சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் 1துப்பாகிய தேர் வண்மலையனை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் (பி - ம். துப்பாகிய வொருவனாம் மலையனை வடவண்ணத்தன் பேரிசாத்தன்) பாடியது. (இ - ள்.) பருத்திநூற்கும் 2பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு போன்ற நெருப்புத் தன்வெம்மை ஆறுதற்கு ஏதுவாகிய நிணமசைந்த கொழுவிய தடிகளைப் பெரிய உடலிடத்தையுடைய கள்வார்த்த மண்டையோடு முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட உண்பேமாக, எம்முடைய தலைவ! நின்னைக் காண்பேன் வந்தேன், பகைவரது வலியைத் தொலைத்த வலிய ஆண்மையுடையோய்! நினது மகிழ்ச்சியையுடைய இருக்கைக்கண்; உழுத வலிய பகடு பின் வைக்கோலைத் தின்றாற்போல நினது 3தாளாற்றலாற்செய்த பொருளை யாவர்க்கும் அளித்துப் பின் நீ விரும்பியுண்ணும் கள் நல்ல அமிழ்தாவதாக; மலைபோலும் யானை பட எதிர்நின்று கொன்று வென்றவனும், நம்மை வெல்வித்தோன் இவனென நின்னையே மகிழ்ந்து சொல்லும்; வீரக்கழலாகிய அணியாற்சிறந்த செய்ய அடியாலே போர்க்களத்தைக் கைக்கொள்ளவேண்டி விரைந்து வந்து போரைத் தடுக்க வலிய வேலினையுடைய மலையன் அல்லனாயின் நல்ல போரைவெல்லுதல் நமக்கு எளிதெனத் தோற்றவனும் நம்மைத் தொலைவித்தோன் இவனென நின்னையே புகழ்ந்துசொல்லும்; ஆதலால், நீ ஒருவனாயினாய், பெரும ! பெரிய மழைக்கு இருப்பிடமாதற்கு அமைந்த உயர்ந்த மலையையுடைய திருத்தக்க சேயையொப்பாய்! நின்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றோர்க்கு-எ - று. பனுவலன்ன நிணமென இயையும். நிலங்கவர்பென்பது கவரவெனத் திரிக்கப்பட்டது. எமது நிலத்தைக் கைக்கொண்டெனினும் அமையும். தாளாற்றலாற் செய்தபொருளில் நல்லனவெல்லாம் பரிசிலர்க்கு வழங்கி எஞ்சியது உண்டலான்,அழிதின்றாங்கென்றார். காண்குவந்தென்பன ஒருசொன்னீர்மைப்பட்டு உண்குமென்பதற்கு முடிபாய் நின்றன.
1. புறநா. 122 : 5, குறிப்புரை. 2. பெண்டாட்டி - பெண்; "மழையு மஞ்சும் வளியும் போலும், செலவினா ளொருபெண்டாட்டி" (தகடூர்யாத்திரை) ; 'ஒருபெண்டாட்டி தமரொடு கலாய்த்து' (இறை. சூ. 1, உரை) 3."தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு" (குறள், 212)
|