பக்கம் எண் :

216அகநானூறு

93. பாலை

[வினைமுற்றி மீளலுறுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும்
கேளல் கேளிர் கெழீ இயினர் ஒழுகவும்
ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்
தாரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
5. அறங்கெழு நல்லவை உறந்தை அன்ன
பெறலரு நன்கலன் எய்தி நாடும்
செயலருஞ் செய்வினை முற்றின மாயின்
அரண்பல கடந்த முரண்கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
10. நாளங் காடி நாறும் நறுநுதல்
நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து
15. நலங்கேழ் ஆகம் பூண்டுவடுப் பொறிப்ப
மயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல்
வயந்திகழ் பிமிழ்தரும் வாய்புகு கடாத்து
மீளி மொய்ம்பொடு நிலனெறியாக் குறுகி
ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
20. கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதை
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் கவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே.

-கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

(சொ - ள்.) 16. நெஞ்சே-,

1-3. கேள் கேடு ஊன்றவும்-உறவினரைக் கேட்டினை நீக்கித் தாங்கவும், கிளைஞர் ஆரவும்-கிளைகளாயுள்ளார் உண்ணவும், கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்-நொதுமலாளர் கெழுதகையினராகி ஒழுகவும் வேண்டி, ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு-பொருளீட்டும் முயற்சிக்கு ஏற்றதாய ஊக்கங்கொண்டு, புகல் சிறந்து-விருப்பம் மிக்கு,