக.

     3-4. தந்துணைத் துறையென்றது பார்ப்பார் முதலாயினார்
தத்தமக்கு அளவான துறைநூல்களை. 4. கற்றென்றதனைக்
கற்கவெனத் திரிக்க.

     5. கழிந்தோர் - வலியின் மிக்கோர். 7. தந்தென்றது
இடவழுவமைதி.

     9. வையத்துப் பகலாற்றியென்றது வையத்தார்கண்ணே நடுவு
நிலைமையைச் செய்தென்றவாறு.

     11. செம்மைபூண் டென்றதுசெவ்வையைத் தான்பூண்டென்றவாறு.

     12. அறனென்றது அறக்கடவுளை. நன்காண்டவென்றது
வலித்தது.

     20. கடலிகுப்பவென்றது கடலைத் தாழ்க்கவேண்டியென்றவாறு.

     அருப்பம் வௌவி (22) மிடல் சாய்த்து (21) எனக்கூட்டுக.

     23. பெயரென்றது பொருளை.

     25. கட்டிப்புழுக்கு - கட்டியொடு கூட்டின அவரைப்பரல்
முதலான புழுக்கு. 26. மட்டப்புகா - மதுவாகிய உணவு.

     27. எழாத் துணைத்தோள் - போரில் முதுகிட்டார்மேற்
செல்லாத இணை மொய்ம்பு. 33. ஞாண் பொர - நாண் உரிஞுதலால்.

     இவ்வடைச்சிறப்பானே இதற்கு, ‘வலிகெழு தடக்கை’ என்று
பெயராயிற்று.

     மொய்ம்பினையுடைய (34) தடக்கை (33) என மாறிக் கூட்டுக.

     35. பாண்டிலென்றது பாண்டிலையுடைய பக்கரையை.

     காழெஃகம் பிடித்தெறிந்தும் (37) விழுமத்திற் புகலும் (38)
என்றதற்குப் பகைவரென்னும் பெயரை வருவித்து, காம்பையுடைய
வேலைப் பிடித்தெறிந்து அப்பகைவர்க்கு இடும்பை செய்கையிலேயே
விரும்புமென்றவாறு.

     ஆலும் (42) நாடு (47) என முடிக்க.

     45. ஏறு மாறு சிலைப்பவென்றது ஏறுகள் ஒன்றற்கொன்று
மாறாக முழங்கவென்றவாறு.

     நன்னாடன்ன (47) ஒண்டொடி (50) என முடிக்க.

     மருக (13), உம்பல் (24), கொங்கர் கோவே (25), குட்டுவரேறே
(26), பூழியர் மெய்ம்மறை (27), மரந்தையோர் பொருந (28), வயவர்
வேந்தே (30), வயவர்பெரும (39), ஓங்குபுகழோய் (40), ஒண்டொடி
கணவ (50), இறைகிழவோய் (57), ஈரம் உடைமையின் நீரோரனையை
(14) அளப்பருமையின் விசும்பனையை (15); கொள்ளக்
குறைபடாமையின் முந்நீரனையை (16); பூத்த சுற்றமொடு பொலிந்து
தோன்றுதலையுடையை (18); ஆதலால் நினக்கு அடைத்த நாட்கள்
உலகத்தில் திங்களனையவாகவென்றும் நின்னுடைய திங்கள் (51)
யாண்டனையவாக வென்றும் நின்னுடையாண்டு (52)
ஊழியனையவாகவென்றும் நின்யாண்டிற்கு ஒப்பாகிய அப் பல்லூழி
தம் அளவிற்பட்டபலவாய் நில்லாது (53)
வெள்ளவரம்பினவாகவென்றும் நினைத்து (54) நின்னைக்
காண்பேன்வந்தேன் (55) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் தண்ணளியும் பெருமையும்
கொடையும் சுற்றந்தழாலும் உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று.

     ‘ஒளிறு’ (6) என்பது முதலாக நான்கடியும், ‘அறன்வாழ்த்த’ (12)
என்பது முதலாக இரண்டடியும், ‘கடலிகுப்ப’ (20) என்பது முதலாக
இரண்டடியும், ‘காழெஃகம் பிடித்தெறிந்து’ (37) என ஓரடியும்
வஞ்சியடியாக வந்தமையான் வஞ்சித்தூக்குமாயிற்று.

     ‘நின்னாள்’ (51) என்பது கூன்.

     (கு - ரை) 1. நட்சத்திரங்கள் தாம் இருத்தற்குரிய இடங்களிலே
இருப்ப அதனால் மழை பருவம் பெய்யாமற்காலத்திற் பெய்ய’’
‘’வியனாண்மீனெறி யொழுக’’ (மதுரைக். 6)

     2. உயிர்க்கு அச்சம் இல்லாமல் காவலாகித் துன்பம் தீர்ந்து:
‘’அச்சமறியா தேம மாகிய, மற்றை யாமம்’’ (மதுரைக். 652-3) அச்சு:
அச்சமென்பதன் கடைக்குறை; ‘’நகையச் சாக நல்லமிர்து கலந்த’’
(பரி. 3 : 33); ‘’அச்சா றாக வுணரிய வருபவன்’’ (கலித். 75 : 20)

     3-4. இன்பம் உண்டாகிப் பெருகும்படி அந்தணர் முதலியோர்
தமக்கு அளவான துறைநூல்களைக் குறையாதபடி நிறையக் கற்று.
சேரநாட்டில் கல்வி நிறைந்ததைக் கூறியபடி. 8. மு. மதுரைக்.
72, 124.

     5-8. வன்மையில் மிக்கோர் போர்செய்யும் மிக்க வன்மைக்கு
அஞ்சாத, விளங்குகின்ற வாளையுடைய வலிய அரசர்
ஆண்யானைகளோடு அணிகலன்களைத் திறையாகக் கொடுத்துத்
தம்முடன் பழமையைச் சொல்லி நீ ஏவிய தொழிலைச்செய்ய.
களிறொடு கலம் தருதல்: ‘’இருங்கண் யானையொ டருங்கலத்
துறுத்துப் பணிந்துவழி மொழிதலல்லது’’ (தொல். புறத். 6, இளம்.
மேற்.)

     9. அகன்ற பூமியில் நடுவுநிலைமையைச் செய்து; பகல் - நடுவு
நிலைமை; ‘’நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்’’
(பட்டினப. 206 - 7). 10. அழியாத பலவகையான புகழ் அகன்ற
ஆகாயத்திலே பரவ. பல்புகழ்: பதிற். 12 : 8, உரை. ஊர்தல் -
பரத்தல்; ‘’அழலம்பூ நறவார்ந் தழலூர்தர’’ (சீவக. 939)

     11-3. வாளின் வலியைப் பகைவரிடத்தே உறுவித்துச்
செவ்வையை மேற்கொண்டு, அறக்கடவுள் வாழ்த்தும்படி நன்கு
ஆண்ட வெற்றியையுடைய மாந்தரனென்னும் சேரவரசனது,
விறலையுடைய வழித்தோன்றலாக உள்ளாய். விறலென்றது பிறரினும்
மேம்பட்டுத் தோன்றுதல்; ‘’விறன்மலை’’ (கலித். 8 : 6)

     14. அன்புடைமையினால் நீரோடு ஒத்தனை. 15. நின் சூழ்ச்சி
அளப்பதற்கு அருமையின் பெரிய ஆகாயத்தைப் போன்றனை (புறநா.
2 : 2-7);‘’விசும்பி னன்ன சூழ்ச்சி’’ (தொல். உவம. 6,பேர்.மேற்)

     16. என்றும் வறியோர் தாமே கொள்ளச் செல்வம்
குறைபடாமையால் மேகம் முகந்துகொள்ளக் குறைபடாத
கடலைப்போன்றாய் (பதிற். 45 : 19 - 22, 88 : 26-7;
மதுரைக்
. 424-5)

