பரும்பதுமனார்:- உயர்ந்த கருத்தமைந்த செய்யுள் செய்தலின் வல்லவர்: ஆரியக்கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடுவதும் அப்பொழுது பறை கொட்டுவதும் இவராற் கூறப்பட்டுள்ளன. “ஆலமரத்தின் பழங்களை நேற்று உண்டேமென்று நினையாமல் மீட்டும் அம்மரத்தின்பாற் செல்லுதலைத் தவிரா, புள்ளினங்கள்; இரவலரும் அத்தன்மையரே; தம்மை ஆதரிப்போர் செல்வமே இவர் செல்வம்; அவர் வறுமையே இவர் வறுமை” என்பது இவர் பாடலின் (199) பொருள். குறுந்தொகையிலும் நற்றிணையிலும் இவர் பாடல்கள் உள்ளன. பேய்மகள் இளவெயினி :- பேய்மகள் - தேவராட்டி; பூசாரிச்சி; பேயினது ஆவேசமுற்றவள். இந்த வகையார் இக்காலத்தும் அங்கங்கே உள்ளார். இப்பாட்டின் விசேடவுரையால், பேயே ஒரு மகள் வடிவங்கொண்டு பாடினாளென்று இந்நூலின் பழைய உரையாசிரியர் கருதியதாகத் தெரிகிறது. எயினி - எயினக்குலத்திற் பிறந்த மங்கை, வஞ்சி நகரின் வளமும் தலைவன் கொடையும் இவர் பாடலிற் கூறப்றெ்றுள்ளன. இவராற் பாடப்பெற்றோன் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ. பேரெயின் முறுவலார்:- முறுவலாரென்பது இவரது இயற்பெயர்; பேரெயில் - சோழநாட்டிற் காவிரியின் தென்பாலுள்ள தேவாரம் பெற்ற ஒரு சிவஸ்தலம்; இவருக்கு இப்பெயர் ஊராலும் உறுப்பாலும் வந்த பெயர் போலும். அன்றிப் பெரிய மும்மதில்களைத் தமது முறுவலாலெரித்த பரமசிவனுடைய திருநாமம் இவருக்கு இடப்பட்டதென்று கொள்ளினும் பொருந்தும்; முறுவல் - புன்னகை. நம்பி நெடுஞ்செழிய னென்பான், இம்மையில் தானடைதற்குரிய இன்பங்களை யெல்லாம் அடைந்தானென்றும் செய்யவேண்டிய நற்காரியங்களை யெல்லாம் வழுவின்றிச் செய்தானென்றும் இவர் அவனைப் பாராட்டியிருக்கும் பகுதிகள் அறியற்பாலன. இவர் செய்யுள் குறுந்தொகையிலும் உண்டு, பொத்தியார் :- இவர் கோப்பெருஞ்சோழனுடைய உயிர்த்தோழர்; இவருடைய ஊர் உறையூர்; அவன் வடக்கிருத்தற்குச் செல்லும்பொழுது உடன் சென்று அங்கே பிசிராந்தையார் வரக்கண்டு வியந்து (217) , “நீர் பிள்ளையைப் பெற்றபின்பு ஈங்குவாரும்” (222) என்று அவன் சொல்லக் கேட்டு மீண்டுவந்து உறையூர் புகுந்து அவனுடைய பிரிவாற்றாமல் வருந்திச் (220) சிலநாள் இருந்து, புதல்வன் பிறந்தபின் சென்று அவன் நடுகற் கண்டு வருந்தி ‘எனக்கு இடந்தா’ என்று கேட்டு அவன் இடங் கொடுக்கப்பெற்று வியப்புற்று அவனைப் பாடித் (221-3) தாமும் வடக்கிருந்து உயிர் நீத்தனர், அவனது பிரிவாற்றாமையால் இவர் அடைந்த வருத்தங்களும் அவனுடைய அருமைக் குணங்களும் இவருடைய செய்யுட்களால் விளங்கும். ‘கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம்’ (தொல். கற்பு. சூ. 53, ந.) என்பது இச்சரிதத்தைத் தெரிவிக்கின்றது. இவராற் பாடப்பட்டோர்; கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையாரென்பார்.
|