பரிபாடல்
பரிமேலழகருரை
- - -
முதற்பாடல்
திருமால்
திருமாலே! ஆயிரம் முடியையுடைய ஆதிசேஷன்நின் திருமுடிமேல் கவிக்கப் பெற்றாய்; நீதிருமகள் தங்கும் மார்பையுடையை; சங்கைப்போன்றதிருமேனியையும் யானைக்கொடியையும் கலப்பையாகியபடையையும் ஒற்றைக் குழையையுமுடைய பலதேவனாகஉள்ளாய்.
தாமரை மலரைப்போன்ற கண்களையும் காயாம்பூவை யொத்த திருமேனியையும் திருமகள் விரும்பி வீற்றிருக்கும் மார்பினையும் அம்மார்பில் விளங்குகின்ற கௌஸ்துபமணியினையும் பீதாம்பரத்தையும் உடையை; கருடச் சேவற் கொடியையுடையாய்! வேதம் நின் பெருமையைக் கூறாநிற்கும்.
* * * * *
நின்னோடு போர்புரிவேமென்று வந்தவர்களது வலி கெடும்படி வென்ற அண்ணலே! காமன் பிரமனென்னும் இருவருக்கும் தந்தையே! விளங்கும் ஆபரணங்களை யணிந்த திருமாலே! நின்னுடைய வரலாற்றை அறிதல், மயக்கம் நீங்கிய ஞானியர்க்கும் அரிதாகும்; அத்தகையையுடைய நின்னை இத்தகையனென்று கூறுதல் அடியேமுக்கு எங்ஙனம் எளிதாகும்?
திருமறுமார்ப! நின் வரலாற்றை அறிதல் அருமையென்பதை நன்கு அறிந்தேமாயினும் நின்பால் எமக்குள்ள அன்பு பெரிதாதலின் சொல்லுதற்குரிய ஆற்றலில்லாத யாம் இங்கே சொல்பவற்றைப் பொருளற்றனவென்று வெறாமல் அருள்புரிதல் வேண்டும்.