     வீரரும் வறியோரும் கொள்ளவும் செல்வம் குறையாமை:
‘’கன்றும் வயவ ரினங்கள் பலகவர்ந்தும், என்றும் வறிஞ
ரினங்கவர்ந்தும் - ஒன்றும் அறிவரிதா நிற்கு மளவினதா லம்ம,
செறிகதிர்வேற் சென்னிதிரு’’ (தண்டி. 72, மேற்)

     17-8. பல நட்சத்திரங்களுக்கு நடுவே சந்திரனைப்போலப்
பொலிவு பெற்ற சுற்றத்தோடு விளங்கித் தோன்றுதலை யுடையை.
பூத்த சுற்ற மென்றது இயலிசை நாடகங்களாலும் இனிய
வார்த்தைகளாலும் இனிய மகிழ்ச்சியைச் செய்யும் மகளிர் திரளை;
கலை நிறைந்தமை பற்றிச் சேரனுக்குத் திங்கள் உவமையாயிற்று
(சிறுபாண். 220, ந); ‘’பன்மீ னடு வட்டிங்கள் போலவும், பூத்த
சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி ‘’ (மதுரைக். 769-70);
‘’கோன்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்றமொத்தே’’ (சீவக. 882)

     19. அச்சம் பொருந்திய இயல்பினையுடைய அயிரைமலையில்
எழுந்தருளியிருக்கும் துர்க்கையை வழிபட்டும். 20. கடலின்
வன்மையைத் தாழ்க்கவேண்டி வேலை ஏற்றி நடப்பித்தும்.

     21-2. மலையிலுள்ளனவும், மருத நிலத்திலுள்ளனவும் ஆகிய
அரண்களைக் கைப்பற்றி, மாறுபட்டோருடைய வன்மையைக்
கெடுத்தும். நிலம் - மருதநிலம்; ‘’அகநாடு புக்கவ ரருப்பம் வௌவி’’
(மதுரைக். 149)

     23. பெயர் பொருள் என்னும் பொருளில் வந்தது (பதிற்.
21 : 1, உரை); முருகு. 269, ந.; பெருங். 1. 35 : 113, 3. 10 : 18.

     23-4. அவ்வரண்களிலே பெற்ற பெருமையுள்ள பொருள்களைப்
பரிசில் பெறுவார் பலருடைய கையிலே இருத்திய, வெற்றியால் வரும்
செல்வத்தையுடைய வலியோருடைய வழித்தோன்றலே.

     25. சர்க்கரைக் கட்டியோடு கூட்டின அவரை முதலியவற்றின்
விதையாகிய உணவினையுடைய கொங்கர்களுக்குத் தலைவனே.

     26. கள்ளாகிய உணவினையுடைய குட்டநாட்டிலுள்ளார்க்குத்
தலைவனே. மட்டம் - கள்; ‘’தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்’’
(பதிற். 42 : 12); ‘’மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன, இட்டுவாய்ச்
சுனைய’’ (குறுந். 193 : 1 - 2)

     27. போரில் முதுகு காட்டி ஓடினார் மேல் செல்லாத
இனையான தோள்களையுடைய பூழிநாட்டார்க்குக் கவசம்போன்றாய்
(மதுரைக். 177,ந.)

     பூழியர் மெய்ம்மறை: பதிற். 73 : 9.

     28. ஒலிக்கின்ற நீர்ப்பரப்பினையுடைய மரந்தை
நகரத்திலுள்ளாருக்குத் தலைவனே. மரந்தை: ‘’குட்டுவன் மரந்தை’’
(குறுந். 34 : 6); ‘’குரங்குளைப் புரவிக் குட்டுவன், மரந்தை
யன்னவென் னலந்தந்து சென்மே’’ (அகநா. 376 : 17 - 8).
பொருநன் - தான் பிறர்க்கு உவமிக்கப் படுவான். 29 : பதிற்.
15 : 9.

     29-30. வெள்ளிய பூவையுடைய வேளைச்செடியோடு
சுரைக்கொடி இடந்தோறும் கலப்பச்செய்த, பலவாக
வேறுபடுதலையுடைய மொழிகளையுடைய பாசறையிலுள்ள வீரர்க்கு
அரசே.

     விரவுமொழிக் கட்டூர்: ‘’விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக்
கொளீஇ’’ (அகநா. 212 : 14); ‘வேறுபல் பெரும்படை நாப்பண்பாடை
வேறுபட்ட பலவாகிய பெரிய படைக்கு நடுவே’ (முலைப். 43, ந.)

     31. கரையிலே வந்து உலாவுதலையுடைய கடலைப்போன்ற,
பகைவரால் தடுத்தற்கு அரிய சேனையோடு.

     32. மாட்சிமைப்பட்ட தொழிலையுடைய வில்லை மார்பிற்
பொருந்த வளைத்து.

     33-4. நாண் உராய்தலால் தழும்பு விளங்கிய வன்மை
பொருந்திய பெரிய கைகளையும் நீண்டு அலங்கரித்தாலொத்த
ஏந்திய திரண்ட தோள்களையு முடைய. ‘’வலிதுஞ்சு தடக்கை’’
(புறநா. 54 : 14); ‘’ஆவஞ்சேர்ந்த புறத்தை தேர்மிசைச், சாவ
நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்........................வலிய
வாகுநின் றாடோய் தடக்கை’’ (புறநா. 14 : 8 - 11)

     35-6. நட்சத்திரங்கள் பூத்தாற்போன்ற விளங்குகின்ற
மணிகளையுடைய வட்டமான பக்கரையையும் மெல்லிய மயிரையுடைய
கவரியையும் அணிந்த குதிரையின் மேற்கொண்டு.

     குதிரைக்குக் கவரியணிதல்: ‘’முரசுடைச் செல்வர்புரவிச் சூட்டு,
மூட்டுறு கவரி தூக்கி யன்ன’’ (அகநா 156 : 1 - 2); ‘’ஒருதனிமா,
ஞாங்கர் மயிரணியப் பொங்கி,’ (பு. வெ. 90). 39. பதிற். 65 : 4.

     37 - 9. காம்பையுடைய வேலைப் பிடித்து எறிந்து
பகைவர்க்குத் துன்பத்தைச் செய்தலில் விரும்பும் நீங்காத
ஆண்மையுடைய, நிலையாமை தம் நெஞ்சிலே மிக்க வீரர்க்குத்
தலைவனே.

     காழெஃகம்: மதுரைக். 739; மலைபடு. 129; புறநா. 354 : 2.

     40. உயர்ந்த பெரிய சிறப்பினையுடைய, மற்ற அரசரினும்
மேம்பட்ட புகழை யுடையோய். 41. உழவர் தண்ணுமை: அகநா.
40 : 13 - 4, 204 : 10; புறநா. 348 : 1.

     41-2. வயலிலுள்ள உழவர் தண்ணுமைப்பறையை வாசித்தால்,
பழனத்திலுள்ள மயில் அதனோசையை மேகத்தின் ஓசையென்று
எண்ணி ஆடும். ஆலும் (42) நாடு (47) என இயையும்.

     43-4. குளிர்ந்த நீரில் ஆடுவோரது முழக்கத்தோடு கலந்து,
கொடிய போரைச் செய்யும் வீரரது தெளிந்த தடாரிப்பறை ஒலிப்ப.

     45. சோற்றையுடைய நல்ல வீடுகளில் ஏறுகள் ஒன்றோடு
ஒன்று மாறாக முழங்க (மதுரைக். 672)

     46-7. செழுமையான பலவாக இருந்த கொழுவிய பல குளிர்ந்த
வயல்களையுடைய காவிரிப்பக்கத்தையுடைய நல்ல சோழ நாட்டைப்
போன்ற.

     49. ஆறிய கற்பு: ‘ஆறிய கற்பும் சீறிய கற்புமெனக் கற்பு
இருவகை’, (சிலப். பதிகம், 38 - 54, அடியார்.) ‘’ஆறிய
கற்பினடங்கிய சாயல்’’ (பதிற். 16 : 10). 50. ஒண்டொடி கணவ:
பதிற். 14 : 15. உரை.

