கழைதின் யானையார் :-இவர் தைரியமும் கம்பீரமுமுடையவர்; “ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர், ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று, கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர், கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று” என்பது இவருடைய வாக்கிற் சிறந்த பகுதி. இவராற் பாடப்பட்டோன் வல்விலோரி. கள்ளில் ஆத்திரையனார் :-கள்ளில் என்பது தொண்டை நாட்டி லுள்ளதும் ஸ்ரீ ஞானசம்பந்தர் தேவாரம் பெற்றதுமான ஒரு சிவஸ்தலம். ஆத்திரையன் - அத்திரிகுலத்திற் பிறந்தவன்; இவரது இப்பெயர் குடிப்பெயர்; இதனால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்: நன்றியறிவு முதலிய உத்தம குணத்தினர். இவராற் பாடப்பட்டோர்: வேங்கடமலைக்குரிய தலைவனாகிய ஆதனுங்கனும், ஆதியருமனுமாவர். இவர் செய்த பாடல்கள் - 3 : குறுந். 1 ; புறநா. 2. காக்கைபாடினியார் நச்செள்ளையார் :-இவர் பெண்பாலார். ஆடு கோட்பாட்டுச் சேரலாதனென்னும் அரசன்மீது பதிற்றுப்பத்துள் ஆறாம்பத்தைப் பாடி, அணிகலனுக்கென்று ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் பரிசுபெற்றவர்; நச்செள்ளையாரென்பது இவரது இயற்பெயரென்பதும், குறுந்தொகையில், “திண்டேர் நள்ளி கானத் தண்டர், பல்லா பயந்த நெய்யிற் றொண்டி, முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ, றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி, பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு, விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” என்னும் 210-ஆம் பாட்டில், காக்கை கரைந்தமையைப் பாராட்டிக் கூறிய அருமைபற்றிக் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் ஆன்றோரால் இவர் பெற்றனரென்பதும் தெரிகின்றன ; பாடினி - பாடுபவள். செள்ளை யென்பது பெண்பாலார்க்கு இயற்பெயராகப் பண்டைக்காலத்து வழங்கிவந்தது போலும்; பதிற். 9-ஆம் பத்தின் பதிகத்தில் மையூர்கிழானுடைய மனைவியின் பெயர் அந்துவஞ்செள்ளை யென்று வந்திருத்தல் காண்க. மறக்குடி மங்கையின் இயல்பைவிளக்கி இவர் பாடிய, “படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே” (278) என்னும் புறப்பாட்டும், அப் பாடல் ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்பாலாருடைய பாக்களின் வரிசையிற் சேர்க்கப்பெற்றிருத்தலும் இவர் பெண்பாலாராதலை வலியுறுத்தும்; ‘ந’ என்பது சிறப்புப்பொருளைத் தருவதோரிடைச்சொல். ‘கலனணிக’ என்று அரசன் பொற்காசு முதலியன கொடுத்தானென்றது ஈண்டு அறியற்பாலது. இப்பெயர் சில பிரதிகளில் காக்கைபாடினியார் நச்சென்னையாரெனவும் காணப்படுகின்றது. காரிகிழார் :-இவர் வேளாளர்; இவருக்கு இப்பெயர் ஊரான் வந்தது; காரி யென்பது தொண்டை நாட்டிலுள்ளதோரூர் ; இப்பொழுது இராமகிரி யென்று வழங்கப்படுகின்றது; “பணியிய ரத்தைநின் குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” என்று அரசனை நோக்கிக் கூறியதனால், இவர் பரமசிவனை வழிபடுபவரென்று தெரிகின்றது; இவருடைய செவியறிவுறூஉவை உற்று நோக்குகையில் வைதிக வொழுக்கிற் சிறந்தவராகக் கருதப்படுகின்றனர்; இவருடைய சிவநேயத்தையும் பெயரையும் பார்க்கும் பொழுது, பெரியபுராணத்துக் கூறப்படும் காரிநாயனார், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் 52-ஆம் திருவிளையாடலில் வந்துள்ள காரியாரென்பவர்களுடைய ஞாபகம் வருகின்றது. இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|