காவட்டனார் :-இப்பெயர் கானட்டனாரெனவும் வழங்கும்; இவர் பாடலில் வந்துள்ள ‘வசைவு நிற்கு மிசைவு நிற்கும்’ என்பது முதலிய அரிய வாக்கியங்கள் அறிந்து கோடற்பாலன; இவர் செய்த பாடல்கள் - 2; அகநா. 1; புறநா. 1. இவராற் பாடப்பட்டோன் அந்துவன்கீரன். காவற்பெண்டு :-.இவர் சோழன் போர்வைக்கோப் பெருநற் கிள்ளியின் செவிலித்தாயென்று தெரிகிறது. காவற்பெண்டு - செவிலித்தாய். இவர் பெயர் காதற்பெண்டு எனவுங் காணப்படுகின்றது; தம் மகன் போர்செய்தற்குச் சென்றானென்னும் பகுதி இவர் வீரக்குடியிற் பிறந்தவரென்பதைப் புலப்படுத்தும். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் :-இப்பெயர் காரிக் கண்ணனாரெனவும் வழங்கும்; இவருக்கு இப்பெயர் உறுப்பான் வந்தது போலும்; காரி - கரிக்குருவி. இவர் வணிகர்; இதனை, “ஊரும்பேரும்” (தொல். மரபு. சூ. 74, பேர்.) என்பதன் விசேடவுரையால் உணர்க; இவர் வாக்கிற் காவிரி கடலொடு கலக்கும் சங்கமுகத்துறை கூறப்பெற்றுள்ளது (அகநா. 123) . பாண்டியனுக்குத் திருமாலையும் அப்பாண்டியனும் சோழனும் ஒருங்கிருந்தபொழுது அவர்களுக்குக் கண்ணன் பலதேவரிருவரையும் உவமை கூறியிருத்தலின், இவர் திருமாலடியவராகக் கருதப்படுகின்றனர். மேற்கூறிய அரசருக்கு ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்று இவர் கூறும் பகுதியும், பிறவும் இன்பத்தைத் தருவன. அயனே திருவள்ளுவராக வந்து திருக்குறளைத் தந்தானென்றதனால், அந்நூலின்பால் இவர்க்குள்ள நன்மதிப்பு வெளியாகும். இவராற் பாடப்பட்டோர் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்ற னென்பார். இவரியற்றிய பாடல்கள் - 9 : அகநா. 2; குறுந். 1; திருவள். 1; புறநா. 5. குட்டுவன் கீரனார் :-குட்டுவன் - குட்டநாட்டில் உள்ளவன்; கீரனாரென்பது இவரது இயற்பெயர். கீரனாரென்னும் பெயருள்ள புலவர் சிலர் இருத்தலின் இவர் பெயர்க்குத் தேயப்பெயரை அடைமொழியாக்கினர் போலும்; சிறந்த உபகாரியாகிய ஆய்அண்டிரன் தன் உரிமை மகளிரோடு தேவலோகத்தை அடைந்தமையால் புலவர்கள் மிக்க பசியையுடையவர்களாகி அயல்நாடு செல்லுவதாக வருந்திக் கூறியிருத்தலின் இவர் அவனிறந்த பின்பும் இருந்தவரென்று தெரிகின்றது.
|