     48-50. தொழில்வளம் பொருந்திய சிலம்பினையும், அடங்கிய
கொள்கையையும், அறக்கற்பினையும், தெளிவாக அறியப்பட்ட நல்ல
புகழையும், வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய ஒள்ளிய
தொடியை அணிந்தோளுடைய கணவனே.

     51. நின்வாழ்நாட்கள் மாதத்தைப்போன்றன வாகுக.

     51-2. மாதங்கள் ஆண்டைப்போன்இறு ஒரு தன்மையவாக.

     52-3. ஆண்டுகள் ஊழிப்போன்றன வாகுக.

     53-4. ‘’ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலக மேழும்
ஏழும்வீ வுற்ற ஞான்று மின்றென விருத்தி யென்றாள்’’ (கம்ப.
உருக்காட்டு. 72); ஐங்குறு. 281 : 1.

     53-5. ஊழிகள் வெள்ளமென்னும் பேரெண்ணின் எல்லையை
யுடையனவாகுக என நினைத்து, யான் நின்னைக் காண்பேன்
வந்தேன்.

     57. இறைகிழவோய்; பதிற். 54 : 17.

     55-7. போர்க்களத்தில் மேற்பட்டு, இடியைப்போல முழங்கும்
முரசினையும், பெரிய நல்ல யானைகளையும் உடைய
இறையாதற்றன்மையை யுடையோய்.

     (பி - ம்) 27. திணித்தோள். 28. இலங்குநீர்ப். 29. மயங்கிய.
34. வான்று புனைந்தன்ன. 37. காழ்மூழ்கப்.
          (10)

     இதன்பதிகத்து விச்சி (4) என்பான் ஒரு குறுநிலமன்னன்.
வஞ்சி மூதூர்த் தந்து (9) என்றது அவர்களை வென்றுகொண்ட
பொருள்களை; பசுவும் எருமையும் ஆடுமென்பாரும் உளர்.

     11-2. அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசுமயக்கி
என்றது தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும்
அறநெறி அறிவானாகப் பண்ணியென்றவாறு.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

10. வலிகெழு தடக்கை
 
90.மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப
அச்சற் றேம மாகியிரு டீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத்
துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக்
 
5கழிந்தோ ருடற்றுங் கடுந்தூ வஞ்சா
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி
 
10மாயாப் பல்புகழ் வியல்விசும் பூர்தர
வாள்வலி யறுத்துச் செம்மை பூஉண்
டறன் வாழ்த்த நற்காண்ட
விறன் மாந்தரன் விறன்மருக
ஈர முடைமையி னீரோ ரனையை
 
15அளப் பருமையி னிருவிசும் பனையை
கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை
பன்மீ னாப்பட் டிங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உருகெழு மரபி னயிரை பரவியும்
 
20கடலிகுப்ப வேலிட்டும்
உடலுநர் மிடல் சாய்த்தும்
மலையவு நிலத்தவு மருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய
கொற்றத் திருவி னுரவோ ரும்பல்
 
25கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே
மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே
எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயங்கிய
 
30விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே
உரவுக் கடலன்ன தாங்கருந் தானையொடு
மாண்வினைச் சாப மார்புற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்து புனைந்தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்
 
35மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில்
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
காழெஃகம் பிடித்தெறிந்து
விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
 
40வீங்குபெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே
கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற்
பழன மஞ்ஞை மழைசெத் தாலும்
தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக்
 
45கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச்
செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக்
காவிரிப் படப்பை நன்னா டன்ன
வளங்கெழு குடைச்சசூ லடங்கிய கொள்கை
ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை
 
50வண்டார் கூந்த லொண்டொடி கணவ
நின்னாள், திங்க ளனைய வாக திங்கள்
யாண்டோ ரனைய வாக யாண்டே
ஊழி யனைய வாக வூழி
வெள்ள வரம்பின வாகென வுள்ளிக்
 
55காண்கு வந்திசின் யானே செருமிக்
குருமென முழங்கு முரசிற்
பெருநல் யானை யிறைகிழ வோயே .
 

துறை  : காட்சிவாழ்த்து.
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்.
தூக்கு  : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்.
பெயர்  : வலிகெழு தடக்கை.
 

1 - 13. மீன் வயின்......................மருக.

உரை :  மீன்   வயின்   நிற்ப  -  விண்மீன்களும் கோள்களும்
தத்தமக்குரிய  இடத்தே  நிற்க;  வானம்  வாய்ப்ப  - மழை தப்பாது
பொழிய  ;  அச்சு  அற்று  ஏமமாகித் தோன்றி - உயிர்கட்குத் தாம்
அச்சமின்றிப்  பாதுகாப்பதாய்த்  தோன்றி;  இருள்  தீர்ந்து  இன்பம்
பெருக  துன்பமின்றி  இன்பம்  நாளும்  மிகுமாறு  ;  தம்  துணைத்
துறையின்   எஞ்சாமை   நிறையக்   கற்று  -  தமக்குரிய அளவாக
வகுக்கப்பட்ட  கல்வித் துறையின் கண் கற்பன குறைவுபடாது நிரம்பக்
கற்று  ;  கழிந்தோர்  உடற்றும் கடுந்தூ  அஞ்சா  -  வலி மிக்கோர்
செய்யும்  போர்க்  கேதுவாகிய  மிக்க வன்மைக்கு அஞ்சுதலில்லாத ;
ஒளிறு  வாள்  வய வேந்தர்  -  விளங்குகின்ற வாளையுடைய வலிய
அரசர்  ;  களிறொடு கலம் தந்து - யானைகளோடு கலன்கள் பலவும்
செலுத்தி; தொன்று மொழிந்து தொழில் கேட்ப - தமது பழைமையைச்
சொல்லிப்  பணி  யேற்று  நடப்ப  ; அகல்  வையத்துப் பகலாற்றி -
அகன்ற  உலகத்திலே நடுவு  நிலைமையைப்  புரிந்து ; மாயாப் புகழ்
வியல்  விசும்பு  ஊர்தர  -  அழியாத  பல்லாற்றாற்  பெருகிய புகழ்
அகன்ற   வானமெங்கும்   பரவ;   வாள்  வலியுறுத்து  தமது வாள்
வன்மையைத்  தெரியாத  பகைவர்  தெரிய  வற்புறுத்தி  ;  செம்மை
பூஉண்டு  அறன்  வாழ்த்த  -  செங்கோன்மை மேற் கொண்டதனால்
அறவோர் மகிழ்ந்து வாழ்த்த ; நற்காண்ட விறல் மாந்தரன் - நன்றாக
ஆட்சி புரிந்த விறலையுடைய மாந்தர னென்னும் சேரமானது ; விறல்
மருக - மேம்பட்ட வழித்தோன்றலே ;

நாளுங்  கோளும் நிலைதிரியின் நாட்டில் மழை யின்மை, வறுமை,
நோய் முதலிய துன்ப முண்டா மாதலின், “மீன்வயின் நிற்ப” என்றும்,
நிற்றலாற்     பயன்     மழை    யுண்மையும்    அச்சமின்மையும்
துன்பமின்மையும்  இன்பமும்  பெருகுதலாதலால்,  “வானம் வாய்ப்ப”
என்றும்  “அச்சற்று  ஏமமாகி”  யென்றும்,  “இருள்  தீர்ந்து இன்பம்
பெருக”  என்றும்  கூறினார். “வியனாண்மீ னெறி யொழுக” (மதுரைக்.
6)  என்று  மாங்குடி  மருதனார் கூறுதல் காண்க. அச்சம், அச்செனக்
கடைக்குறைந்து  நின்றது;  “அச்சாறாக வுணரிய வருபவன்” (கலி .75)
என்றாற்போல அச்சமின்றிப் பாதுகாவலாக விளங்குதலை, “அச்சமறியா
தேமமாகிய” (மதுரைக். 652) என்று சான்றோர் விளக்குத லறிக. இருள்,
அறியாமை  காரணமாக வரும் துன்பம். கற்றற்குரியவற்றை எஞ்சாமை
நிறையக்  கற்பதன் பயன் இருள் நீங்கலும் இன்பம் பெறுதலுமாதலின்,
“இருள்தீர்ந்  தின்பம் பெருக” என்றார் “இருணீங்கி யின்பம் பயக்கும்
மருணீங்கி,  மாசறு  காட்சி  யவர்க்கு” (குறள். 352) என்று சான்றோர்
கூறுப.  “ஐவகை  மரபி  னரசர் பக்கமும்”  (தொல்.  புறத். 20) என
அரசர்க்கு    வகுத்துள்ள    கல்வி     முறையை,    “தந்துணைத்
துறையின்”   என்றும்,  அவற்றைக்   கடைபோகக்  கசடறக்  கற்றது
தோன்ற, “எஞ்சாமை நிறையக் கற்று”  என்றும்  கூறினார். ஏமமாகித்
தோன்றி இருள் தீர்ந்து   இன்பம் பெருக என   இயைக்க.   இனித்
“தந்துணைத்துறை  யென்றது  பார்ப்பார்   முதலாயினார்   தத்தமக்
களவான   துறை     நூல்களை”    யென்றும்,     கற்றென்பதைக்
கற்கவெனத் திரிக்க வென்றும் பழையவுரை கூறுகிறது.
 

