திருத்தாமனார் :-இவராற் பாடப்பட்டோன் சேரமான் வஞ்சன். தும்பிசொகினனார் :-தும்பி - ஒருவனை வண்டு; சொகினம் - நிமித்தம். தும்பியை நோக்கிச் செய்திகூறிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றார்போலும்; தும்பிசேர்கீரனாரென்றும் பிரதிபேதமுண்டு; இவருடைய பாடல்கள் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் உள்ளன. துறையூர் ஓடைகிழார் :-இவர் வேளாளர்; இவர் வறுமையால் மிக்க துன்பமுற்றவரென்று தெரிகிறது. இப்பெயர் துறையூர் அரிசில்கிழாரெனவும் பிரதிகளிலுள்ளது. இவராற் பாடப்பட்டோன் ஆய் என்னும் வள்ளல். தொடித்தலை விழுத்தண்டினார் :-தாம் கூறும் முதுமைப்பருவ வருணனையில், ‘தொடித்தலை’ என்னும் அடையைத் தண்டிற்குக் கூறிய சிறப்பால், இவர் இப்பெயர் பெற்றார் : தொடி - பூண். இவராற் பாடப்பட்டோன் ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன். திருவள்ளுவ மாலையில் இவர் பெயரோடு பாடல் ஒன்றுள்ளது. தொண்டைமான் இளந்திரையன் :-இவன் காஞ்சிநகரத்திருந்த ஓரரசன்; பாடுதலில் வல்லவன்; கடியலுார் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படைத்தலைவன் இவனே; இவன் பெயர்க் காரணத்தைப் பெரும்பாணாற்றுப்படை, 37-ஆம் அடியின் விசேடவுரையால் உணர்க. இவன் காலத்துப் புலவர் மேற்கூறிய உருத்திரங் கண்ணனாரும் நக்கண்ணையாருமாவார். நரிவெரூஉத்தலையார் :-இவர், யாதுகாரணத்தாலோ தம் உடம்பு வேறுபட்டிருந்து சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலி ரும்பொறையைக் கண்டநாளில் அவ்வேறுபாடு நீங்கித் தம் உடம்பு பெற்றனர். இது, புறநானூற்றின் 5-ஆம் பாட்டின் பின்புள்ள வாக்கியத்தாலும், “புதுமை பெருமை” (தொல். மெய்ப். சூ. 7, பேர்.) என்பதன் விசேடவுரையாலும் விளங்கும். இவராற் பாடப்பட்டோன் : மேற்கூறிய சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்ரெுஞ்சேரலிரும்பொறை. இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும் திருவள்ளுவமாலையிலும் உள்ளன. நல்லிறையனார் :-இவர் வாக்கிற் காவிரி சிறப்பிக்கப் பெற்றுள்ளது. இவராற் பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன். இறையனார் வேறு; இவர் வேறு. நன்னாகனார் :-ஆறுகளில் தருமவோடமுண்டென்று இவர் பாடலால் தெரிகின்றது. இவராற் பாடப்பட்டோன் கரும்பனூர்கிழான். பரிபாடலில் இரண்டாம் பாட்டுக்கு இசைவகுத்தவர் இவரே. நெட்டிமையார் :-இவருக்கு இப்பெயர் உறுப்பால் வந்தது; நெடுமை இமையார். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி. அப்பாண்டியன் பகைவருடைய மதிலை அழித்து ஊரைப் பாழ்படுத்தினமையும், குதிரைகளைச் செலுத்தி அவர் வயல்களை அழித்தமையும், யானைகளால் அவர் குளங்களைக் கலக்கினமையும், அவன் செய்த தருமயுத்தமும் இவர் பாடல்களிற் கூறப்பெற்றுள்ளன.
|