பக்கம் எண் :

16அகநானூறு

விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான், அங்ஙனம் மாட்சிமைப் பட்ட மான் தேர னாதலான் என்றவாறு. அதற்கென்னை காரண மெனின், ‘துணையொடு வதியும் தாதுண் பறவை’ எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. மணிநா வொலி கேட்பின் வண்டு வெருவு மாகலின் அது கேளாமை மணி நாவினை யியங்காமை யாப்பித்த மாண் வினைத் தேரனாகி வாரா நின்றானென இவையெல்லாம் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. ‘கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள்’ தெய்வமலை யாகலான்; அதனுள் அமன்ற காந்தளைத் தெய்வப் பூ வெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணம் கமழ்ந்த நின் கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மையின் என இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று. இவ்வாறே பலவும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகிய ‘சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா வடிநிலை காறும்’ என அடங்கக் கூறி நோக்குதற்கும் காரணம் நோக்கென்றான் என்பது.

“மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று”1 என்னும் சிந்தா மணிச் செய்யுள் உரையில், நச்சினார்க்கினியா வண்டிற்குச் செவியறிவு உண்டெனக் கூறிப் ‘பூத்த...தேரன்’ என்னும் இச் செய்யுட் பகுதியை எடுத்துக் காட்டினர்.

‘ஏனோர் மருங்கினும்’2 என்னும் சூத்திர உரையில் இச் செய்யுளை யெடுத்துக் காட்டி, ‘இதனுள் முல்லைக்குரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இருத்தலாகிய உரிப்பொருளும் வந்தவாறு கண்டு கொள்க’ எனவும், ‘முதல் கரு உரிப் பொருள்’3 என்னுஞ் சூத்திரவுரையில் இதனை எடுத்துக் காட்டி, ‘முல்லைக்கு முதலும் கருவும் வந்து, உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது’ எனவும் முறையே கூறுவர், இளம். நச். ‘குரங்குளை...பரிய’ என்பதனையும், ‘இரும்பு...தெறிப்ப’ என்பதனையும், மொழிமாற்றுப் பொருள்களுக்கு4 உதாரணம் காட்டினர், நச்.


1. சீவக: 892.

2. தொல். அகத் : 24.

3. தொல். அகத் : 3.

4. தொல். எச்ச : 12.