கழிந்தோர்,  பல போர்களைச் செய்து வெற்றியுற்று நிற்கும் வீரர் ;
இந்நிலை  மிக்க வலியுடையோர்க் கல்லது கூடாமையின், “கழிந்தோர்”
என்றும்,  பல  போரினும்  பயின்று  மேம்பட்ட  வலி  யென்றறற்குக்
“கடுந்தூ” என்றும் கூறினார்.

பணிந்தொழுகும்   சிற்றரசர் வலி கூறவே, பேரரசனாகிய சேரனது
பெருவலி  தானே  விளங்குமாதலின்,  “தொன்று  மொழிந்து தொழில்
கேட்கும்  வய” வேந்தரை, “கடுந்தூ வஞ்சா ஒளிறு வாள் வயவேந்த”
ரெனச்  சிறப்பித்தார். தொன்று  மொழிதலாவது,  வழி வழியாக யாம்
பேரரசனாகிய நினக்குத் திறை செலுத்திப் பணி புரிகின்றே மென்பது.

அகன்ற  வுலகின்கண் புகழ்பெறுதற்குரிய வாயில்கள் பலவற்றினும்
நடுவு  நிலைமை  புரிதலாற் பெறப்படும் புகழ் தலைமை யுடைத்தாதல்
பற்றி, “அகல் வையத்துப் பகலாற்றி மாயாப் பல்புகழ்” என்றும்,  புகழ்,
நிலவுலகை  ஆதாரமாகக் கொண்டு அகல்வான மெங்கும் பரவி நிற்ப
தாகலின், “புகழ் வியல் விசும்பூர்தர” என்றும் கூறினார் . நடுவு நிலை,
நுகத்துப்  பகலாணி  போறலின், பகலெனப் பட்டது ; “நெடு நுகத்துப்
பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்” (பட்டி 206-7) என வருதல்
காண்க.

தமது     வாள்வன்மையைப்  பகைவர்  போர்முகத்தே  பொருது
கண்டஞ்சச்   செய்தமை   தோன்ற,  “வாள்வலி  யுறுத்து”  என்றும்,
தெவ்வரும் வாள்வன்மை தேர்ந்து பணிந்து போந்த காலை அவர்பால்
அருள்   செய்து  நீதி  வழங்குதலால்  ‘செம்மை  பூண்டு’  என்றும்,
இருதிறத்து  நலந்  தீங்குகளையும் உள்ளவா றுணர்ந்து அறிவுறுத்தும்
சான்றோர்  அறவோராதலின்,  வேந்தன்  செற்றவர்  நட்டவர்  என்ற
இருவர்பாலும்  செம்மைபூண்  டொழுகுதலால்,  மிக்க  மகிழ்ச்சியுற்று
வாழ்த்துமாறு  தோன்ற,  “அறன்  வாழ்த்த”  என்றும்,  “நற்காண்ட”
என்றும் கூறினார். விறல், மேம்பாடு ; வெற்றியுமாம்.

ஏமமாகித்     தோன்றி, நிறையக் கற்று, வேந்தர் தொழில் கேட்ப,
பகலாற்றி,  புகழ்  விசும்பூர்தர,  வாள்வலி  யுறுத்துச் செம்மை பூண்டு
நற்காண்ட  மாந்தரன்  மருக  என்றியைக்க;  இனி,  இன்பம்  பெருக
ஏமமாகித்  தோன்றி,  வேந்தர் தொழில் கேட்ப வையத்துப் பகலாற்றி,
புகழ்  விசும்பூர்தர  வாள்  வலியுறுத்து,  அறன்  வாழ்த்தச் செம்மை
பூண்டு  நற்காண்ட  மாந்தரன் மருக என்றியைப்பினுமமையும், இனிப்
பழைய   வுரைகாரர்,   “தந்தென்றது  இடவழு  வமைதி” யென்றும்,
“வையத்துப்     பகலாற்றி     யென்றது,      வையத்தார்கண்ணே
நடுவுநிலைமையைச்   செய்தென்றவா”   றென்றும்,  “செம்மை  பூண்
டென்றது,    செவ்வையைத்    தான்   பூண்டென்றவா”   றென்றும்,
“அறனென்றது,  அறக்  கடவுளை” யென்றும், “நன்காண்ட வென்றது,
வலித்த” தென்றும் கூறுவர்.
 

14 - 18. ஈரம்.........................தோன்றலை . 

உரை :  ஈரமுடைமையின்  நீரோர்  அனையை  -   நெஞ்சிலே
தண்ணிய   அன்புடைய   னாதலால்  தண்ணீரை  யொத்துள்ளாய்  ;
அளப்பருமையின்  இரு விசும்பு அனையை - அளத்தற்கரிய  சூழ்ச்சி
யுடையனாதலால்   பெரிய   விசும்பை   யொத்துள்ளாய்  ;  கொளக்
குறைபடாமையின்  முந்நீ  ரனையை  - இரவலர் வரைவின்றிக் கொள்
ளுதலுற்றவழியும்  செல்வம்  குறைபடாமையால்  கடலை யொப்பாய் ;
பன்மீன்     நாப்பண்     திங்கள்     போல     -    பலவாகிய
விண்மீன்களுக்கிடையே   விளங்கும்   திங்களைப்  போல  ;  பூத்த
சுற்றமொடு  பொலிந்து தோன்றலை - எல்லா நலங்களாலும் நிறைந்து
விளங்கும் சுற்றத்தாரிடையே விளக்கமுற்றுத் தோன்றுதலை யுடையாய்
எ - று.

கனலிய    பொருள் யாதாயினும் வந்த வழி அதனை யகத்திட்டுத்
தண்ணிதாக்கும்  நீர்போல, தக்கோர் யாவராயினும் வந்தவழி அவரை
விரைந்து  தழீஇக் கொண்டு அன்பு செய்தல் பற்றி, “நீரோ ரனையை”
யென்றார்.     அஃகி     யகன்ற     சூழ்ச்சியுடைமை      பற்றி,
“இருவிசும்பனையை”  யென்றார், போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய
தகலமும்    விளக்குதற்கு    ஆசிரியர்   முரஞ்சியூர்  முடிநாகனார்
“மண்டிணிந்த  நிலனும்  நிலனேந்திய  விசும்பும்”  (புறம்.  2) என்று
கூறுதல் காண்க. கொள்ளக் குறைபடாத செல்வமுடைமையை, “வருநர்
வரையாச்   செழும்   பல்   தாரம்,   கொளக்   கொளக் குறையாது
தலைத்தலைச்  சிறப்ப” (பதிற். 88) என்று பிறாண்டும் கூறியிருத்தலை
யறிக. “மழை கொளக் குறையாது புனல்புக மிகாது,கரைபொரு திரங்கு
முந்நீர்,  (மதுரைக். 424-5) என்பது பற்றி, “முந்நீ ரனையை” என்றார.்
சுற்றத்து  நடுவே  விளங்குதல்  பற்றி,  பன்மீன்,  நடுவண் விளங்கும்
திங்களை யுவமை கூறினார் ; “பன்மீன் நடுவண் திங்களை போலவும்,
பூத்த  சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி” (மதுரைக். 769-70) எனப்
பிறரும்  கூறுப.  தாதும்  மணமும் நிறைந்தவழி மலர் பூத்தல் போல,
செல்வமும்   புகழும்   சிறந்த சுற்றமென்றற்கு,  “பூத்த  சுற்றமொடு”
என்றார்  ;  இது  குறிப்  புருவகம் . நீரோ ரனையை யென்புழி, ஓர்,
அசைநிலை.

