கல்லாடனார் :-கல்லாடமென்னும் ஊரிலுள்ளவராதலின் இவர் இப்பெயர் பெற்றார்போலும்; “கல்லாடத்துக் கலந்தினி தருளி” (திருவா. கீர்த்தி) என்பதை நோக்குக. தொல்காப்பியத்திற்கு உரை செய்தவர்களுள் கல்லாடர் என்பவர் ஒருவர்; “ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்திற், குரையிடை யிட்ட விரகர்கல் லாடர்” என்னும் ஆன்றோர் வாக்காலுணர்க. அவர் வேறு, இவர் வேறு. இவருடைய பாடல்களில் பகைவருடைய நீர்நிலையைக் கெடுத்தல் கடிமரந்தடிதல் அவர் முரசைக் கைக்கொள்ளல் முதலிய தலைவர்களின் வீரச்செயல்களும், பகைவர் இறந்தபின் அவருடைய மனைவிமார் கைம்மைநோன்பு நோற்றிருத்தலும் கூறப்பெற்றுள்ளன. இவர் கிணைப்பொருநனாகத் தம்மைக் காட்டி அவன் செயல்களை முறையே சொல்லிச் செல்லும் மறக்களவழி ஏர்க்கள வுருவகமென்னுந் துறைகள் நயப்பாடுடையன. பகைவரைக் கொன்ற விடத்து அவருடைய பெண்டிர் தம் இளம்புதல்வரைப் பாதுகாத்தற் பொருட்டுத் தாம் இறந்துபடாமல் இலைகளைத் தின்று உயிர்வாழ்தலைப் புலப்படுத்தி இவர் கூறியிருக்கும் செய்யுள் யாருடைய மனத்தையுங் கனியச்செய்யும். 11-ஆம் திருமுறையிலுள்ள திருக்கண்ணப்பதேவர் திருமறமென்னும் நூலொன்று இவர் செய்ததாகக் கூறுவர். பன்னிரு பாட்டியலில் இவர் செய்தனவாகச் சில சூத்திரங்கள் காணப்படுதலால் இவராற் செய்யப்பட்ட பாட்டியலொன்றுள்ளதென்று கொள்வாரும் உளர். இலக்கணவுரைகளில் கல்லாடமாமூலர் என்று ஒரு தொடர் மொழி இருப்பதால் மாமூலரென்னும் புலவரோடு இவர் நட்புடையவரென்று சொல்லலாம். இவரியற்றிய பாடல்கள் - 16; அகநா. 7; குறுந். 2; திருக்கண்ணப்பர். 1; திருவள். 1; புறநா. 5. இவராற் பாடப்பெற்றோர்: அம்பர்கிழானருவந்தை, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், புல்லி, பொறையாற்றுகிழானென்பார். கழாத்தலையார் :-கழாத்தலை : ஓரூர், சேரமான்குடக்கோநெடுஞ் சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்து இறந்தது கண்டு இவர் மனம்வருந்திப் பாடினர்; இருங்கோவேளின் முன்னோரில் ஒருவன் இவரை இகழ்ந்தமையால் அவனது நகரமாகிய அரையமென்பது அழிவுற்றதென்று கபிலர் பாடியிருத்தலின், இவர் மேம்பாடு விளங்குகின்றது; 202; அன்றியும் கபிலருக்கு இவர் காலத்தால் முற்பட்டவரென்று தெரிகிறது. இவர் கூறும் உவமைகள் அழகுவாய்ந்தவை; இவராற் பாடப்பட்டோர் மேற்கூறிய அரசரும் சேரமான்பெருஞ்சேரலாத னுமாவர்.
|