வீரக்கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டுநின்ற போரை விரும்பிய சேயையொக்கும் பெரிய வென்றியையுடையவனது நாடு-எ - று. வித்தி ஆடிய செவ்வியென இயையும். நந்தியென்பது முதலாய வினையெச்சங்கள் விளைந்தவென்னும் பெய ரெச்சவினையோடும், அரியவென்பது முதலாக மேவரவென்பதீறாக நின்ற வினையெச்சங்கள் யாணர்த்தென்னும் குறிப்புவினையோடும் முடிந்தன. பகர்ந்தென்பது பகரவெனத் திரிக்கப்பட்டது. விசைப்பச் சோறட்டு மேவரவென இயையும். செருவெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங்கொல்லோவெனக் கூட்டுக. பெருந்தோளென்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. வெப்புளென வெம்மைக்கு அதுவும் ஒரு வாய்பாடாய் நின்றது; வெம்மையை உள்ளும் முதிர்ந்தவெனினும் அமையும். (கு - ரை.) 4. பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தலென்பன ஒரு பொருட் சொற்கள்; அது நெருங்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும் வருத்தமின்றிக் களை பிடுங்குதற்குமாகக் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையின் இரண்டுபக்கத்தும் மேற்புறத்திலுள்ள வளையங்களிற் கட்டிய கயிறுகளைச் சேர்த்துப் பூட்டிய நுகத்தை வாய் கட்டப்பட்டுள்ள எருதுகளின் பிடரியில் வைத்துப் பூட்டி உழச்செய்தல். 10. "சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்ப" (மதுரைக். 271) (120) 121 | ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிதே பெரிதும் ஈத லெளிதே மாவண் டோன்றல் | | 5 | அதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. |
திணை - அது; துறை - பொருண்மொழிக்காஞ்சி. மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது. (இ - ள்.) ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைந்து நான்கு திசையினுமுள்ள பரிசின்மாக்கள் பலரும் வருவர்; அவர் வரிசையறிதல் அரிது; கொடுத்தல் மிகவும் எளிது; பெரிய வண்மையை யுடைய தலைவ! நீ அவ்வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின், அறி வுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக- எ - று.
|