விறன்   மாந்தரன்   விறன்   மருக  என முன்னிலைப்படுத்திய
ஆசிரியர்    இதனால்   அவன்   நலம்   பலவும்    எடுத்தோதிப்
பாராட்டினாராயிற்று.

19 - 24. உருகெழு..................................உம்பல் .

உரை :  உருகெழு  மரபின்  அயிரை  பரவியும் -  அச்சந்தரும்
முறையினையுடைய  அயிரை  மலையிலுள்ள கொற்றவைக்கும்  பரவுக்
கடன்  செய்தும்  ;  கடல் இகுப்ப  வேலிட்டும் - கடலிடத்தே வந்து
பொருத  பகைவர் கெட வேற்படையைச் செலுத்தியும்; உடலுநர் மிடல்
சாய்த்தும்  - நிலத்தே வந்து பொருத பகைவரது வலியை  யழி்த்தும் ;
மலையவும  நிலத்தவும் அருப்பம் வௌவி - மலையிலும்  நிலத்திலும்
பகைவர்  கொண்டிருந்த அரண்களை வென்று  கைப்பற்றியும் ; பெற்ற
பெரும் பெயர்    பலர்  கை  இரீஇய கொற்றத் திருவின் உரவோர்-
பெற்ற  பெரும்  பொருளைப்   பலர்க்கும்  வழங்கியதனாலுண்டாகிய
கொற்றமும்  செல்வமுமுடைய   திண்ணியோராய   முன்னோருடைய;
உம்பல் - வழித்தோன்றலே எ - று.
 

“அணங்குடை   மரபிற் கட்டின்மே லிருந்து, தும்பை சான்ற மெய்
தயங்  குயக்கத்து,  நிறம்படு  குருதி  புறம்படி னல்லது, மடை யெதிர்
கொள்ளா,  அஞ்சுவரு  மரபிற்  கடவுள்  அயிரை” (பதிற். 79) என்ப
வாகலின், “உருகெழு மரபின் அயிரை பரவியும்” என்றார். கடலிகுப்ப
வேலிட்டவன், கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் . உடலுநர் மிடல்
சாய்த்து   அகநாடு   புக்கவர்  அருப்பம்  வௌவி  மேம்பட்ே்டார்.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் முதலாயினோராவர். பெரும் பெயர்
என்புழிப்  பெயர் என்றது  பொருளை  ; பொருளால் ஒருவர் பெயர்
நின்று நிலவுதலின், பெயர் எனப்பட்டது . “பெயரிற் றோன்றும் பாலறி
கிளவியும்”  (தொல்.  சொல். 11) என்புழிப் “பெயரென்றது பொருளை”
யெனச்   சேனாவரையரும்   கூறுதல்  காண்க.  பெற்ற பொருளைத்
தனக்கென  ஓம்பாது புலவர் பாணர் முதலாயினார்க்கு வழங்கிப் புகழ்
பெறுவது  இயல்பாதலால்,  “பெற்ற  பெரும் பெயர் பலர்கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர்” என்றார்.

இனிப்     பழையவுரைகாரர், “கட லிகுப்ப   வென்றது  கடலைத்
தாழ்க்கவேண்டி  யென்றவா”  றென்றும்,  “அருப்பம்  வௌவி மிடல்
சாய்த்தெனக்   கூட்டுக”   வென்றும்,   “பெயரென்றது   பொருளை”
யென்றும் கூறுவர்.

25 - 30. கட்டி............................வேந்தே .

உரை :  கட்டிப் புழுக்கின்  கொங்கர் கோவே - சர்க்கரைக் கட்டி
கலந்த அவரை முதலியவற்றாலாய உணவினை யுண்ணும் கொங்கருக்கு
அரசே   ;   மட்டப்  புகாவின்  குட்டுவர்  ஏறே  கள்ளொடு கூடிய
உணவினையுடைய  குட்ட  நாட்டவர்க்குத்  தலைவனே  ;  எழாஅத்
துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை தம்பாற் றோற்று அழிந்தார்மேல்
போர்க்  கெழாத  இணையான  தோள்களையுடைய பூழி நாட்டவர்க்கு
மெய்புகு கருவி போன்றவனே ; இறங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர்
பொருந  -  ஒலிக்கின்ற கடற் பரப்பின் கரையிடத்தே யுள்ள மரந்தை
நகரிலுள்ளார்க்குத்  தலைவனே  ; வெண்பூ வேளையொடு சுரை தலை
மயக்கிய     -    வெள்ளிய    பூவையுடைய    வேளைக்கொடியும்
சுரைக்கொடியும்  தம்மிற்  கலந்து  படர்ந்திருக்கும்  ; விரவு மொழிக்
கட்டூர்  -  பல  வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடி
வீடுகளையுடைய ; வயர் வேந்தே - வீரர்க்கு அரசனே எ - று.

அவரை   முதலியவற்றின் விதைகளை யிடித்துப் பெற்ற மாவோடு
சர்க்கரையைக்  கலந்தமைத்த உணவினை, “கட்டிப் புழுக்கு” என்றும்,
கொங்கு  நாட்டவர்க்கு  ஈது  உணவு என்பார்,  “புழுக்கிற் கொங்கர்
கோவே”  என்றும் கூறினார். குட்டுவர்,  தாம் உண்ணும் உணவோடு
கள்ளினையும்    சேர    வுண்ணுப   வென்றற்கு, “மட்டப் புகாவிற்
குட்டுவ” ரென்றார். “தீஞ்சேறு  விளைந்த  மணிநிற மட்டம்” (பதிற்.
42)   என்றதனால்   மட்டத்தின்     இயல்புணரப்படும்.    இனிப்
பழையவுரைகாரர்,  “கட்டிப் புழுக்கு என்றது,  கட்டியொடு  கூட்டின
அவரைப்  பரல் முதலான புழுக்கு” என்றும், “மட்டப்புகா வென்றது,
மதுவாகிய வுண” வென்றுங் கூறுவர்.
 

அறத்திற்     றிறம்பாது   பொருது   நிலைநாட்டும்  வன்மையே
சான்றோரால்  பாராட்டப்படு மாதலின், போரி லழிந்து புறங்காட்டினார்
மேல்  எழாத  பூழியரது  அறப்போர்  நலத்தை  வியந்து,  “எழாஅத்
துணைத்  தோட்பூழியர்”  என்றார்.  பழையவுரைகாரரும்,  “எழாஅத்
துணைத்தோளென்றது,  போரில்  முதுகிட்டார் மேற் செல்லாத இணை
மொய்ம்பு” என்பர்.

மரந்தை,   மேலைக் கடற்கரையில் சேரர்க் குரித்தாயதோர் நகரம்.
கடற்கரை   நகர   மென்பது,   “இரங்குநீர்ப்   பரப்பின்   மரந்தை”
என்பதனால்  இனிது  விளங்கும்  .  இது  குட்டுவ  னென்னும் சேர
வேந்தனால்  நிறுவப்  பெற்றமை  தோன்றச்  சான்றோர், “குட்டுவன்
மரந்தை”  (குறுந்.  34)  என்றும்,  “குரங்குளைப்  புரவிக் குட்டவன்
மரந்தை” (அகம். 376) என்றும், கூறுப.

