பக்கம் எண் :

610

பாடினோர் வரலாறு

அடைநெடுங்கல்வியார் :-இது கல்வியாற் பெற்ற சிறப்புப்பெயர். எளிதில் அடைந்த மிக்க கல்வியையுடையாரென்பது இதன் பொருள். பாண்பாட்டு, மகட்பாற்காஞ்சியென்னுந் துறைகள் இவரால் அழகு பெறப் பாடப்பெற்றுள்ளன. இவராற் பாடப்பட்டோரும், இவர்காலத்தவரும் இன்னாரென்று விளங்கவில்லை; 283, 344 - 5.

அண்டர்மகன் குறுவழுதி :-தொகைநூல்களில் குறுவழுதியாரென்று ஒரு பெயர் காணப்படுகின்றது. இவ்விருபெயரினரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. வழுதி என்ற பெயரால் இவர் பாண்டிய மரபினர் என்பது போதரும். அண்டர்மகன் குறுவழுதி இயற்றியனவாகப் புறச் செய்யுள் ஒன்றும், குறுந்தொகைச் செய்யுளொன்றும், குறுவழுதி யென்பார் அகநானூற்றில், 150, 228-ஆம் செய்யுட்கள் இயற்றியனவாகவும் உள்ளன. இவராற் பாடப்பட்டவர் பெயர் முதலியன விளங்கவில்லை. இவர் வாக்கில் வந்துள்ள “கல்வி யென்னும் வல்லாண் சிறாஅன்” (புறநா. 346) என்பது பாராட்டற்பாலது.

அரிசில்கிழார் :-கொள்ளிடத்தின் வடபால் அரியிலூர் அல்லது அரியில் என்று வழங்கும் ஓரூரின் பெயர் அரிசில் என்பதன் மரூஉவாகக் கருதப்படுகின்றது; சகர யகரங்கள் தம்முள் மயங்குதல் இயல்பு. “அரிசிற்கரை” என்று மைஸுர் ஸமஸ்தானத்தில் ஓர் ஊர் உள்ளது. கிழார் - உரியவர். கிழாரென்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப்பெயராக இருந்ததென்று தெரிதலின், இவர் வேளாண் மரபினராக இருத்தல் கூடும். இஃது, “ஊரும் பேரும்” (தொல். மரபு. 74) என்னும் சூத்திரத்தின் உரையிற் காட்டிய பெயர்களாலும், திருத்தொண்டர்புராண வரலாற்றின் 2-ஆம் செய்யுளில் எடுத்துக்காட்டிய பெயர்களாலும் அறியலாகும். கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய பேகனைப் பாடியிருத்தலின் இவர் அவன் காலத்தினராக நினைக்கப்படுகின்றார்; அவனால் துறக்கப்பட்ட கண்ணகி யென்பவளை அவனோடு சேர்த்தல்வேண்டி அவனைப் பாடினர்; இந்தக் கண்ணகி சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட கண்ணகியல்லள். அதியமான் தகடூர்பொருது வீழ்ந்த எழினியின் பிரிவாற்றாது வருந்தி இவர் புலம்பினர்; பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்தைப் பாடித் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையிடம் ஒன்பது நூறாயிரங் காணம் பரிசில்பெற்று அவன்பால் அமைச்சுத்தொழில் பூண்டு விளங்கியவர். தகடூர்யாத்திரை என்னும் நூலில் இவராற் பாடப்பட்ட பாடல்களும் சில உள்ளனவென்பது தொல்காப்பியப் புறத்திணையியலில் 8, 12-ஆம் சூத்திரமுதலியவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் விளங்குகின்றது. திருவள்ளுவ மாலையிலுள்ள, “பரந்த பொருளெல்லாம்” என்னும் 13-ஆம் செய்யுள் இவரியற்றியதாகக் கூறப்பட்டிருத்தலின், திருவள்ளுவர் காலத்தினராகிய கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராக