பக்கம் எண் :

களிற்றியானை நிரை215

வளைந்த கோடுகளையும் சிவந்த கண்ணினையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலிலே, வாரல் - நீ வாராதிருப்பாயாக;

5-7. நேர் இறை நெடு மென் பணைத்தோள் இவளும் யானும்-மெல்லிய முன் கையினையும் நீண்ட மெல்லிய மூங்கிலை யொத்த தோனினையுமுடைய இத்தலைவியும் யானும், காவல் கண்ணினம் தினை-தினைப்புனங் காத்தலைக் கருதியுள்ளோம்;

7-13. நாளை - நாளைப் பகற்கண், மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்-மந்திகளும் ஏறி அறியமாட்டாத மரங்கள் செறிந்த காட்டில், ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண்-ஒள்ளிய செங்காந்தள் மலர்ந்த அவ்விடத்தே, தண்பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை - பலவாய தண்ணிய அருவிகள் வீழும் சுனையின் ஒருபுறம், உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திருமணி விளக்கில்-இடி சினந்து தாக்கலின் வலி யழிந்த பாம்பினது அழகிய தலைமணியாகிய விளக்கிலே, இருள் மெல் கூந்தல் ஏம்உறு துயில் - தலைவியின் இருண்ட மெல்லிய கூந்தலகத்து இன்பம் உறும் துயிலை, பெறுகுவை-நீ அடைவாய்.

(முடிபு) ஐய! வாழியர்! மழை பொழிந்த பானாட்கங்குல் குஞ்சரம் தாக்கிப் புலி குழுமும் சாரல் வாரல்; இவளும் யானும் தினை காவல் கண்ணினம்; நாளை இறும்பில் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் தாழ் நீர் ஒரு சிறை பாம்பின் திருமணி விளக்கில் கூந்தல் ஏம்உறு துயில் பெறுகுவை.

(வி - ரை.) நாளை காவல் கண்ணினம் எனலுமாம். கோடு வாழ் குரங்கு எனப்படுவதும், மரமேறுந் தொழிலிற் சிறந்ததுமாகிய மந்தியும் ஏறி அறியாத என மரத்தின் உயர்ச்சி கூறியவாறு. உம்மை சிறப் பும்மை. 1'குரங்கறி வாரா மரம்பயி லிறும்பில்’ எனப் பின்னர் இந் நூலினும், 2'மந்தியு மறியா மரம்பயி லொருசிறை,’ 3'மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்து’ எனப் பிற நூல்களிலும் வருதலுங் காண்க-இனி, மந்த என்பதற்கு ஞாயிறு எனப் பொருள் கொண்டு, பருதியின் கதிர் நுழைய லாகாதவாறு மரங்கள் செறிந்த காடு என்னலுமாம். பகற்குறி நேர்ந்தாள்போற் கூறினும், காந்தள் அவிழ்ந்த ஆங்கண் அருவித் தாழ்நீர் ஒருசிறை என்றமையின், பூக்கொய்ய வருவாராலும் அருவியாட வருவாராலும் பகற்குறியும் அரிதென்பது புலப்படுத்தி வரைவு கடாயினா ளாயிற்று.


1. அகம்: 368.

2. நற்: 194.

3. முருகு. அடி: 42.