(புறநா. 53) எனப் பொருந்திலிளங்கீரனாரும், “புலனழுக்கற்ற வந்த ணாளன். இரந்துசென் மாக்கட் கினியிடனின்றிப், பரந்திசை நிற்கப் பாடினன்”, “பொய்யா நாவிற் கபிலன்” (புறநா. 126, 174) என மாறோக்கத்துநப்பசலையாரும் பாடியவற்றைப் பார்க்கையில் இவருடைய மன வாக்குக் காயங்களின் தூய்மையும் அறம்புரி் கொள்கையும் பெரும்புலமையும் அன்புடைமையும் நட்பின் பெருமையும் நன்கு விளங்குகின்றன. இவராற் பாடப்பட்டோர் : அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன், சேரமான்மாந்தரஞ் சேரலிரும் பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வேள்பாரி, வையாவிக்கோப்பெரும்பேகன் என்பவர்கள். கொல்லிமலை, பறம்புநாடு, பறம்புமலை, முள்ளூர்மலை, முள்ளூர்க்கானமென்பவைகள் இவராற் பாராட்டப்பெற்றிருத்தலின், அவைகள் இவர் காலத்தில் விளக்கமுற்றிருந்தனவென்றும், இவர் பழகிய இடங்களென்றும் தெரிகின்றன. நட்பு, வண்மை, நன்றிமறவாமை என்பவைகளை இவருடைய செய்யுட்களிற் பரக்கக் காணலாகும். பழைய இலக்கண உரைகளில் வந்துள்ள ‘கபிலபரணர்’ என்பதனால் பரணர் என்பவருக்கும் “பின்னமில் கபிலன் றோழன் பெயரிடைக் காட னென்போன்” (திருவால. 20 : 1) என்னும் திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர் எண்ணப்படுகிறார். இவர் வேறு; தொகை நூல்களிற் காணப்படும் தொல்கபிலர் என்பவர் வேறு. வீரசோழியம், தொகைப்படலம், 6-ஆம் கட்டளைக்கலித்துறையுரையால், பரணருடன் இவர் வாது செய்தனரென்பது வெளியாகின்றது. 11-ஆம் திருமுறையில் வந்துள்ள மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச்செய்த கபிலதேவநாயனார் என்பவர் இவரேயென்று சிலர் கூறுவர். மேற்கூறிய திருவிளையாடற் புராணத்தில், இடைக்காடன் பிணக்குத்தீர்த்த திருவிளையாடல் : 11-ஆம் திருவிருத்தத்தில், “எனையந்தாதி சொன்னவன் கபிலன்” எனச் சிவபெருமான் கட்டளையிட்டருளியதாக வந்திருத்தல் காண்க. ‘முதலிற் கூறுஞ்சினையறி கிளவி’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதிய உரையால் கபிலராற் செய்யப்பெற்றுக் கபிலம் என்னும் பெயரிய நூலொன்று இருந்ததாகத் தெரிகிறது. இவருடைய விரிந்த வரலாற்றைப் பத்துப்பாட்டுப் பதிப்பிலுள்ள பாடினோர் வரலாற்றிற் காணலாம். கயமனார் :-உப்பங்கழியில் மலர்ந்த கருநெய்தற்பூ நீர் பெருகுந் தோறும் கயத்தில் முழுகும் மகளிருடைய கண்களை ஒத்துத்தோன்றுமென்று, “யாயாகியளே” (குறுந். 9) என்னுஞ் செய்யுளில் இவர் மொழிந்திருத்தலின், இவருக்கு இப்பெயர் அமைக்கப்பெற்றது போலும்; கயம் - நீர்நிறைந்த பள்ளம். இந்நூலுள் போரில் இறந்த மகனுடைய பிரிவாற்றாது வருந்தும் நற்றாயின் இயல்பைப் புலப்படுத்தி, “என் மகன், வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும், ஆனாது புகழு மன்னை, யாங்காகுவள்கொ லளிய டானே” (254) எனக் கண்டோர் கூறியதாக இவர் பாடியிருக்கும் நயம் படிப்பவர் மனத்தைக் கனிவிக்கும்; வேறு தொகை நுால்களிலும் (அகநா. குறுந். நற்.) இவருடைய பாடல்கள் பல காணப்படுகின்றன.
|