பகைவரொடு    போர்செய்தல்  வேண்டித்  தானையொடு சென்ற
வேந்தர், போரெதிர்தல் வேண்டித் தங்குதற்காகச் சமைக்கப்படும் பாடி
வீடுகள்  “கட்டூர்”  என்றும்,  பல நாடுகளினின்றும் வந்த மக்களாகிய
தானையாதலாலும்,   அவர்   தத்தம்  மொழிகளையே  பேசுதலாலும்,
“விரவுமொழிக்  கட்டூர்”  என்றும்  கூறினார்: “விரவு மொழிக் கட்டூர்
வேண்டுவழிக்  கொளீஇ”  (அகம்  .  212)  என்று  பிறரும்  கூறுவர்.
பாடிவீடுகளில்  வேளைக்கொ  டியும் சுரைக்கொடியும் தம்மில் விரவிப்
படர்ந்திருப்பது தோன்ற, “வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
கட்டூர்” என்றார்.

இதனால்,   இச்  சேரமான்  கொங்குநாடு,  குட்டநாடு,  பூழிநாடு, 
குடநாடு  என்பவற்றைத்   தனக்குரியனாய்,   அந்நாட்டவர்   பரவும் 
நல்லரசனாய் விளங்கிய திறம் கூறினாராயிற்று.

31 - 40. உரவுக்கடல்................................புகழோயே .

உரை :   உரவுக்    கடலன்ன    தாங்கருந்  தானையொடு  -
பரப்பினையுடைய    கடல்    போன்ற   பகைவரால்  தடுத்தற்கரிய
தானையையும்   ;   மாண்வினைச்   சாபம்   மார்புற  வாங்கி   -
மாட்சிமைப்பட்ட    தொழிற்பாட்டையுடைய   வில்லை  மார்பளவும்
வளைத்தலால்  ;  ஞாண்  பொர  விளங்கிய  வார்ந்து புனைந்தன்ன
வலிகெழு  தடக்கை - அதன் நாண் உராய்தலால் விளக்கமுற்ற நீண்டு
ஒப்பனை  செய்தாலொத்த  வலி  பொருந்திய பெரிய கையினையும் ;
ஏந்து குவவு மொய்ம்பின் - உயர்ந்த திரண்ட வலியுற்ற தோளினையும்
; மீன்  பூத்தன்ன  விளங்கு  மணிப்  பாண்டில் - விண்மீன்  போல்
விளங்குகின்ற  மணிகள்  வைத்துத் தைக்கப்  பெற்ற பக்கரையையும் ;
ஆய்   மயிர்   கவரிப்     பாய்          மா      மேல்கொண்டு

அழகிய     கவரி மயிராலாகிய தலையாட்டத்தையு  முடைய பாய்ந்து
செல்லும்  குதிரை  யிவர்ந்து  ;  காழ்  எஃகம்  பிடித்து  எறிந்து  -
காம்பையுடைய   வேற்படையைப்  பற்றிப்  பகைவர்  மேலெறிந்து  ;
விழுமத்திற்  புகலும் - அவரெய்தும் துன்பத்தைக் கண்டு அதனையே
மேன்மேலும்  செய்தற்கு  விரும்பும்  ;  பெயரா ஆண்மை - நீங்காத
ஆண்மையினையும்  ;  காஞ்சி  சான்ற  வயவர் பெரும - நெஞ்சிலே
நிலையாமை   யுணர்வினையு   முடைமையாற்   பிறக்கும்  வலிமிக்க
வீரரையுமுடைய   தலைவனே  ;  வீங்கு  பெருஞ்  சிறப்பின்  ஓங்கு
புகழோயே  - மிக்க பெருஞ்சிறப்பினால் உயர்ந்த புகழையுடையோனே
எ - று.

தானையும்,     தடக்கையும், மொய்ம்பும், வயவரு முடைய பெரும
என்றும்,  புகழோ  யென்றும்  இயையும்.  வயவரை  வேறு  பிரித்துக்
கூறுதலின்,   தானை   யென்றது,   களிறும்  மாவும்  தேரும்  என்ற
மூன்றையும்  எனக்  கொள்க. பரப்பும் பெருமையுந் தோன்ற, “உரவுக்
கடலன்ன”  என்றும், பகைவரால் வெலற் கருமை தோன்ற, “தாங்கரும்
தானை” யென்றும் கூறினார் .

மார்புற  ாங்கி அம்புகளை மழைபோலச் சொரியும் தளர்ச்சியுறாத
வலிய  கட்டமைந்த வில்லென்பதற்கு, “மாண்வினைச் சாபம்” என்றும்,
பலகாலும்  வாங்கி  அம்பினைத் தொடுத்தலால், நாண் உராய்ந்து காழ்
கொண்டு விளங்குதலின், கையினை, “ஞாண்பொர விளங்கிய வலிகெழு
தடக்கை”  யென்றும்  கூறினார்.  வில்லை  மார்புற  வாங்குமிடத்தும்,
நாணைப்   பற்றி  அம்புதொடுக்கு  மிடத்தும்,  விரைவும்,   இலக்குத்
தவறாமையும்  வன்மையும்  கொண்டு, விற்போ ருடற்றற்கண் கைகளே
மிக்க  வலியும்  பெருமையு  முடையவாதல் வேண்டுதலின், “வலிகெழு
தடக்கை”  என்று  சிறப்பித்தார்  ;  இதுபற்றியே இப்பாட்டிற்கும் இது
பெயராயிற்  றென்க  . பழையவுரைகாரர், “ஞாண் பொர என்றது நாண்
உரிஞுதலால்”  என்று  பொருள் கூறி, “இவ்வடைச் சிறப்பானே இதற்கு
வலிகெழு  தடக்கை  யென்று  பெயராயிற்” றென்பர். “நிமிர் பரிய மா
தாங்கவும்,  ஆவஞ்  சேர்ந்த புறத்தை தேர்மிசைச், சாப  நோன்ஞான்
வடுக்கொள  வழங்கவும், பரிசிலர்க் கருங்கல நல்கவும் குருசில், வலிய
வாகு  நின்  றாடோய்  தடக்கை” (புறம். 14) எனச் சேரமான் செல்வக்
கடுங்கோ   வாழியாதனைக்  கபிலர்  பாராட்டிக்  கூறுதலும்  ஈண்டுக்
குறித்து  நோக்கத்  தக்கதாம்  இவ்வாறு  வலியும்  பெருமையுமுடைய
கைகட்கேற்ப,   அமைந்த   தோள்களின்   சிறப்பை,  “எந்து  குவவு
மொய்ம்பின்” என்றார். மொய்ம்பு, ஈண்டு ஆகுபெயராற் றோள்களைக்
குறித்து நின்றது. மொய்ம்பு, வலி . பழையவுரைகாரர்,  மொய்ம்பினைத்
தடக்கைக்   கேற்றி,   “மொய்ம்பினையுடைய  தடக்கையென  மாறிக்
கூட்டுக” என்பர்.

சேரமான் இவர்ந்து செல்லும் குதிரைக்குப் பக்கங்களில் வட்டமாகப்
புனையப் பெற்றுக் கட்டியிருக்கும் பக்கரையைப் “பாண்டில்”  என்றும்,
அதனிடத்தே  கோத்துத்  தைக்கப்  பெற்றிருக்கும்  வெண்மணிகளை,
“மீன்  பூத்தன்ன  விளங்குமணி”  யென்றும்  கூறினார்  .  அதற்குத்
தலையிற்  காட்டிய  தலையாட்டம் கவரிமயிராலாய தென்றற்கு, “ஆய்
மயிர்க் கவரி” யென்றார். அம்மயிர்  சிக்குறாது  வார்ந்து  ஒழுகுமாறு
செப்பம்    செய்திருப்பது  தோன்ற,  ஆய் மயிர்” என்றார் . கவரி :
ஆகுபெயர்.
 

