| | அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கேளாள் தமியள்1 மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற |
| 5. | வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் கண்ணிய துணரா அளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி |
| 10. | மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் ாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கும் நிரைநிலை அதர |
| 15. | பரன்முரம் பாகிய பயமில் கானம் இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னம் காட்டி முகத்தின் உரையா |
| 20. | ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை மாமலர் |
| 25. | மணியுரு இழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே. |
| | -பாலை பாடிய பெருங்கடுங்கோ. |