(வி - ரை.) நடுநின்று காய்தலின்: நடு - முதுவேனிற் காலத்தின் நடுக்கூறாகிய நாட்கள். தேர் - பேய்த்தேர். உறுபெயல் ‘பரத்த’ என்பது பாடமாயின், பெயல் (வறந்து) ஒடு தேராய்ப் பரவிய என்க. சிறிய இலை - சிறியிலை என விகாரப்பட்டது, வேலத்து: அத்து, சாரியை. கறங்கும் கவ்வை எனவும், வாட்டித் துணித்த எனவும் கூட்டுக. மலிர ஆட்டி எனப் பிரித்து, ஆட்டி எனற்கு அலைத்து என்றுரைத்தலுமாம். வாள் வயவர் என்றதனால் வாணிகச் சாத்தரும் வீரராயிருப்பர் என்பது பெற்றாம். அவருடன் போர் புரிந்து கொன்றார் என்பது தோன்றவே ஞாட்பில் என்றார். தேன் கலந்த பால் சுவை வீரியங்களாற் சிறக்கும் என்பது 1'பாலொடு தேன் கலந்தற்றே’ என்பது முதலியவற்றான் அறியப்படும். தேன் கலந்த பாலைத் தானும் அச்சுறுத்தி ஊட்டவும் உண்ணாது ஓடுபவள் சிறுமியரும் உணவுண்ண மறுக்குங்கால், உண்பிக்கும் தாயர் அவர்கட்கு இனிய கதைகள் கூறியும் அச்சுறுத்தியும் உண்பித்தல் இயல்பு என்க. 90. நெய்தல் [பகற்குறி வந்து கண்ணுற்று நீங்குந் தலைமகனைத் தோழி எதிர்ப் பட்டு நின்று இற்செறிப் பறிவுறீஇயது.] | மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி இளையோ ராடும் வரிமனை சிதைக்கும் தளைவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச் சில்செவித் தாகிய புணர்ச்சி அலரெழ | | 5. | இல்வயின் செறித்தமை அறியாய் பன்னாள் வருமுலை வருத்தா அம்பகட்டு மார்பில் தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின் நீங்கு கென்றியான் யாங்ஙனம் மொழிகோ அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணா அது | | 10. | பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் 2கடுங்கண் கோசர் நியமம் ஆயினும் உறுமெனக் கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிழை விலையே. | | -மதுரை மருதனிள நாகனார். |
1. குறள்: 1121. (பாடம்) 2. கருங்கண். |