பக்கம் எண் :

629

குறுங்கோழியூர் கிழார் :-இவர் வேளாளர்; சேனையை இவர் வருணித்தல் மிக அழகியது; இவராற் பாடப்பட்டோன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை யென்னுஞ் சேரவரசன்; போரிற் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணிப்புண்டு அப்பால் அப்பிணிப்பைத் தானே நீக்கிக்கொண்டு சென்று அவன் சிங்காசனத்திலேறிய வரலாறும், அச்சேரனுடைய வீரமும், செங்கோன் முறைமையும் இவரால் நன்கு கூறப்பெற்றுள்ளன; இவர்பெயர் குறுங் கோளியூர்கிழாரெனவும் வழங்கும்; இவர் பாடல்களுட் சிறந்த பகுதிகளின் கருத்துக்கள் வருமாறு :-(1) ‘அரச ! ஐம்பூதங்களை அளந்தறிந்தாலும் அறியலாகும் ; உன்னுடைய அறிவு முதலியன அளந்தறிதற்கரியன’; (2) ‘சோற்றை ஆக்குந் தீயாலும் வெயிலாலும் உண்டாகும் வெம்மையை யன்றி உன் குடைநிழலில் வாழ்வோர்க்கு வேறு வெம்மையில்லை’; (3) ‘இந்திரவில்லை யன்றி வேறுகொலைவில்லையும் கலப்பையை யன்றி வேறு படைக்கலங்களையும் உன் நாட்டார் அறியார்’; (4) ‘வயாவுற்ற மகளிர் விரும்பியுண்பாரே யன்றிப் பகைவர் நின் மண்ணை ஒரு பொழுதும் நுகரார்’ (5) ‘உன்னைப் பாடிய நா வேறொருவரையும் பாடாதபடி கொடுக்கும் வண்மையை உடையாய் நீ’; (6) ‘எல்லா வகையாலும் உன் நாடு தேவருலகம் போல்வது’.

குன்றூர்கிழார் மகனார் :-இவர் வேளாளர்; நீர் நிறைந்த வயல்களின் இடையேயுள்ள ஓரூரின் மதிலுக்குக் கடலின் இடையேயுள்ள புறமுலர்ந்த கப்பலை உவமை கூறியிருக்கின்றனர். இவராற் பாடப்பட்டோன் போந்தையென்னும் நகரின் தலைவனான நெடுவேளாதனென்பான்.

கூகைக் கோழியார் :-மயானத்தின் இயல்பை, பழைய மரங்களின் பொந்திற் பிறர் திடுக்கிடும்படி சுட்டுக்குவியென்று ஒலித்துக் கொண்டிருக்கும் கூகைக்கோழிகள் நீங்காதது என்னும் கருத்துப்பட, “முதுமரப் பொத்திற் கதுமென வியம்பும், கூகைக் கோழியானாத், தாழிய பெருங்காடு” (364) என்றமையின், இப்பெயர் இடப்பட்ட தென்று தெரிகின்றது.

கூடலுார்கிழார் :-இவர் மலைநாட்டின் கண்ணதாகிய கூடலுாரை இருப்பிடமாக உடையவர் ; வேளாண்மரபினர் ; இவருடைய பாடல்கள் இன்சுவையைத் தருபவை ; ஒரு விண்மீன் வீழ்ச்சியைக் கண்டு கோச் சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை என்னும் அரசன் இன்னநாளில் இறப்பானென்று முதலில் நிச்சயித்திருந்து அவ்வாறே அவன் இறந்ததுகண்டு ஒருவாற்றானும் பிரிவாற்றாது வருந தினாரென்று, “ஆடியலழற்குட்டத்து” (229) என்னும் பாடலாலும் அதன் பின்னுள்ள வாக்கியங்களாலும் தெரிதலால், இவர் கணிதத்திலும் வல்லவராகக் கருதப்படுகிறார்; இவர் மேற்கூறிய அரசனால் மிக ஆதரிக்கப் பெற்றவர்; அவன் வேண்டுகோளால் ஐங்குறுநூறென்னும் தொகை நூலைத் தொகுத்தவர் இவரே; ஐங்குறுநூற்றின் இறுதி வாக்கியத்தில் ‘புலத்துறை முற்றிய கூடலுார் கிழார்’ என ஆன்றோராற் சிறப்பித்துக் கூறப் பெற்றிருத்தலின், இவருடைய பெரும்புலமை நன்கு வெளியாகின்றது. இவர் காலத்துப்புலவர்கள் குறுங்கோழியூர்கிழார், பொருந்தில் இளங்கீரனார் என்பவர்கள். முதுமொழிக்காஞ்சியை இயற்றிய மதுரைக்கூடலுார் கிழார் என்பவர் வேறு; இவர் வேறு. இவரியற்றிய பாடல்கள் - 4: குறுந். 3; புறநா. 1.