பக்கம் எண் :

612

இருந்தாரென்பதும், அவனைப்பாடிய ஆலத்தூர்கிழார் முதலிய புலவர் ஒன்பதின்மரும் இவர் காலத்தினரென்பதும் தெரிகின்றன; “பகைவர்களையும் அவர்கள் சேனைகளையும் கொன்று உன்பசியை எளிதில் ஒழிக்கும் இந்த வளவனைக் கைக்கொண்டாயே! இனி உன் பசியைத் தீர்க்கும் ஆற்றலுடையார் யாவர்? உனக்கே நீ தீங்கை விளைவித்துக் கொண்டமையின் நீ மிக்க பேதைமையையுடையாய்!” (புறநா. 227) என்று கூற்றத்தை நோக்கி இவர் கூறின செய்யுள் பாராட்டற்பாலது.

ஆலங்குடி வங்கனார் :-ஆலங்குடி யென்னும் பெயருள்ள ஊர்கள் பல இருத்தலின் இவர் ஊர் இன்னதென்று நிச்சயிக்கக்கூட வில்லை. தொகைநூல்களில் ஏழு பாடல்களும், திருவள்ளுவமாலையில் ஒரு செய்யுளும் இவர் செய்தனவாக இப்பொழுது காணப்படுகின்றன. காமக்கிழத்தியர் தலைவனை ஆடிப்பாவை போன்றான் என்று இகழ்தலும் (குறுந். 8) உயர்குடிப் பிறந்த கற்புடைமகளிர் தம்தலைவர் கொடுமைபுரியினும் அதனைமறந்து அன்புபாராட்டுதலும் (குறுந். 45) கூறும் முகத்தால் இவர் இருவேறு மகளிருக்கும் உள்ள வேற்றுமையை நன்கு புலப்படுத்துகின்றார். இவர் பாடிய நற். 330-ஆம் பாடலும் இவ்வேற்றுமையையே காட்டும்.

ஆலத்தூர்கிழார் :-ஆலத்தூரிற் பிறந்தவர் இவர். ஆலத்துார் என்ற பெயருள்ள ஊர்கள் தமிழ் நாட்டிற் பல உள்ளன. இதனை இன்ன ஆலுத்தூரென்று சொல்லமுடியவில்லை. நன்றியறிவும், அரசர்களை இடித்துக்கூறும் மனவலியும் குறிப்பறிந்தளிக்கும் உபகாரிகளின் இயல்பை வெளிப்படுத்தும் அன்புடைமையும், போர்செய்யும் முறைமையை விளக்கும் இயல்பும், பொருள்களின் இயற்கைநலனைப் புலப்படுத்தும் நுண்ணறிவும் உடையவர் இவர். “நெடுங்காற் கணந்துளாளறி வுறீஇ, யாறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்” (குறுந். 350) எனக் கணந்துட் பறவையின் தன்மையை இவர் தெரிவிக்கின்றார். இவர் செய்தனவாகத் தொகைநுால்களில் 7 செய்யுட்கள் (புறநா. 5, குறுந். 2) காணப்படுகின்றன. இவராற் பாடப்பட்போர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவனும், சோழன் நலங்கிள்ளியுமாவர்.

ஆலியார் :-ஆலி என்பது சோழநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய ஆலிநாடென்பதன் தலைநகர். இது திருமங்கையாழ்வார் அவதரித்த தலமென்பர். இவ்வூரினராதலால் இவர் இப்பெயர்பெற்றார் போலும்; இவ்வூர்ப்பெயர் திருவாலியென வழங்காநிற்கும். தன்னுடைய தலைவன் தனக்குச் சிறந்த உணவை யளிக்கின்றானேயன்றி, போர் செய்தற்குத் தன்னை முந்திச்செல்லென்று ஏவுகின்றானல்லனென்று ஒருவீரன் சொல்லியதாக இவர் இயற்றிய பாடலின் (புறநா. 298) பொருள் வீரச்சுவையைப் புலப்படுத்துகிறது. இதனால் இவர் வீரர்குடியிற் பிறந்தவராகவும் கருதப்படுகிறார்; இப்பெயர் சில பிரதிகளில் ஆவியாரென்றும், ஆனீயாரென்றும் காணப்படுகிறது.