பக்கம் எண் :

609

உரையில்லாத மூலங்கள் எழுத்துஞ்சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்த தன்றி, இவற்றுள் சில பாடல்களின்பின் திணை எழுதப்படாமலும் சிலவற்றின்பின் துறை எழுதப்படாமலும் சிலவற்றின் பின் இரண்டும் எழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும் சிலவற்றின்பின் பாடப்பட்டோர் பெயர் சிதைந்தும் சிலவற்றின்பின் இருவர் பெயருமே சிதைந்தும் சில பாடல்கள் இரண்டிடத்து எழுதப்பட்டு இரண்டெண்களையேற்றும் வேறு வேறிடத்தில் .இருத்தற்குரிய இரண்டு பாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணையேற்றும் சில முதற்பாகம் குறைந்தும் சில இடைப்பாகம் குறைந்தும் சில கடைப்பாகம் குறைந்தும் சில முற்றுமின்றியும் ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறுபாடல்களின் அடிகளோடு கலந்தும் ஓரடியே ஒரு பாட்டுட் சிலவிடத்து வரப்பெற்றும் பொருளுண்மை காணாதவண்ணம் இன்னும் பலவகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகளில் இருந்தன. இவற்றைப் பரிசோதித்து வருகையில், இந்நூலிலிருந்து வேறு நூல்களினுடைய பழையவுரைகளின் இடையிடையே உரையாசிரியர்களால் பூர்ணமாகவும் சிறிது சிறிதாகவும் எடுத்துக் காட்டப்பட்டிருந்த உதாரணங்களும், புறத்திரட்டென்னும் தொகைநூலும் சிற்சில பாடல்களிலுள்ள வழுக்களை நீக்கிச் செவ்வை செய்துகொண்டு பொருளுண்மை காணுதற்கும், சிற்சில பாடல்களிற் குறைந்த பாகங்களை நிரப்பிக்கொள்ளுதற்கும் பிறழ்ந்துகிடக்கும் சில பாடல்களை ஒழங்குபடுத்தி வரையறை செய்துகொள்ளுதற்கும் பெருந்துணையாக இருந்தன.

இதன் முதற்பதிப்பிற் காணப்படாத சில திருத்தங்களும் செய்திகளும் இரண்டாம் பதிப்பில் அமைந்துள்ளன. இரண்டாம் பதிப்பைக்காட்டிலும் இப்பதிப்பில் பாடினோர் பெயர், அடிக்குறிப்புக்கள் என்பவற்றில் சில சிறு மாறுதல்களும் சில புதிய செய்திகளும் காணப்படும். உரையின் இயல்பென்ற பகுதி யொன்று புதியதாக எழுதி இப்பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னிரண்டு பதிப்பைப்பற்றிய விரிவான வரலாறுகள் அவ்வப்பதிப்புப் புத்தகங்களிலுள்ள முகவுரைகளால் அறியலாம்.

இரண்டாம் பதிப்பைப் போலவே இப்பதிப்பிலும், இதன் மூலங்களோடு சொல்லாலும் பொருளாலும் ஒத்திருக்கும் இந்நூற் பகுதிகளும் பிறநூற் பகுதிகளும், இந்நூற் செய்யுட்களின் முழுப்பாகமேனும் ஒவ்வொரு பகுதியேனும் மேற்கோளாக வந்துள்ள இடங்களும், பழைய உரையால் விளங்காதவற்றிக்குக் குறிப்புரையும், உரையில்லாத பாடல்களெல்லாம் பதவுரை எழுதுவதற்குரிய திருத்தமுறாமலிருந்தமையின் அவற்றின் அடிகளுட் சிலவற்றிற்குமட்டும் அறிந்த அளவு குறிப்புரையும் மூலத்திலும் உரையிலும் கண்ட பிரதிபேதங்களும் ஆராய்ச்சி செய்வோர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்குமென்றெண்ணி மூலமுள்ள பக்கங்களில் அங்கங்கே அடிக்குறிப்பாகச் சேர்க்கப் பெற்றுள்ளன. மூலத்திலும் உரையிலும் காணப்படும் அரும்பதங்கள், தொடர்மொழிகள், புலவர் பெயர்கள், தலைவர் பெயர்கள், அரியசெய்திகள், உவமைகள் முதலியன தொகுக்கப்பெற்று, ‘அரும்பத முதலியவற்றின் அகராதி’ என்னும் தலைப்பில் அமைக்கப் பெற்றுள்ளன.