மோசிகீரனார்:- மோசியென்பது ஓர் ஊர். மோசிகொற்றனார் இவ்வூரினரே. இவராற் பாடப்பட்டோர்; சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, கொண்கானங்கிழானென்பார். இவர் பெயர் மோசு கீரனாரெனவும் வழங்கும்; “நெல்லு முயிரன்றே நீருமுயிரன்றே, மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம், அதனால், யானுயிரென்பதறிகை, வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” என்பது இவருடைய பாடல்களுள் ஒன்று. மோசி சாத்தனார்:- இவர் செய்யுளிற் களவேள்வி ஒருவகையாக விளங்கக் கூறப்பெற்றுள்ளது. வடம நெடுந்தத்தனார்:- இவராற் பாடப்பட்டோன் நாலை கிழவன் நாகனென்பான். இவர் பெயர் வடநெடுந் தத்தனாரெனவும், வடமநெடுந் தத்தனாரெனவும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது. வடமவண்ணக்கன் தாமோதரனார்:- வண்ணக்கன் - நாணய பரிசோதகன்; இப்பொருள் நீலகேசியுரையிற் கண்டது. நோட்டக்கார னென்னும் பெயர் இப்பொருளில் இக்காலத்து வழங்கப்படுகின்றது. தாமோதரனாரென்பது கடவுள்பெயரால்வந்த இவரது இயற்பெயர். இவர் வடதிசையிலிருந்து வந்தவராக எண்ணப்படுகிறார். இவராற் பாடப்பட்டோன் பிட்டங்கொற்றனென்பான். வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்:- இவராற் பாடப்பட்டோன் தேர்வண்மலையன். அவனை நோக்கி இவர், “உழுத நோன்பகடழிதின்றாங்கு, நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே” என்கிறார்; அழி - வைக்கோல். இப்பெயர் வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாரெனவும் வழங்கும். வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்:- “தெண்கடல், முழங்கு திரை முழவின் பாணியிற் பைபயப், பழம்புண் ணுறுநரிற் பரவையினாலும்” (நற். 378) எனக் கடலலையின் ஒலிக்கு முழவின் ஒலியை உவமங் கூறிய சிறப்பால் இவர் பெயர்க்குமுன் ‘பேரி’ என்னும் அடை கொடுக்கப்பட்டது போலும். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனென்பான். அவனை நோக்கி, ‘நீயும் நின்புதல்வரும் நீடுவாழ்க’ என்று கூறும்பகுதி மிக்க நயமுடையது. இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் காணப்படுகின்றன; அகநா. குறுந். நற். வடமோதங்கிழார்:- இவருடைய பாடலிற் பகைவர் கைப்பற்றிச் சென்ற நிரையை மீட்டுவந்த வீரனொருவன் தன் உயிர்விட்ட சிறப்பும் அவனுக்காக நடப்பட்ட வீரக்கல்லில் அவன் தெய்வமாக வாழ்ந்ததும் கூறப்பெற்றுள்ளன. இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு செய்யுள் காணப்படுகின்றது.
|