பக்கம் எண் :

608

அக்காலமுதல் இந்நூலைபபற்றிய செய்திகளைத் தொகுக்கத் தொடங்கினேன். பல இடங்களில் தேடி அன்பர்களுடைய பேருதவியாற் பல கையெழுத்துப் பிரதிகளைப் பெற்று ஆராய்ந்து வரலானேன். இறைவன் திருவருளால் இந்நூலின் முதற்பதிப்பு 1894-ஆம் வருஷத்திலும் இரண்டாம் பதிப்பு 1923-ஆம் வருஷத்திலும் வெளியாயின. இந்நூல் முதற்பதிப்பு வெளிவந்த காலத்தில் அதன் முகவுரையில், ‘இத்தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்துகொள்ளுதலிலும் தெரிவித்தலிலுமே பெரும்பாலும் காலம் கழித்து உழைத்துவரும் உபகாரிகளாகிய விவேகிகள், இந்நூலை நன்கு ஆராய்ச்சி செய்வார்களாயின், பலருடைய வரலாறுகள் முதலியன தெரிந்துகொள்ளுதல் கூடும்’ என்றெழுதியிருந்தேன். அப்பதிப்பு வெளிவந்த பின்னர் இன்று வரையில் தமிழ் நாட்டின் சரித்திரச் செய்திகளை அறிவதற்கு இந்நூல் இத்தனை வகையாகப் பயன்பட்டிருக்கின்றதென்பதைத் தமிழ் நாட்டினர் நன்கு அறிவர். தமிழ்ப்புலவர் வரலாறுகளையும், தமிழ்ப்பேரரசர், சிற்றரசர், உபகாரிகள் முதலியோர்களுடைய சரித்திரங்களையும், பண்டைத்தமிழருடைய ஒழுக்க வழக்கங்களையும் இதிற்கண்ட ஆராய்ச்சியாளர் பலர் அவற்றைத் தனித்தனியே தொகுத்தும் விரித்தும் விரவுவித்தும் அமைத்துப் பலவகையான சரித்திரங்களையும், ஆராய்ச்சி நூல்களையும்,சிறுவர்களுக்குரிய புத்தகங்களையும் வெளியிட்டிருக்கின்றனர். இவ்வொரு நூல் இத்துணை ஆராய்ச்சிகளுக்கு இடங்கொடுப்பதையும் இதனை வெளியிடும்படி நேர்ந்த திருவருட்டிறத்தையும் எண்ணும்போது தமிழ்ப்பணியை இடையீடின்றிச் செய்து வருங்கால் இடையிடையே பலவகையால் தோன்றும் துன்பங்களை மறந்துவிடற்குரிய பெரிய ஆறுதல் உண்டாகின்றது.

காலஞ் சென்ற ஜி. யு. போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும். அவர் இப்புத்தகம் வெளிவந்த காலத்தில் இப்புத்தகத்தைப் பாராட்டி அடிக்கடி எனக்கு எழுதுவதுண்டு. இதிலுள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கின்றார். ஒவ்வோர் ஆங்கில வருஷப் பிறப்பன்றும் இந்நூற் செய்யுட்களுள் ஒன்றை மொழிபெயர்த்து எனக்குச் சில வருஷங்கள் வரையில் அனுப்பிவந்தார்.