பக்கம் எண் :

607

யென்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீராதலானும் இவ்விரண்டுமில்வழி ஊற்றுநீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், “நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும்” என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது, ஆனால் முந்நீர்ப்பொருள் யாதோ வெனின் முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச்செய்கையாவன ‘மண்ணைப் படைத்தலும், மண்ணையழித்தலும், மண்ணைக்காத்தலும்’ என்று கூறுவர். இம்மறுப்பு முற்கூறிய உரைப்பகுதியை மறுத்ததாகக் கொள்ளின் அடியார்க்கு நல்லார்க்கு இவ்வுரையாசிரியர் முற்பட்டவரென்று கொள்ள இடமுண்டு.

ஏறக்குறைய 55 வருஷங்களுக்கு முன்பு சீவகசிந்தாமணியை யான் ஆராய்ந்து வருகையில் திருவாவடுதுறை யாதீனகர்த்தர்களாக விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் ஆதீன புத்தகசாலையிலிருந்து அளித்த ஏட்டுப்பிரதிகளுள் மிகப்பழையனவும் பெயரெழுதப்படாதனவுமான மூன்று சுவடிகள் இருந்தன; அவற்றில் முதலுமில்லை; இறுதியுமில்லை; பக்கங்கள் மிகச் சிதைந்தும் தேய்ந்துபோயும் இருந்தன. அந்தக் காலம் பத்துப்பாட்டு இன்னவை எட்டுத்தொகை இன்னவை என்று தெரியாத காலம். சில வருடங்களுக்குப் பின்பு சீவகசிந்தாமணியைப் பதிப்பித்து வருகையில் விளங்காத மேற்கோள்களுக்குரிய இடத்தைத் தேடிவரும்பொழுது அந்தச் சுவடிகளுள் ஒன்றை ஒருநாள் பிரித்துப் பார்த்தேன். அப்போது, “கொற்றுறைக் குற்றில” என்னும் தொடர்மொழி காணப்பட்டது. சீவகசிந்தாமணி, கனகமாலையாரிலம்பகம் 309-ஆம் செய்யுளின் உரையில் இத்தொடர்மொழியை நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் கொடுத்திருத்தலால், இஃது ஏதோ ஒரு பழைய நூலாக இருக்கவேண்டுமென்று மட்டும் தெரியவந்தது. பிறகு படித்துப் பார்க்கையிற் பாட்டும் உரையும் காணப்பட்டன. அப்பால் அந்தப் பாடலின் எண்ணைக் கவனிக்கையில் ‘95’ என்று தெரிந்தது. நற்றிணை முதலியவற்றின் மூலம் மட்டும் அடங்கிய கையெழுத்துப் பிரதி வேறு இருந்தமையால் அவற்றுள் ஒவ்வொன்றையும் சோதித்துக்கொண்டு வரும்போது இது புறநானூற்று உரை யென்று தெரிந்தது. அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. மற்ற இரண்டு குறைச் சுவடிகளுள் ஒன்று பரிபாடலுரை; மற்றொன்று பத்துப் பாட்டுரை.