பக்கம் எண் :

628

குடபுலவியனார் :-போர்க்களத்தின் இயல்பைப் பாடுதலில் இவர் ஆற்றலுடையவர்; சினவாதபடி அரசனுக்கு இவர் தருமங்களைக் கூறும் இயல்பு யாரும் கற்றுக்கோடற்குரியதே. “உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத் தோரே” என்பது இவர் வாக்கு. இவராற் பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன்; இவர்காலத்துப் புலவர் : அவனைப் பாடிய கல்லாடர் முதலியோர்.

குடவாயிற் கீரத்தனார் :-குடவாயிலென்பது சோழநாட்டிலுள்ளதும் சோழர்களின் தலைநகராகவிருந்ததும் தேவாரம் பெற்ற சிவஸ்தலமுமான ஓரூர்; “தண்குட வாயி லன்னோள்”, “கொற்றச் சோழர் குடந்தை வைத்த, நாடுதரு நிதியினுஞ் செறிய, வருங்கடிப் படுக்குவள்” (அகநா. 44, 60) , “தேர்வண் சோழர் குடந்தை வாயில்” (நற். 379) என்பவற்றால் அவ்வூரின் பெருமையை இவர் புலப்படுத்தியிருக்கின்றனர்; புலவர்கள் தம்மூர்ப்பெயர் முதலியவற்றை ஒருவகையாகத் தம்முடைய பாடல்களில் தெரிவித்தல் மரபு; ஒல்லையூர்கிழான்மகன் பெருஞ்சாத்தன் இறந்த பின்பு அவனுடைய வண்மையைப் பாராட்டியும் இரவலர் வருந்துதலை ஒருவகையாகப் புலப்படுத்தியும் இவர் பாடிய செய்யுள் படிப்பவர் உள்ளத்தை உருகச் செய்யும்; இன்னும் சேரனுடைய தொண்டி, பாண்டியரின் கூடல்நகர், கொற்கைத்துறை, சோழரின் உறையூரென்பவை இவர் பாடலிற் பாராட்டப் பெற்றிருத்தலின், மேற்கூறிய பெருஞ்சாத்தனையன்றிச் சேரர் முதலிய முடிமன்னர் மூவராலும் நன்னனாலும் இவர் ஆதரிக்கப் பெற்றவரென்று தெரிகின்றது; பெரும்பாலும் இவர் பாடல்களில் வந்துள்ளது பாலைத்திணை; இவரியற்றிய பாடல்கள்-18: அகநா. 10; குறுந். 3; நற். 4; புறநா. 1.

குண்டுகட்பாலியாதன் :-குண்டுகண் - ஆழமான கண்; பாலி - ஓரூர்; இவருக்கு இப்பெயர் சினையாலும் இடத்தாலும் வந்தது; பகைவர் தருந் திறைப் பொருள்களை அரசர் இரவலர்க்குக் கொடுத்துவிடும் வழக்கம் பண்டைக்காலத்தில் உண்டென்பது இவர் பாடலாலும் தெரியவருகின்றது; சேரமான் சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதனுடைய வண்மையைப் பாராட்டி, இவர் கூறியிருக்கும் அருமைச் செய்யுள் (387) மிகப் பாராட்டற்பாலது; இவர் பாடிய பாடல்கள் - 2 : நற். 1; புறநா. 1.

குளம்பாதாயனார் :-இவர் பாடலில் வளையல் களைந்த மகளிர் கைகளுக்குப் பட்டை நீங்கிய மூங்கில் உவமை கூறப்பெற்றுள்ளது.

குறமகள் இளவெயினி :-இவருக்கு இப்பெயர் சாதியால் வந்தது; குறவர் தலைமகனாகிய ஏறைக்கோனை, “எம்மோன்” (157) என்று இவர் சொல்லியிருத்தலும் இதனை வலியுறுத்தும்; “தமர்தற் றப்பி னதுநோன் றல்லும், பிறர்கை யறவு தானா ணுதலும், படைப்பழி தாரா மைந்தினனாகலும் வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்,.......ஏறைக்குத் தகுமே” என அச்செய்யுளில் இவர் விதந்திருக்கும் அவனுடைய அருமைக் குணங்கள் அறிதற்பாலன.