சோழன் நல்லுருத்திரன் :-இப்பெயர் சோழன் நல்லுத்தரனெனவும் நல்லுத்திரனெனவும், உருத்திரனெனவும் பிரதிகளில் வேறுபட்டுள்ளது. இவன் முயற்சியுடையோரிடத்து மிக்க விருப்பும் முயற்சியில்லாரிடத்து மிக்க வெறுப்புமுடையானென்றும் சிறந்த நட்புடையவர்பாற் பழகும் இயல்பினனென்றும் இவன் பாடிய பாடல் தெரிவிக்கின்றது; கலித்தொகையில் முல்லைக்கலி இவன் பாடியது. சோழன் நலங்கிள்ளி :-இவன் பகைவரை அஞ்சாது, வெல்லும் ஆற்றலுடையவனென்றும் பொதுமகளிரைச் சிறிதும் விரும்பாதவனென்றும் இரப்போர்க்கு எவற்றையும் வரையாதுகொடுக்கும் வள்ளலென்றும் செங்கோலை உடையவனென்றும் இவன்பாடிய பாடல்கள் தெரிவிக்கின்றன. இவனுடைய மற்ற வரலாற்றைப் பாடப்பட்டோர் பெயர் வரிசையிற் காண்க. இவன் இயற்றிய பாடல்கள் புறநானூற்றில் இரண்டு. தண்காற் பூட்கொல்லனார் :-தண்கால் - பாண்டி நாட்டிலுள்ளதோரூர்; திருத்தண்காலென இக்காலத்து வழங்கும்; இது திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. பூண் கொல்லனார் - ஆபரணஞ் செய்யுந் தட்டார்; இவருக்கு இப்பெயர் ஊராலும் தொழிலாலும் வந்தது. இப்பெயர், தங்கால் தாட்கோவலனாரெனவும் தங்கால் பூட்கோவலனார் எனவும் காணப்படுகின்றது. இவர் பாடலில் இல்லறவொழுக்கம் நன்கு கூறப்பட்டுள்ளது. தாமப்பல்கண்ணனார் :-காஞ்சீபுரத்தின் பக்கத்தில் தாமல் என்று ஓரூர் உள்ளது; இவர் அந்தணர்; அரசரோடு நெருங்கிய பழக்கமுடையவர் ; தைரியம் மிக்கவர். இவராற் பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். தாயங்கண்ணனார் :-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனாரென்ற புலவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. இவருடைய பாட்டில், மயானத்தின் இயல்பும் அதன் தொன்மையும் விளங்கக் கூறப்பெற்றுள்ளன; “நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர், என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப, எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து, மன்பதைக் கெல்லாந் தானாய்த், தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே” (புறநா. 356 : 5-9) என்பதைப் பார்க்க; “முன்புறந் தான்காணு மிவ்வுலகை யிவ்வுலகிற், றன்புறங் கண்டறிவார் தாமில்லை - அன்பின், அழுதார்கணீர்விடுத்த வாறாடிக் கூகை, கழுதார்ந் திரவழங்குங் காடு” (பு. வெ.) என்னும் காடு வாழ்த்து மேற்கூறிய பகுதியை ஒத்து விளங்குதல் காண்க. இவர் பெயர் கதையங்கண்ணனா ரெனவும் பிரதியிற் காணப்படுகின்றது. தாயங்கண்ணியார் :-கைம்மை நோன்பு இவர் பாடலிற் கூறப் பெற்றுள்ளது.
|