கோடைபாடிய பெரும்பூதனார் :-பெரும்பூதனாரென்பது இவரது இயற்பெயர்; கோடைமலையையோ கோடைக்காலத்தையோ நன்குபாடிய இவருடைய ஆற்றலுடைமையைக் கண்டு, ‘கோடைபாடிய என்னும் அடைமொழியை இவர்பெயர்க்கு முன்பு ஆன்றோர் அமைத்தனர் போலும்; “முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத், தாவுபு தெறிக்குமான்” (259) என்னும் இவர் பாடலானது முருகக் கடவுளின் ஆவேசங் கொண்டு மகளிர் ஆடும் வழக்கம் பண்டைக் காலத்தில் உண்டென்பதைத் தெரிவிக்கின்றது. கோதமனார் :-இவர் பெயர் கௌதமனாரெனவும், பாலைக் கௌதம னாரெனவும் வழங்கும்; இவர் அந்தணர். பதிற்றுப்பத்தில் 3-ஆம் பத்தைப் பாடி இவர் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனாற் சுவர்க்கம் பெற்றார்; இதனை, “பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார். பத்துப்பாட்டு...பாடிப் பெற்ற பரிசில் : ‘நீர் வேண்டியது கொண்மின்’ என, ‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகவேண்டும்’ என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டுப் பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம்பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையுங் காணாராயினார்” (பதிற். 3-ஆம் பத்தின் இறுதிக்கட்டுரை) என்பதனாலும், “பாடாண்டிணையே” (தொல். புறத்திணை, சூ. 25, ந.) என்பதன் விசேடவுரையாலும், “சேரன் குட்டுவன்புகழைச் செய்யுளாகத் தொடுத்த கௌதமனென்னும் பெரிய புலவன், ‘யானும் என்சுற்றமும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களை முடித்துத் துறக்கத்தைத்தா’ என்றாற்கு, அவன் சொற்குறை தீர்ப்பான்பொருட்டு உவந்து யாகங்களை நடத்தி, “நீ வேண்டிய துறக்கத்தின்கண் நீடு வாழ்வாயாக’ என்றான்; ஆதலால் புனைந்து இப்பெற்றியாரென்று புகழவேண்டுவதில்லை; இயற்கையாகக் கொடுக்கும் சீலத்தார் தம் அளவினாற் கொடுக்க வல்லதனைத் தாமே அறிந்துகொடுப்பார்” (பழ. 316, பழையவுரை) என்பதனாலும் உணர்க. கோப்பெருஞ்சோழன் :-“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே, ஐய மறாஅர் கசடீண்டு காட்சி, நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே”, ”பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே, செல்வக்காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன்” என்பவை இந்நூலுள் இவன் பாடல்களிற் சிறந்த பகுதிகள். இவனாற் பாடப்பட்டோர் பிசிராந்தையார். இவனியற்றிய பாடல்கள்: குறுந். 4; புறநா. 3. இவனுடைய பிற வரலாற்றைப் பாடப்பட்டோர் வரிசையிற் காண்க.
|