கருங்குழலாதனார் :-இவர், சோழன் கரிகாற்பெருவளத்தான் இறந்தபின்பு அவன் பிரிவாற்றாது வருந்துதல் வாயிலாக அவனுடைய குணவிசேடங்களையும் அரிய செயல்களையும் அவனுரிமை மகளிர் அருங்கல முதலியவற்றைக் களைந்ததனையும் கூறியிருக்கின்றனர். கருவூர்க் கதப்பிள்ளை :-இவருடைய ஊர் கருவூர். இவர் பெயர் கருவூர்க் கந்தப்பிள்ளை என்றும் காணப்படுகிறது. கருவூர்க்கந்தப் பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் இவருடைய மகனார் என்று கருத இடமுண்டு. இவராற் பாடப்பட்டோன் பாண்டியனுடைய வீரனும் கந்தன் என்னும் பெயரினனுமாகிய நாஞ்சில்வள்ளுவனென்பான். இவர் பாடலால் அவனுடைய வண்மையும் வீரமும் நாஞ்சில்மலையின் வளனும் புலனாகின்றன; “துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன், நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்” என்பது இவர் அவனைப் பாராட்டிய பகுதி. இவர் செய்த பாடல்கள் - 3: குறுந். 2; புறநா. 1. பண்டைக்காலத்தும் தெய்வப்பெயரை மனிதர்க்கு இட்டு வழங்குதல் மரபாகத் தெரிதலாலும், மிளைக்கந்தன், மிளைப்பெருங்கந்தன் என்று வேறு தொகைநுால்களிற் புலவர்கள் பெயர் காணப்படுதலாலும் இப்பாடமும் பொருத்தமுடையதென்றே தோற்றுகிறது. கருவூர்க் கதப்பிள்ளைசாத்தனார் :-இப்பெயர் கருவூர்க் கந்தப் பிள்ளை, சாத்தனாரெனவும் காணப்படுகின்றது. இவருடைய ஊர் கருவூர். சாத்தனாரென்பது இவரது இயற்பெயர். ‘கதப்பிள்ளை’ என்பவர் இவருடைய தந்தை. சேரன் சேனாதிபதியும் குதிரைமலைத் தலைவனுமாகிய பிட்டங்கொற்றனை நோக்கி, “பாடுப வென்ப பரிசிலர் நாளும், ஈயா மன்னர் நாண, வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே” (168) என்று பாடியுள்ளார்; இப்பாடலிற் குதிரைமலையிலுள்ள குறவர்களின் இயல்பு நன்கு கூறப்பெற்றுள்ளது; ஏனைத்தொகைநுால்களிலும் இவர் செய்யுட்கள் உள்ளன: அகநா. 1; குறுந். 1; நற். 1. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் :-சதுக்கம் - நான்கு தெருக்கள் கூடுமிடம்; அங்கேயுள்ள தெய்வமாகிய ஒரு பூதத்தின் பெயர் இவருக்கு எய்தியதுபோலும்; கருவூரிற் சதுக்கப்பூதமொன்றிருந்தமை, “சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து, மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்” (சிலப். 28 : 147-8) என்பதனால் அறியலாகும்; வஞ்சி - கருவூர். முசுகுந்தனுக்குத் துணையாக இந்திரனால் அனுப்பப்பட்ட பூதமொன்று காவிரிப்பூம்பட்டினத்திற் சதுக்கத்திலிருந்து அந்நகரைப் பாதுகாத்துவந்ததாகச் சிலப்பதிகார முதலியன தெரிவிக்கின்றன. துறவுபூண்டிருந்த கோப்பெருஞ்சோழனை நோக்கி மனமுருகிப் பாடியவர்களுள் இவர் ஒருவர்.
|