பக்கம் எண் :

615

இடைக்குன்றூர்கிழார் :-இவருக்கு இப்பெயர் ஊரான் வந்தது. நெடுஞ்செழியனென்பான் தனது மிக்க இளமைப்பருவத்தில், சோணாட்டுள்ள தலையாலங்காடென்னும் ஊரில் முடிமன்னர்களாகிய சேர சோழர் இருவரையும் ஐம்பெருவேளிரையும் பொருதுவென்ற பெருவிறலும் அவனுடைய அடக்கமும் பிற விசேடகுணங்களும் இந்நூலுள் இவர் வாக்கில் நன்கு அறியலாகும். இவராற் பாடப்பட்டோன் அப்பாண்டியன். இவர்காலத்துப் புலவர் அவனைப் பாடிய கல்லாடனார் முதலியோராவர். இவர் பாடிய பாடல்கள் : 76 - 9.

இரும்பிடர்த்தலையார் :-இவர் சோழன்கரிகாலனுடைய அம்மான்; அவனுக்குப் பெருந்துணையாயிருந்தவர்; “சுடப்பட்டுயிருய்ந்த சோழன் மகனும், பிடர்த்தலைப் பேரானைப் பெற்றே - கடைக்காற், செயிரறு செங்கோல் செலீஇயினான்” என்னும் பழமொழி வெண்பா வாலும் அதன் பழைய உரையாலும் உணர்க. யானைப்பிடரை இரும்பிடர்த்தலை யென்று சிறப்பித்தமைபற்றி இவர் இப்பெயர்பெற்றார் போலும் (புறநா. 3 : 11) . இவருடைய இயற்பெயர் விளங்கவில்லை. தலைவன், இரவலருடைய குறிப்பறிந்து கொடுக்கும் வண்மைநலம் முதலியன இவராற் பாராட்டப் பெற்றுள்ளன; இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி.

உலோச்சனார் :-இவர் நெய்தற்றிணையையே மிகுதியாகச் சிறப் பித்துள்ளார். இதனாலும் தலைவியின் கூற்றாக, ‘கழிசூழ்படப்பைக் காண்டவாயில்....எம் அழுங்கலூரே’ (நற். 38) என்று கூறுவதனாலும் இவர் நெய்தல் நிலத்தைச்சார்ந்தவர் என்று ஊகிக்கலாம். உலோச்சென்பது சைனர்கள் செய்து கொள்ளும் ஒரு கிரியை. அதனால் இவர் சைனரென்று கொள்ளுதற்கு இடமுண்டு. இவர்வாக்கில் எருமைமற மென்னுந்துறை விளங்கக் கூறப்பெற்றுள்ளது; இவராற் பாடப்பட்டோன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர் பாடிய பாடல்கள் : 35 (அகநா. 8, குறுந். 4, நற். 20, புறநா. 3)

உறையூர் இளம்பொன் வாணிகனார் :-இவர் வணிகர்; ஒரு வீரனுடைய கொடைச்சிறப்பும் போரில் இறந்த பின்பு அவனுக்காக நட்ட வீரக்கல்லின் கோலமும் அவனை இழந்தமையாற் பாணர்கள் படுந் துன்பமும் இவராற் கூறப்பட்டிருக்கின்றன.