நெடுங்கழுத்துப் பரணர் :-போருக்குச் செல்வோர் வெள்ளுடை உடுத்துச் செல்லவேண்டுமென்பது இவர் பாடலால் தெரிகின்றது. இவருக்கு இப்பெயர் உறுப்பால் வந்ததுபோலும். நெடும்பல்லியத்தனார் :-பல்லியம் என்பது பலவாத்தியங்களைக் குறிக்கும். நெடிய பலவாத்தியங்களை உடைமையின், இவருக்கு இப்பெயர் வந்தது; இப்பெயருக்கேற்ப இவர், “நல்யாழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளைவிறலி” என்று கூறியிருப்பது நோக்கத்தகுந்தது. தலைவனது தூயதன்மையினால் பரத்தைமையுடைய தலைவன் நீங்கி ஒழுகுவதற்கு முனிவரது தூய்மையைக் கண்டு தூய்மையில்லாதார் அஞ்சி விலகியொழுகுவதை இவர் உவமையாகக் கூறியுள்ளார். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி்ப் பெருவழுதி. நொச்சி நியமங்கிழார் :-நொச்சிநியமம் - ஓரூர்; இக்காலத்து நொச்சியம் என்று வழங்கப்படுகிறது. இவர் வேளாண்மரபினர்; இவர் பாடல்கள் புறநானூற்றிலன்றி அகநானூற்றிலும், நற்றிணையிலும் காணப்படுகின்றன. நொச்சி நீயக் கிழாரென்று இப்பெயர் சில பிரதிகளில் உள்ளது. பக்குடுக்கை நன்கணியார் :-நன்கணியாரென்பது இவரது இயற்பெயர்; கணி - சோதிடம்வல்லவன்; உலகத்தை வெறுத்த ஞானியாதலால், இவர் பையையே உடையாகக் கொண்டிருந்தனரென்றும் அதுபற்றியே ‘பக்குடுக்கை’ என்னும் அடை இவர் பெயர்க்குமுன் கொடுக்கப்பட்டதென்றும் தெரிகின்றன; பக்கு - பை (ஐங்குறு. 271) . இவர் ஞானியென்பது இவரது செய்யுளால் அறியலாகும். பரணர் :-இவர் கபிலர்பால் மிக்க நேயமுடையவர். இது கபிலபரணர் என்னும் தொடரால் விளங்கும். இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடிக் கடல்பிறக்கோட்டிய கோச்செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன்மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றனர்; இதனை மேற்கூறிய பகுதியின் இறுதிக்கட்டுரையால் உணர்க. இவராற் பாடப்பட்டோர்: சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக்கோப் பெரும்பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனென்பார். “அமரர்ப் பேணியும்” என்னும் ஒளவையாருடைய பாட்டினால், அதியமான் நெடுமானஞ்சியை இவர் புகழ்ந்திருப்பதாகத் தெரிகின்றது. திருவள்ளுவமாலையிலுள்ள ‘மாலுங் குறளாய்’ என்னும் அரிய வெண்பா இவர் பெயரால் உள்ளது. இன்னும் இவரியற்றிய பாடல்கள் நற்றிணையிலும், குறுந்தொகையிலுமுண்டு; 11-ஆம் திருமுறையில் உள்ளதான சிவபெருமான் திருவந்தாதி யென்னும் பிரபந்தத்தின் ஆசிரியராகிய
|