பக்கம் எண் :

641

என்பது விளங்கும்; இவர் கூறும் உவமை இனிமை வாய்ந்தது; இது, “சிற்றூரரசனுடையதும் உழுத்தஞ்சக்கையுண்டதும் அலங்காரமில்லாதுமான குதிரை, பகைவருடைய சேனையைக் கடலில் அலைகளைப் பிளந்து செல்லும் தோணியைப்போல விரைந்து அஞ்சாமல் செல்லாநின்றது. பெருஞ்செல்வத்தையுடைய அரசரின் நெய்விரவிய கவளத்தை உண்டனவும் மிக்க அலங்காரமுள்ளனவுமான குதிரைகள் முருகன் கோயிலில் கலந்தொடாத மகளிரைப் போலப் போரில் சும்மா நிற்கின்றன” (299) என்பதனால் விளங்கும்.

மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார்;- அளக்கர்ஞாழ லென்பது ஓரூர். மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும் சொல். பாண்டிய அரசரால் முதலில் இவர் பாதுகாக்கப்பெற்றவர்; சுக்கிரன் வானத்தில் தென்பாற் காணப்படின் மழை குறையுமென்று இவரறிந்திருந்தவர்; 388 : 1-2. 15-6. இவராற் பாடப்பட்டோன் சிறுகுடிகிழான் பண்ணனென்பவன். ஏனைத்தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) இவருடைய பாடல்கள் காணப்படுகின்றன. இப்பெயர் ‘அளக்கர் ஞாழார்’ என்று பிரதிகளிற் காணப்படினும் அது பிழையென்று தோற்றுகின்றது.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்:- இவர் ஆடை விற்கும் வணிகர்; அறுவை - ஆடை. வேட்டனார் என்ற பெயர்க்காரணம் புலப்படவில்லை. “அரவுறை புற்றத் தற்றே நாளும், புலவர் புன்க ணோக்கா
திரவலர்க், கருகா தீயும் வண்மை, உரைசானெடுந் தகை யோம்புமூரே” (329) என்பது இவருடைய பாடற்பகுதி; ஏனைத் தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) , திருவள்ளுவமாலையிலும் இவர் பாடல்கள் காணப்படுகின்றன.

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் :- கௌசிகனாரென்பது இவரது இயற்பெயர்; ஒருமுனிவர் பெயர் இவருக்கு இடப்பட்டது. பகைவர் சேய்மையிலிருந்தே அஞ்சுதற்குரிய ஒளி தன்பால் அமையப் பெற்ற தலைவனுக்கு நல்லபாம்பு தங்கும் புற்றையும் கொல்லேறு திரிந்துலாவும் மன்றத்தையும் இவர் உவமை கூறியிருக்கின்றார்.

மதுரை ஓலைக்கடைக் கண்ணம்புகுந்தாராயத்தனார்:- ஓலை - ஓலையால் இயற்றப்பட்ட குடை; தாழை முதலியவற்றின் ஓலையுமாம். இதனால், இவர் வியாபாரஞ் செய்பவரென்று தெரிகிறது; இவர் பாடிய மகட்பாற்காஞ்சி இன்சுவையுடையது.

மதுரைக் கணக்காயனார்:- கணக்காயனார் - ஓதுவிப்பார்; “கணக்காயரில்லாத வூரும்” (திரி. 10) . இதனால், இவருடைய தொழில் இன்னதென்று விளங்கும்; திருவருளாற் கிடைத்த சங்கப்பலகையில் முதலில் ஏறி வீற்றிருந்தவரும் நல்லிசைப் புலவர்களின் நடுநாயகமாக விளங்கியவருமான நக்கீரனாருடைய அருமைத் தந்தையார் இவர். இதனாலேயே இவருடைய தவப்பயனும் கல்விப்பெருமையும் விளங்கும்; பகைவருடைய பெருஞ்சேனையைத் தனியே நின்று தடுக்கும் ஒரு வீரனை, “பெருங்கடற் காழி யனையன்”, “தொன்மைசுட்டிய வண்மையோன்” என்று இவர் பாராட்டினர்.