மருதனிளநாகனார்:- இப்பெயர் மருதினிள நாகனாரெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோர் ; பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி, நாஞ்சில் வள்ளுவனென்பார். மருதக்கலியைப் பாடியவர் இவர்; “மருதனிள நாகன் மருதம்” என்பதனால் உணர்க. இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) காணப்படுகின்றன. மாங்குடிகிழார்:- இவராற் பாடப்பட்டோர்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வாட்டாற்றெழினியாதனென்பார். இவர் பாடலொன்றில் (24) எவ்வியென்னும் வேளினுடைய மிழலைக்கூற்றத்தையும் பழையவேளிர்களுக்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் மேற்கூறிய செழியன் கைப்பற்றினமை கூறப்பெற்றுள்ளது; இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் வந்துள்ளன; குறுந். நற். மாதி மாதிரத்தனார்:- இஃது இந்நூல் 186-ஆம் செய்யுளியற்றிய ஆசிரியர் பெயராகச் சில பிரதிகளிற் காணப்படுகின்றது. மார்க்கண்டேயனார்:- ஒரு முனிவர் பெயராகிய இஃது இவருக்கு இடப்பட்டது. இவரியற்றிய நூலைத் தலையாயவோத்தென்பர், (தொல் புறத்திணை. சூ. 20, ந.) ; மார்க்கண்டேயனார் காஞ்சி யென்று ஒரு நூற் பெயரும் ஒரு செய்யுளும் வழங்கும்; யா. வி,; யா. கா.; உரை, மாற்பித்தியார்:- இவர் பெண்பாலாரென்று தெரிகிறது, பெருஞ் செல்வத்தை நுகர்ந்த ஒருதலைவன் அச்செல்வத்தை வெறுத்துத் துறவு பூண்டு கடிய விரதங்கொண்டு நோற்றிருத்தல் இவர் பாடல்களிற் கூறப் பெற்றுள்ளது. மாறோக்கத்து நப்பசலையார்:- மாறோக்கம்-கொற்கையைச் சூழ்ந்ததொரு நாடு; ந - சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச்சொல். பசலை - கணவனைப் பிரிந்த மகளிருடைய நெற்றி முதலியவற்றில் உண்டாவதாகிய வேறுபட்ட நிறம்; “மணிமிடை பொன்னின் மாமை சாயவென், அணிநலஞ் சிதைக்குமார் பசலை” (நற். 304) , எனப் பசலையின் இயல்பை விளங்கக் கூறியிருத்தலின், இவர் இப்பெயர் பெற்றார்; சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடய போர் வென்றியையும் அவன் கொடைமுதலியவற்றையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவன் இறந்தபொழுது இவர் பாடிய பாடல் படிப்பவர் மனத்தை உருக்கும். மலையமான் திருமுடிக்காரியும் அவன் மகன் சோழியவேனாதி திருக்கண்ணனும் கபிலரும் இவராற் பாராட்டப்பெற்றோராவார். இவர் பெண்பாலாரென்று தெரிகிறது; இவர் இயற்றிய செய்யுளொன்று நற்றிணையில் உண்டு. முரஞ்சியூர் முடிநாகராயர்:- இப்பெயரினரொருவர் தலைச்சங்கத்தில் இருந்தனரென்று இறையனாரகப்பொருளின் முதற் சூத்திரவுரையால் தெரிகின்றது. இவராற் பாடப்பட்டோன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்.
|