பரணதேவநாயனாரென்பவர் இவரென்று சொல்லுவர். இவர் வேறு; வன்பரணர் வேறு. இரண்டு திருவிளையாடற் புராணங்களிலும் இவர் புகழப்பட்டிருக்கிறார். பதிற்றுப்பத்திலும் இந்நூலிலுமன்றி இவர் எட்டுத்தொகையில் இயற்றியனவாக உள்ள செய்யுட்கள் 61. இவர் பாடிய பாடல் ஒவ்வொன்றிலும் யாரையேனும் புகழாமலும் அக்காலத்து நிகழ்ந்த கதை எதையேனும் அமையாமலும் இரார். பாண்டரங் கண்ணனார் :-இவராற் பாடப்பட்டோன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. பாண்டியன் அறிவுடைநம்பி :-இவர் அரசர்; புதல்வர்களால் உண்டாகும் இன்பமானது இம்மையின்பம் எல்லாவற்றிலும் சிறந்த தென்பதை இவர், “படைப்புப்பல படைத்து” என்னும் பாடலால் நன்கு விளக்கியிருக் கின்றனர்; இவர் காலத்துப் புலவர் பிசிராந்தையார். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் :-இவன் கற்றோர்பால் மிக்க மதிப்புடையவனென்றும், கற்றலையே பெரும்பயனாக எண்ணியவனென்றும் இவன்பாடிய பாடல் விளக்கும்; சிலப்பதிகாரக் கதாநாயகனாகிய கோவலனைக் கொல்வித்தவன் இவனே. இதனை அந்நூல் மதுரைக்காண்டத்தின் இறுதிக்கட்டுரையால் உணர்க. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் :- இவன் பகைவரை வெல்லுதலிற் சிறந்தவனென்பதும், குடிகளைப் பாதுகாத்தலில் வன்மையுடையோனென்பதும், புலவர்களால் மதிக்கப்படுதலில் மிக்க நாட்டமுடையோனென்பதும், இரப்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்தலையுடையோனென்பதும் இவன் பாடியபாட்டால் விளங்குகின்றன. இவன் பாடப்பட்டவருள்ளும் ஒருவனாவன்; இவன் வரலாற்றை அவர் வரிசையிற் காண்க. பாரதம்பாடிய பெருந்தேவனார் :-பெருந்தேவனார் என்பது இவரது இயற்பெயர். இவர் தொண்டைநாட்டினர்; தமிழில் பாரதகதையை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிய ஆசிரியர்; அந்நூற் செய்யுட்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்திலும் யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றிலும் காணப்படும். இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர். நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பவற்றிலுள்ள கடவுள்வாழ்த்துக்களும், திருவள்ளுவமாலையிலுள்ள, ‘எப்பொருளும் யாரும்’ என்னும் வெண்பாவும் இவராலேயே செய்யப்பட்டுள்ளன. இவருடைய மற்ற வரலாறுகளை ஐங்குறுநூற்றிற் பாடினோர் வரலாற்றிற் காண்க. பாரிமகளிர் :-இவர்கள் பாரியென்னும் வள்ளலுடைய மகளிர்; இவர்களுள் ஒருத்தி, மழையில்லாத வறட்காலத்தில் இரந்துவந்த ஒரு பாணனை உண்பித்தற்குச் சோறுபெறாமையாற் பொன்னை உலையிற் பெய்து சோறாக்கிக் கொடுத்தாளென்று, “மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்துப், பாரி மடமகள் பாண்மகற்கு-நீருலையுட்., பொன்றந்து கொண்டு புகாவாக நல்கினாள், ஒன்றுறா முன்றிலோ வில்” (பழமொழி, 171) என்னும் வெண்பாவால் விளங்குகின்றது. இவர்கள் தம் தந்தை இறந்தபின்பு அவன் பிரிவாற்றாது வருந்திப் புலம்பிப்பாடினர்; அப்பாடல்கள் படிப்பவர் மனத்தைக் கலங்கச் செய்யும். பின்பு, தமது தந்தையின் தோழராகிய கபிலரால் பார்ப் பார்க்கு மணஞ்செய்து கொடுக்கப்பட்டார்கள்.
|