ஆவூர்கிழார் :-ஆவூரென்னும் பெயருள்ள ஊர்கள் பல இருத்தலின் இந்த ஆவூர் இன்ன இடத்திலுள்ளதென்று தெரிந்துகொள்ளக் கூடவில்லை; ஆனாலும், மருதநிலத்தின் வளம் இவர் பாடலிற் கூறப் பெற்றிருத்தலின், இது சோழநாட்டிற் காவிரியின் தென்கரையிலுள்ள ஆவூராக இருக்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது. கள்ளியின் முள்ளிற்குக் காளையின் பதனழிந்த கொம்புகளை இவர் உவமை கூறியிருக்கின்றார். இப்பெயர் ஆவூரழகியாரென்றும் சில, பிரதிகளிற் காணப்படுகின்றது. ஆவூர்மூலங்கிழார் :-இப்பெயர் இவருக்கு நாண்மீனால் வந்தது போலும்; மூலம் - ஒரு நக்ஷத்திரம். இவருடைய பாடல்களுள் அடியில் எடுத்துக்காட்டிய கருத்தமைந்த பகுதிகள் சிறந்தவை:- (1) ‘செங்கோலினனாகிய ஓரரசனது நாடு சுவர்க்கத்தினும் சிறந்தது’; (2) ‘வேந்தே! நீ இன்சொல்லையும் பிறர் வந்து காணுதற்கு எளியதாகிய சமயத்தையும் உடையையாவை’; (3) ‘பல நாள் தேகம் உலரக் காத்திருந்து பெருஞ்செல்வரிடத்துப் பெற்ற யானை முதலிய பெரும்பரிசில்களைக்காட்டிலும் ஒருவன் அன்புடனளிக்கும் உணவைக் காலையிற் பனம் பட்டையில் உண்ணல் மிகச் சிறந்தது’; (4) ‘அரச! கையிலுள்ளதைக் கொடுத்தலும் இல்லாததை இல்லையென்றலும் உலகியற்கை; அங்ஙனமின்றிப் பரிசிலரை அலைக்கழித்தல் உனக்கு நன்றன்று; நான் செல்வேன்’. இவற்றால் இவருடைய குணவிசேடங்கள் புலனாகின்றன. இன்னும் பரம்பரைத் தொழிலை வழுவின்றிச் செய்துபோதரும் ஓரந்தணனுடைய இயல்பையும், தன் வீரர்க்கு முன்னே போரில் முற்படும் ஓரரசனது இயற்கையையும் யானையின்மேலன்றி ஏனையிடங்களில் தன் வேலினை எறியாத ஒரு வீரனது இயல்பையும் இவர் பாராட்டியிருக்கின்றார். ஓருபகாரி இறந்த பின்பு அவன் வீட்டை நோக்கி, ‘கணவனை யிழந்து மழித்த தலையையுடைய கழிகலமகடூஉவைப்போல்கின்றாய் நீ’ என்று இரங்கிக் கூறியதும் யாவருடைய உள்ளத்தையும் கனியச்செய்யும். இவர் செய் தனவாகத் தொகை நூல்களில் 12-செய்யுட்கள் காணப்படுகின்றன: அகநா. 4; புறநா. 8. இவராற் பாடப்பெற்றோர்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கீரஞ்சாத்தன், மல்லிகிழான்காரி யாதி முதலியோர். இவர்காலத்திலிருந்த புலவர்: சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் முதலிய தலைவர் நால்வரைப் பாடிய பதின் மூவராவர்.
|