பக்கம் எண் :

644

மதுரைத் தமிழக்கூத்தனார்:- ஆரியக்கூத்து முதலியவற்றைப் போலத் தமிழ்மொழிக்கேயுரிய கூத்தாற் பெயர்பெற்றவர் இவர். இவருக்குக் கடுவன் மள்ளனார், நாகன்றேவனாரென இரு புதல்வருளர்; அகநா. 70, 164, 354.
இவர்பாட்டில் வந்துள்ள உவமையும் தலைவன் தலைவிகளுக்குரிய இல்லறமுறையும் அறிந்து இன்புறற்பாலன.

மதுரை நக்கீரர்:- நிலையாமையை இவர் எடுத்துக்காட்டி யிருக்குமுறை மிக அழகிது; 365. இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் ஆதரிக்கப் பெற்றவர்; கபிலருக்கும் வேள்பாரிக்கும் காலத்தாற் பிற்பட்டவர்; அகநா. 36, 78.

மதுரைப் படைமங்கமன்னியார் :- எயினனென்னும் ஓருபகாரியையும் அவனது ஊராகிய வாகையென்பதையும் இவர் பாராட்டியிருக்கிறார்.

மதுரைப்பூதனிளநாகனார் :- தன்னுடைய தறுகண்மையாற் பகைவருடைய சேனையை அஞ்சுவித்து வேறுபடுத்தும் ஒரு வீரனுக்குக் குடத்திலுள்ள பாலையெல்லாம் தயிராகத் திரிக்கும் சிறுபிரையை இவர் உவமை கூறியிருக்கின்றனர்.

மதுரைப் பேராலவாயார் :- சொக்கநாதக் கடவுள், ஒரு புலவராக வந்து சங்கப்புலவருடைய வழக்கை விடுவித்தபொழுது முதலில் அவர் பெயராக அமைந்திருந்த இப்பெயர் (திருவால. 15 : 13 - 9) , பின்பு அவர்களுள்
ஒருவராகிய இவருக்கு இடப்பட்டு வழங்கலாயிற்று; ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தினர் இவர். அவன் இறந்தபின்பு தானும் இறத்தற்குத் தீயிற் பாயும் அவன் மனைவியின் நிலைமையைப் பார்த்து இவர் கூறிய பாடல் (247) யாருடைய மனத்தையும் நெகிழ்விக்கும். இன்னும் இவர் செய்த பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் உண்டு; அகநா. நற்.

மதுரை மருதனிள நாகனார்:- இவராற் பாடப்பட்டோன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்; இவர் பாடலில், திரி புரவிசயமும், திருச்செந்தூரில் முருகக்கடவுள் எழுந்தருளிய துறைக் கண்ணுள்ள மணற்குவியல்களும் பாராட்டப்பெற்றுள்ளன. இறையனாரகப் பொருளுக்கு நல்லுரையியற்றியவர்களுள் இவருமொருவர். ‘உருத்திரசன்மன். . . . எல்லாரும் முறையே உரைப்பப் கேட்டு வாளாவிருந்து மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரோவழிக் கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்தி.......இருந்தான்’ (இறை. முதற் சூத்திரவுரை) என்பதனால், அவ்வுரையின் பெருமை விளங்கும். இவர் பாடல்கள் ஏனைத் தொகைகளிலும் (அகநா. குறுந். நா.) காணப்படுகின்றன.

மதுரை வேளாசான்:- வேள் - யாகஞ்செய்யுந் தொழிலின் பெயராகிய வேட்டலென்பதன் முதனிலை; ஆசான் - ஆசிரியன். ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் தூதுசெல்லுதற்குரிய னென்பது இவர் பாடலால் தெரியவருகின்றது.