பொய்கையார்:- இவருடைய ஊர் மலைநாட்டிலுள்ள தொண்டி யென்பது; 48. இவராற் பாடப்பட்டோன் சேரமான்கோக்கோதை மார்பன்; சேரமான் கணைக்காலிரும்பொறையின் அவைக்களத்துப் புலவராக விளங்கியவர்; மூவன் என்பவனை அச்சேரமான் வென்று அவனது பல்லைப் பிடுங்கித் தன்னுடைய தொண்டி நகரத்துக் கோட்டை வாயிற் கதவிலே அழுத்திவைத்த செய்தி இவர் பாடலில் வந்துள்ளது; நற். 18. அச்சேரமானைப் போரில் சோழன் செங்கணான் வென்று சிறையில் வைத்துவிட்டபொழுது சோழன்மீது களவழிநாற்பது என்னும் நூலைப் பாடி அச்சேரமானை மீட்ட பேரருளாளர்; “செய்கையரிய களவழிப்பா முன்செய்த, பொய்கை யொருவனாற் போந்தரமோ” (பழம்பாடல்) , “களவழிக்கவிதை பொய்கையுரை செய்ய வுதியன் கால் வழித்தளையை வெட்டியர சிட்டபரிசும்” (கலிங்க.) , “இன்னருளின், மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப், பாதத் தளைவிட்ட பார்த்திபனும்” (விக்கிரமசோழனுலா) , “பொறையனைப் பொய்கை கவிக்குக், கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்” (குலோத்துங்க சோழனுலா) , “பொய்கை களவழி நாற்பதுக்கு, வில்லவன் காற்றளையை விட்டகோன்” (இராசராசசோழனுலா) என இச்செய்தி கூறப்பெற்றிருத்தல் காண்க. இவர் பாடியனவாக யாப்பருங்கலவிருத்தியிற் சில வெண்பாக்களும், பன்னிருபாட்டியலிற் சில சூத்திரங்களும் காணப்படுகின்றன. இவரே பொய்கையாழ்வாரென்பது சிலருடைய கொள்கை; ஆழ்வார்கள் மறந்தும் புறந்தொழாத பெரியாரென்பது வைஷ்ணவ சித்தாந்தமாதலால் அவர் வேறு, இவர் வேறென்று கொள்வதே மரபு. பொருந்திலிளங் கீரனார் :- “செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” எனக் கபிலருடைய கல்வி கேள்விகளை இவர் புகழ்ந்திருத்தலால் இவருடைய நற்குணம் வெளியாகின்றது; 53. இவராற் பாடப்பெற்றோன் சேரன் மாந்தரஞ் சேரலிரும்பொறை. பொன்முடியார்:- இவர் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையின் காலத்தவர்; தகடூர்யாத்திரை யென்னும் நூலில் இவராற் செய்யப்பட்ட சில செய்யுட்களுமுள்ளன; தொல். புறத்திணை சூ. 8, 12, ந. இவருடனிருந்த புலவர்; அரிசில்கிழார். இவராற் பாடப்பட்டோன் அதியமான் நெடுமானஞ்சி. திருவள்ளுவமாலையிலும் இவர் பெயரோடுள்ள செய்யுளொன்று காணப்படுகின்றது. மறக்குடியிற் பிறந்த முதியவள் கூற்றாக இவர்கூறிய, “ஈன்று புறந் தருதலென்றலைக் கடனே, சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே, வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே, நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறுவா ளருஞ்சம முருக்கிக், களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” (312) என்னும் பாடலால், ஒவ்வொருவருக்குமுரிய கடப்பாடுகள் இவை
|