பக்கம் எண் :

226

பரிபாடற்றிரட்டின் பொருட்சுருக்கம்

----

முதற் பாடல்

திருமால்

மேகங்கள் மழைபொழியஅந்நீர் மலைகளினின்று இழிந்து மதுரையிலுள்ளார்எதிர்கொள்ளும்படி வருகின்ற துறையினிடத்தேபொருந்திய இருந்தையூரில் எழுந்தருளியிருக்கும்திருமாலே! நின்திருவடியைத் தொழுது பரவுகின்றோம்.

நீ எழுந்தருளியிருக்கும்இடத்தில் ஒருசார் மணியின் நிறங்கொண்ட மலைஉள்ளது; அம்மலையில் வேங்கை மரா மகிழ்அசோகம் முதலியன ஓங்கி வளர்ந்திருக்கின்றன.

வேறொருபால் ஆகாயத்தில்நக்ஷத்திரங்கன் இருத்தலைப் போலப் பல மீன்கள்பரந்துள்ள அழகு தங்கும் கயம் உள்ளது; அதன்கண்தண்ணறுந் தாமரைப் பூவினிடையிடையே உள்ளபோதுகளில் வண்டுகள் முழங்கும்.

ஒருசார் திருமகளும் விரும்பும்வயல்கள் உள்ளன; அங்கே வெள்ளத்தின் ஒலிக்குஎதிரே உழவுக்குரிய ஓசையைச்செய்து திரிபவர்களும்ஆரவாரம் செய்து நாற்று நடுபவர்களும்கூடியிருக்கின்றனர்.

ஒருசார் நகரம் உள்ளது; அங்கேஒருபால் தருமத்தோடு வேதத்தாற் சொல்லப்படும்தவத்தை முடித்துப் புகழ் நிலைத்து நிற்பவிளங்குகின்றவர்களும் தம் நிலையினின்றும்திரியாதவர்களும் ஆகிய அந்தணர் உள்ளார்.அந்நகரில் ஒரு பக்கத்தில் உண்ணும் பொருள்கள்பூசும் பொருள்கள் பூண்பன உடுப்பவை மண்ணுவன மணிபொன் மலைப்பண்டங்கள் கடற்பண்டங்கள்முதலியவற்றை விற்கும் வணிகருக்குரிய வீதி உள்ளது.மென்புலத்திலும் வன்புலத்திலும் வேளாண்மைசெய்யும் களமரும் உழவரும் உள்ள வீதி ஒரு சார்;இவற்றோடு நல்லவாகிய இன்பங்கள் நன்குகூடப்பெற்றன.

அந்நகரத்தின்கண்நல்வினையின் பயனைத் துய்க்கும் துறக்கம் போலஇரண்டு படப் பொறியை யணிந்த வரைகெழு செல்வனது(ஆதிசேடனது) திருக்கோயில் விளங்குகின்றது.அக்கோயிலின்கண்ணே மகளிரும் மைந்தரும்இளைஞரும் முதியரும் குழுமி நைவேத்தியத்தையும்மலர்ச்செப்பையும் தூபத்தையும் ஏந்திஇடையொழிவின்றி நெருங்கி வழிபடுவர்.