ஏந்திய     வேலைப் பகைவர்மே லெறிந்து தாக்கியவழி,   அவர்
புண்ணுற்றுப்   பெருந்துன்பம்  உழப்பக்  கண்டும்  மறம்  தணியாது
மேன்மேலும்     மண்டிச்     சென்று     பகைவர்க்குப்      புண்
ணுண்டாக்குதலையே பெரிதும் விரும்பும் இயல்பு குறித்து, “காழெஃகம்
பிடித்தெறிந்து  விழுமத்துப்  புகலும்”  என்றார். தான் புண் செய்தலே
யன்றிப், பிறரால் தான் புண்ணுறினும் அதனையே விரும்புவரென்றற்கு,
“விழுமத்திற்   புகலும்”   எனப்   பொதுப்படக்  கூறினார்.  புகற்சிக்
கேதுவாகிய   ஆண்மை,   பெயராமையால்  விளங்குதலின், “பெயரா
ஆண்மை”    யென்றும்,   அதுதானும்   நிலைபெறுதற்கு,  யாக்கை
நிலையாமையும் புகழின் நிலைபேறுடைமையும் நெஞ்சில்  நிலவுதற்குக்,
“காஞ்சி  சான்ற  வயவர்”  என்றும்  கூறினார்.  பழைய  வுரைகாரர்,
“காழெஃகம்   பிடித்தெறிந்தும்   விழுமத்திற்   புகலும்   என்றற்குப்
பகைவரை  யென்னும் பெயரை வருவித்துக் காம்பையுடைய வேலைப்
பிடித்தெறிந்து  அப்பகைவர்க்கு  இடும்பை செய்கையிலேயே விரும்பு
மென்றவா” றென்று கூறுவர்.

இக்கூறியவாற்றால்     சிறப்பு மிகுதலின், “வீங்கு பெருஞ் சிறப்பி”
னென்றும்  இதனா  லுண்டாகும் புகழ், ஏனையோ ரெய்தும் புகழினும்
ஓங்கி நிற்றலின், “ஓங்கு புகழோய்” என்றும் கூறினார்.

41 - 50. கழனியுழவர்....................கணவ .

உரை :  கழனி  யுழவர்  தண்ணுமை  இசைப்பின்   - கழனியில்
தொழில்புரியும்  உழவர்  தண்ணுமையினை  முழக்குவராயின் ;  பழன
மஞ்ஞை  மழை  செத்து  ஆலும்  - பழனங்களில் வாழும்  மயில்கள்
மழைமுகிலின்   முழக்கமெனக்   கருதி   ஆடும்;  தண்  புனலாடுநர்
ஆர்ப்பொடு    -   குளிர்ந்த   நீரில்   மூழ்கியாடுவோர்   செய்யும்
ஆரவாரத்தோடு ; வெம்போர் மள்ளர் தெண் கிணை மயங்கிக் கறங்க
-  வெவ்விய  போரைச்செய்யும்  வீரருடைய தெளிந்த  ஓசையமைந்த
தடாரிப்பறை  கலந்து முழங்க ; கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப
-  செல்வமுடைய  நல்ல  மனைகளிலேயுள்ள  ஆனேறுகள்  தம்மின்
மாறுபட்டு  முழங்க  ; செழும் பல இருந்த கொழும்பல் தண் பணை -
செழுமையான   பல   வூர்களையுடைய   வளமிக்க   பல  குளிர்ந்த
வயல்களைக்   கொண்ட   ;   காவிரிப்  படப்பை  நன்னாடன்ன  -
காவிரியாற்றால்   வளமுறப்  படைக்கப்பட்ட  நிலப்பகுதியாகிய நல்ல
நாட்டைப்   போலும்   ;   வளங்கெழு   குடைச்சூல்  தொழில்வளம்
பொருந்திய   சிலம்பையும்  ;  அடங்கிய  கொள்கை  அடக்கத்தைப்
பொருளாகக்  கொண்ட  கொள்கையையும்  ; ஆறிய கற்பின் - சினங்
கொள்ளுத  லில்லாத  அறக்கற்பையும் ; தேறிய  நல்லிசை - யாவரும்
தெளிய விளங்கும் நல்ல புகழையும் ; வண்டார்   கூந்தல்  -  வண்டு
மொய்க்கும்     கூந்தலையும் ;     ஒண்டொடி    கணவ  -ஒள்ளிய
தொடியையு முடையாட்குக் கணவனே எ - று.
 

மஞ்ஞை     ஆலும் நாடு, காவிரிப் படப்பை நாடு என இயையும் .
கழனிக்கண்   தொழில்   புரியும்   உழவர்,   தாம்   வித்திய  நெல்
விளைந்தவழி    யதனை    யரியுங்கால்   தண்ணுமை   யிசைத்தல்
மரபாதலின்,  “கழனி  யுழவர்  தண்ணுமை”  யென்றார் ; “வெண்ணெ
லரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப் பல்புள் ளிரிய” (நற். 350) என்று
பிறரும்   கூறுதல்   காண்க.   மயில்,  மழைமுகிலைக்  கண்டு  தன்
தோகையை  விரித்தாடுவது  இயல்பாதலால், தண்ணுமையின் முழக்கம்
மழை  மழக்கம்  போல்வது  கண்டு  மயில் ஆலுவதாயிற் றென்றற்கு,
“மழைசெத்தாலும்”   என்றும்,  மருதநிலத்தேயுள்ள  மயிலென்றற்குப்,
“பழன மஞ்ஞை” என்றும் கூறினார்.

புனலாடுவோர் பெருங் கூட்டமாகச் சென்று பல்வகை வாச்சியங்கள்
இயம்ப நீர்விளையாட்டயர்தல் பண்டைநாளை மரபாதலின், “தண் புன
லாடுந  ரார்ப்பொடு”  என்றார்.  வெவ்விய  போர்த்தொழில்  பயிலும்
மறவர்,    போர்க்குரிய    தடாரிப்பறையை    முழக்க,   அதனிசை
புனலாட்டாரவாரத்தோடு   கலந்து   முழங்கிற்  றென்பதாம்  .  கூழ்,
செல்வம்  ;  சோறுமாம்  வேளாளரில்லங்களில்  உள்ள  ஆனேறுகள்
அம்முழக்கங்  கேட்டு,  மருண்டு  தம்முண் முரண்கொண்டு முழங்கின
வென்பார்,   “ஏறு  மாறு  சிலைப்ப”  என்றார்  ;  “ஆமா நல்லேறு
சிலைப்ப”  (முருகு.  315)  என்று  பிறரும் கூறுப. “ஏறுமாறு சிலைப்ப
என்றது, ஏறுகள் ஒன்றற்கொன்று மாறாக முழங்க வென்றவா” றென்பது
பழையவுரை.  செழும்பல  கொழும்பல  என்புழிப்  பன்மை முறையே
ஊர்கள் மேலும் வயல்கள் மேலும் நின்றன. ஊர்கட்குச் செழுமையும்,
வயல்கட்குக் கொழுமையும் சிறப்புத் தருவனவென வுணர்க.

காவிரியாறு    கடலொடு கலக்குமிடத்து அது கொணரும் வண்டல்
தங்கி   நாளடைவிற்   பெருகிக்   காவிரி   பாயும்  பூம்புனல்  நாடு
படைக்கப்பட்ட   (Delta)   தாகலின்,  ‘காவிரிப்  படப்பை  நன்னா”
டெனப்பட்டது  .  படைப்பு  எனப்படல் வேண்டுமாயினும், அச்சொல்
நிலஞ்   சுட்டாது  பொருளையே  சுட்டி  நிற்றலின்,  நிலஞ் சுட்டும்
வகையில்     படப்பையாகிப்     பின்பு     “படப்பை”     யென
வழங்குவதாயிற்றெனக்   கொள்க.   “டெல்டா”   என்ற பகுதிகளைப்
பண்டையோர்  “படப்பை யென வழங்கியதுபோல, ஹார்பர் (Harbour)
எனப்படு்ம்  துறைமுகங்களைப்  பண்டைத் தமிழர் “நாவாய்க்  குளம்”
என வழங்கினர் என, ஆசிரியர் திரு . சதாசிவப் பண்டாரத்தாரவர்கள்
கூறுகின்றார்கள்  .  மகளிர்  நலத்துக்குச் சிறப்புடைய நகரங்களையும்,
நாடுகளையும்   உவமமாகக்   கூறுவது   பண்டையோர்  மரபாதலின்,
“நன்னாடன்ன  ஒண்ெ்டாடி”  யென்றார்.  “குட்டுவன், மரந்தையன்ன
வென்னலம்” (அகம். 376) என்று சான்றோர் கூறுவது காண்க.

