பக்கம் எண் :

34

வலந்துழி மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்
தலர்ந்த புகழோன் றாதை யாகலின்
15இகழ்வோன் இகழா நெஞ்சின னாகநீ யிகழா
நன்றா நட்டவவ னன்மார்பு முயங்கி
ஒன்றா நட்டவ னுறுவரை மார்பிற்
படிமதஞ் சாம்ப வொதுங்கி
இன்ன லின்னரொ டிடிமுர சியம்ப
20வெடிபடா வொடிதூட் டடியொடு
தடிதடி பலபட வகிர்வாய்த்த வுகிரினை
புருவத்துக் கருவல் கந்தத்தாற்
றாங்கியிவ் வுலகந் தந்தடிப் படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர்புகழ் குன்றினோ டொக்கும்
25நின் வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள
நின் தண்மையுஞ் சாயலுந் திங்களுள

பிணிகள்படப் பிணித்தவழி அம்மிக்க நோயால்ஒடுங்குதற்குக் காரணமான நடுக்கத்தையுடைய அப்பிருங்கலாதன்தன் தாதையாகலின் அவ் விகழப்படுவோனை இகழாதநெஞ்சினனாக நீ அவனை இகழ்ந்து தனக்கு நன்றாக நட்டஅப்பிருங்கலாதன் வருந்தாமல் அவன் நெஞ்சிற் பொருந்திநின்னோடு ஒன்றாக வரங்கொண்ட இரணியனது உறுவரைபோலும் மார்பிற் பகைவலி கெடச்சென்று துன்பத்தைக்காட்டும்உற்பாதங்களோடு பொருந்தி அவன் இடிமுரசு ஒலிப்பநீ புறப்படுதலால் வெடித்து ஒடிந்த தூணின் பிளப்போடொத்தநின்னால் தடியப்பட்ட ஊன்தடி பலபட வகிர்தல்வாய்த்த உகிரினை.

மார்பின் (17) வகிர்தல் (21) எனஇயையும்.

படி யென்பது பாகதச்சிதைவு. ஒருகாலத்தேஇரண்டு தடியும் வீழ்ந்தனவென விரைவு கூறியவாறு.

22 - 4. முன்வெள்ளத் தழுந்தினகாலத்துவராகமாய்க் கருமையையும் வன்மையையுமுடைய கழுத்தாற்றாங்கி இவ்வுலகத்தை அவ்வெள்ளத்தினின்றும் எடுத்துத்திருத்தியதொழில் மேருவின் தொழிலோடொக்கும்.

25. ஞாயிற்றுள - ஞாயிற்றின் கண்ணேகாணப்படா நின்றன. வருகின்றவற்றையும் இவ்வாறுஉரைக்க.

26. சாயல் - மென்மை; திங்களின்கண்ணேயுள

25 - 6. வெம்மை தண்மையென்றதுபகைவர்மாட்டு வெகுளுதலையும் அன்பர்மாட்டுஅருளுதலையும்.

(பி - ம்.)16 ''நட்டவன்வண்ணமார்பு''20 ''வெடிபட'' 21 ''வகிர்தல் வாய்த்த'' 22 ''பூருவத்துக்''; ''கந்தரத்தாற்''