நின்திருமார்பிலுள்ள ஆபரணங்கள் இந்திரவில்லை யொக்கும்;அவற்றின் இடையே உள்ள நித்திலமதாணியோ சந்திரனையொக்கும்;அந்தச் சந்திரனுக்குரிய மறுவைப் போலத் திருமகள்வீற்றிருக்கின்றாள். நீ ஆதிவராகமான காலத்தில்வெள்ளத்துள் மூழ்கி எடுத்த நிலமகளைக் கொம்பிடைக்கொண்டுதழுவுதலாலே புள்ளியளவேனும் அந்நிலம் வெள்ளத்தால் வருந்தவில்லையென்ற புகழோடு அத்திருமார்பு விளங்குகின்றது. எதிர்த்துவந்த அவுணர்கள் கலங்கஇடியோசை போல் நின் சங்கு முழங்குகின்றது.
நீ ஏந்திய சக்கராயுதம்அவுணர்களுடைய தலைகளைப் பனங்காய்கள்போல உருளச்செய்துஅவர்களை அழிக்கும். அவ்வாயுதத்தின் உருவம்பகைவரின் உயிரையுண்ணும் கூற்றத்தை யொக்கும்;அதன் நிறம் சுட்ட பொன்னோடு விளங்கும்நெருப்பின் கொழுந்தை ஒக்கும்.
நினது திருமேனியின்ஒளி நீலமணியையும், நின்கண்கள் இணைத்தாமரையையும்,நின்வாய்மை தப்பாது வருகின்ற தினத்தையும், நின்பொறைநிலத்தையும், நின் அருள் நீர்நிறைந்த மேகத்தையும்ஒக்குமென்று வேதம் கூறும். யாம் கூறிய அப்பொருள்களையும்பிறவற்றையும் பண்புகளாலும் தொழில்களாலும் ஒத்தனை;எப்பொருளின் அகத்தும் நீ இருக்கின்றாய்.
கருடக்கொடியைஉடையோய்! வேள்வியாசானது உரை நின் உருவம்;வேள்விக்குரிய பசுவைக்கொள்ளல் யூபஉருவாகிய நினக்குஉணவு; வேள்வித்தீயை முறையாக மூட்டிச் சுடரினதுபெருக்கத்தை உண்டாக்கிக் கோடல் அந்தணர்காண்கின்ற நின் வெளிப்பாடு; கடவுள் இல்லையென்பாரும்அது கண்டு உண்டென்பர்.
தேவர்களுக்குஉணவாகிய அமிர்தத்தைக் கடைந்து கொடுப்பதாகநின் திருவுள்ளத்தில் நினைந்த அளவிலே அத்தேவர்க்குமூவாமையும் ஒழியாவலியும் சாவாமையும் உரியவாயின.ஆகவே நின் பல புகழ் எங்கும் பரந்தன.
அத்தகைய அரியமரபினோய்! எம்முடைய அறிவு கொடும்பாடு அறியாமல்எமக்கு மெய்யுணர்வே உண்டாக வேண்டுமென்று நின்அடியைத் தலையுற வணங்கிப் பலமுறை வாழ்த்திச் சுற்றத்தோடுபரவுகின்றோம்; அருள்புரிவாயாக.