குடைச்சூல்     சிலம்பு ; குடைச்சூலை யுடைமைபற்றி, இப்பெயர்,
பெறுவதாயிற்று.  “குடைச்சூற்  சித்திரச்  சிலம்பு”  (சிலப்.  16: 118-9)
என்பதற்கு  “புடைபட்டு  உட்கருவை  யுடைய  சித்திரத்  தொழிலை
யுடைத்தாகிய  சிலம்பு”  என்று  உரை கூறி, “குடைச்சூல், குடைபடுத
லென்பாரு  முளர்” என்று  கூறினர்  அடியார்க்கு  நல்லார் ; அதன்
அரும்பதவுரைகாரர்,          “குடைச்சூல்,                புடை

தாழ்த்தல் ;  உள்ளுட்  டாழ்த்தலுமாம்”  என்பர் . சித்திரத் தொழில்
நிறைந்து விளங்குமாறு தோன்ற “வளங்கெழு குடைச்சூல்” என்றார்.

பெருநல     முடையளா யிருந்தும், அடக்கத்தையே  பொருளாகக்
கொண்டொழுகிய   சிறப்பினால்,  “அடங்கிய  கொள்கை”  யென்றும்,
அக்கொள்கையின்   பயன்   கணவன்பால்   சிவந்து  துனித்தற்குரிய
காரணங்கள்  உளவாகிய வழியும், அது செய்யாது இன்சொல்லும் பணி
நடையும்  கொண்டிருப்பது  தோன்ற  “ஆறிய கற்பு” என்றும், இ்ன்ன
நன்னடையால்  மனைக்கு  விளக்காய்  வண்புகழ்  கொண்டு யாவரும்
பரவ  இருக்கும்  நலம்  விளக்குவார்,  “தேறிய  நல்லிசை”  என்றும்
கூறினார்  ;  பிறரும், வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குக்
கூறும்     கூற்றில்     வைத்து,     “திருநகரடங்கிய       மாசில்
கற்பின்.............அணங்குசாலரிவை” (அகம். 114) என்பது காண்க.

இவ்வாறு    தேவியின்     குணநலம்    கூறியவர்,    உருநலம் 
கூறலுற்று, “வண்டார் கூந்த லொண்டொடி” யென்றார்.

51 - 57. நின்னாள்..........................கிழவோயே .

உரை :   நின்நாள்  திங்கள்  அனையவாக  -  ஒரு  திங்களின்
காலவளவு   நின்   வாழ்நாளின்   ஒருநாள்  அளவாகுக  ; திங்கள்
யாண்டோர்  அனையவாக - நின் வாழ்நாளில் ஒரு திங்களின் அளவு
ஓர்  யாண்டின்  கால  வளவிற்றாகுக;  ஆண்டு ஊழி அனையவாக -
வாழ்நாளில்    ஓர்   யாண்டினளவு   ஊழியளவிற்றாகுக   ;  ஊழி
வெள்ளவரம்பினவாக  -  வாழ் நாளின் ஊழிக்கால வெல்லை வெள்ள
மென்னும்  காலவெல்லையின்  அளவிற்றாகுக ; என உள்ளி - என்று
கருதி  வாழ்த்திக்கொண்டு; செருமிக்கு உருமென முழங்கும் முரசின் -
போரில்  மேம்பட்டு  இடி போல  முழங்கும் முரசினையும்; பெருநல்
யானை  -  பெரிய நல்ல யானைகளையுமுடைய ; இறை கிழவோய் -
இறைமைத்  தன்மைக் குரியோனே ; யான் காண்கு வந்திசின் - யான்
நின்னைக் காண்பேன் வந்தேன் எ - று.

உலகவர்     கூறும்  திங்களும், யாண்டும், ஊழியும், வெள்ளமும்
முறையே நின் வாழ்நாளின் நாளும், திங்களும், யாண்டும், ஊழியுமாக
நீடுக  என்பதாம்.  ஊழி, எண்பது யாண்டுகளின் கால லளவு போலும்.
பல  வூழிகளின்  எல்லை  வெள்ள வரம்பு.  “வெள்ள வரம்பி னூழி
போகியும், கிள்ளை  வாழிய” (ஐங். 281) எனச் சான்றோர் கூறுதலால்,
காலக் கணக்கின் வரம்பு வெள்ளமென்று துணியலாம்.

பிறவியிலே     இறைவனாதற்குரிய நன்மாண்பனைத்தும் ஒருங்கு
பெற்றுத்   தோன்றினா   னென்றற்கு,  “இறை  கிழவோய்” என்றார்.
இறைவனாதற்குரிய   உரிமை,  இயற்கை  யறிவோடு  கல்வி கேள்வி
முதலியவற்றாலுண்டாகும்   செயற்கை   யறிவும்  பிறவும் பெற்றவழி
யெய்துவதாக,  அவையாவும் கருவிலே யுடைய னென்றற்கு இவ்வாறு
கூறினாரென வுணர்க.
 

இதுகாறுங்     கூறியவாற்றால், “விறன் மாந்தரன் விறன் மருக, நீ,
நீரோரனையை,  இருவிசும்பனையை, மூந்நீரனையை, பூத்த சுற்றமொடு
பொலிந்து தோன்றலை, கொற்றத் திருவின் உரவோர் உம்பல்,கொங்கர்
கோவே,   குட்டுவர்  ஏறே,  பூழியர்  மெய்ம்மறை  ;  மரந்தையோர்
பொருத,  வயவர்  வேந்தே,  பெரும, ஓங்கு  புகழோயே, ஒண்டொடி
கணவ,  இறை  கிழவோய்,  நின்  நாள்  திங்க ளனையவாக, திங்கள்
யாண்டோ  ரனையவாக, யாண்டே  ஊழி யனையவாக, ஊழி வெள்ள
வரம்பினவாக என உள்ளி, யான் காண்கு வந்திசின் என்பதாம். இனிப்
பழையவுரைகாரர்,  “மருக,  உம்பல், கொங்கர் கோவே, குட்டுவரேறே,
பூழியர்  மெய்ம்மறை,  மரந்தையர் பொருந, வயவர் வேந்தே, வயவர்
பெரும,   ஓங்கு   புகழோய்,   ஒண்டொடி  கணவ, இறைகிழவோய்,
ஈரமுடைமையின்    நீரோ    ரனையை   ;   அளப்   பருமையின்
விசும்பனையை ; கொள்ளக் குறைபடாமையின் முந்நீரனையை ; பூத்த
சுற்றமொடு  பொலிந்து  தோன்றுதலை யுடையை ; ஆதலால், நினக்கு
அடைத்த   நாட்கள்,   உலகத்தில்   திங்களனையவாக   வென்றும்,
நின்னுடைய   திங்கள்   யாண்டனையவாக  வென்றும்,  நின்னுடைய
யாண்டு  ஊழியனையவாக  வென்றும்,  நின்  யாண்டிற்  கொப்பாகிய
அப்பல்லூழி    தம்மளவிற்பட்ட    பலவாய்    நில்லாது   வெள்ள
வரம்பினவாக  வென்றும்,  நினைத்து நின்னைக் காண்பேன் வந்தேன்
எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்று கூறுவர்.

இதனாற்     சொல்லியது  அவன்  தண்ணளியும்   பெருமையும்
கொடையும்  சுற்றந்தழாலும் உடன்கூறி வாழ்த்தியவா றாயிற்று. ஒளிறு
என்பது  முதலாக  நான்கடியும்,  அறன்  வாழ்த்த  என்பது முதலாக
இரண்டடியும், கடலிகுப்ப என்பது முதலாக இரண்டடியும், காழெஃகம்
பிடித்தெறிந்து  என  ஓரடியும் வஞ்சி யடியாக வந்தமையான் வஞ்சித்
தூக்குமாயிற்று.

நின்னா ளென்பது கூன்.


 மேல்மூலம்