பாலைபாடிய பெருங்கடுங்கோ :-இவர் சேரருள் ஒருவர்; பாடப் பட்டோருள்ளும் ஒருவராவர்; இப்பெயர் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவெனவும் வழங்கும். பெருங்கடுங்கோ வென்பது இவரது இயற்பெயர். பாலைத்திணையின் இயல்பை நன்றாக விளக்கிப்பாடுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவராதலின் பாலைபாடியவென்னும் அடைமொழி இவர் பெயருக்குமுன் சார்த்தப் பெற்றது; இதனை ஏனைத்தொகைகளிற் (அகநா. குறுந். நற.்.) காண்க. “வருபடை தாங்கிய கிளர்தா ரகலம், அருங்கட னிறுமார் வயவ ரெறிய, உடம்புந் தோன்றாவுயிர்கெட்டன்றே, ... ... ...சேண் விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாயு ளானே” என ஒரு வீரனது ஆற்றலை இவர் பாராட்டியிருத்தல் கருதத்தக்கது. இவருடைய பிற வரலாறுகள் பாடப்பட்டோர் பெயர் வரிசையில் அறியலாகும். பிசிராந்தையார் :-இவர் பாண்டிநாட்டிலுள்ள பிசிரென்னும் ஊரினர்; கோப்பெருஞ்சோழனுடைய உயிர்த்தோழர்; அவன் துறந்து உயிர்நீத்தது கேட்டுத் தாமும் உடன் உயிர்நீத்தார்; “பிசிரோனென்பவென் னுயிரோம் புநனே” (215) என்னும் அவன் வாய்மொழியாலும், “கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடனுயிர் நீங்குமுரிமைத்தாய நட்பினைப்பயக்கும்” (குறள், 785, பரிமேல்.) , “இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம்” (தொல். கற்பு. சூ. 52, ந.) என்பவற்றாலும் இவை அறியலாகும். இவருடைய பாடல் மிக்க இன்பம் பயக்கும். இவர் நரை திரை மூப்புத்துன்பங்களின்றி வாழ்ந்தவர்; அதன்காரணத்தை, “யாண்டு பலவாக” என்னும் இவர் பாடல் புலப்படுத்தும். இவர்பெயர் இரும்பிசிராந்தையாரெனவும் வழங்கும்; இவராற் பாடப்பட்டோர் : கோப்பெருஞ்சோழன், பாண்டியன் அறிவுடைநம்பி. பிரமனார் :-நிலையாமையை இவர் நன்கு அறிந்தவர்; அதனை அறிவுறுத்துதலிலும் வல்லவர்; இது “பொதுமை சுட்டிய மூவ ருலகமும், பொதுமை யின்றி யாண்டிசி னோர்க்கும், மாண்ட வன்றே யாண்டுகள்” என்பதனால் விளங்கும். புல்லாற்றூர் எயிற்றியனார் :-இம்மை மறுமைப்பயன்களை இவர் நன்கறிந்தவர். கோப்பெருஞ்சோழன் தன் மக்களோடு போர்செய்தற்கு எழுந்தபொழுது பாடித் தடுத்த அரிய பாடலே இதனை விளக்கும்; புல்லாற்றூர் எயிற்றியாரெனவும் பிரதிபேதமுண்டு. இவராற் பாடப்பட்டோன் மேற்கூறிய கோப்பெருஞ்சோழன்.
|